அடிப்படை வசதிகள்

January 11, 201911 days 670
 • அரசியல் பிரச்னைகளும், பங்குச் சந்தை தொடர்பான பொருளாதாரப் பிரச்னைகளும் பெறுகின்ற முக்கியத்துவமும் முன்னுரிமையும் சாமானிய இந்தியனின் அடிப்படைப் பிரச்னைகள் பெறுவதில்லை. இந்தியா மிகப்பெரிய வளர்ச்சியை கட்டமைப்பு ரீதியாக அடைந்திருந்தாலும்கூட, இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சி பெரும்பான்மையான அடித்தட்டு மக்களை முறையாகவும் முழுமையாகவும் சென்றடையவில்லை என்பதுதான் உண்மை.
ஆய்வு
 • உலக சுகாதார நிறுவனம் நடத்திய ஆய்வு ஒன்று தெற்காசியா குறித்து சில திடுக்கிடும் புள்ளிவிவரங்களைத் தெரிவிக்கிறது. கடந்த ஆண்டில் தெற்காசியாவில் பிறந்த 10 லட்சத்துக்கும் அதிகமான சிசுக்கள், பிறந்த ஒரு மாதத்திற்குள் இறந்துவிட்டிருப்பதாகத் தெரிவிக்கிறது அந்தப் புள்ளிவிவரம்.
 • உலக அளவில் காணப்படும் சிசு மரணத்தில் 40 சதவீதம் இந்தியாவும், இந்தியாவைச் சுற்றியுள்ள நாடுகளையும் உள்ளடக்கிய தெற்காசியாவில்தான் காணப்படுகிறது என்பது மிகவும் அதிர்ச்சி தரும் தகவல்.
 • தெற்காசியாவில் இன்னும் பல இடங்களில் அடிப்படை சுகாதார நிலையமோ, மருத்துவமனைகளோ இல்லாமல் இருக்கின்றன. போதுமான மருத்துவர்கள் இல்லை. மருத்துவமனை செல்வதற்கு நோயாளிகளுக்கு போதுமான வாகன வசதி இல்லை. இந்த நிலை தொடர்ந்தால், அடுத்த ஆண்டு சிசு மரணத்தின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எச்சரிக்கிறது உலக சுகாதார நிறுவனத்தின் அந்த ஆய்வு.
 • இந்தியாவைப் பொருத்தவரை, 1947 ஆகஸ்டு 15-ஆம் தேதி நாம் விடுதலை பெற்றபோது இருந்த நிலையிலிருந்து பெரிய அளவில் முன்னேற்றம் கண்டிருக்கிறோம் என்பதில் ஐயப்பாடில்லை. உடுக்க உடையில்லாமல் பசியோடும், இருப்பதற்கு கூரை இல்லாமலும் கோடிக்கணக்கானோர் இந்திய கிராமங்களில் இருந்த நிலை இப்போது இல்லை. முற்றிலுமாக அனைவருக்கும் உணவு, உடை, இருப்பிடம் என்னும் இலக்கை நாம் அடையாவிட்டாலும்கூட, வறுமைக் கோட்டிற்குக் கீழே இருக்கும் பெரும்பான்மையான அடித்தட்டு மக்களின் அடிப்படைத் தேவைகளை ஓரளவுக்கு நம்மால் ஈடு செய்ய முடிகிறது.
மக்களின் திறன்
 • உச்சகட்ட வறுமை என்பது அநேகமாக இல்லாத நிலைமையை எட்டியிருக்கிறோம். 2025-க்குள் உச்சகட்ட வறுமை நிலைமையில் இருப்பவர்களின் எண்ணிக்கை ஒரு சதவீதத்துக்கும் கீழ்தான் காணப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மக்கள்தொகை அதிகரிப்பும் கணிசமாகக் குறைந்திருக்கிறது. பிறப்புக்கும் இறப்புக்கும் இடையேயான விகிதம், அநேகமாக சமநிலையை அடைந்துவிட்டிருக்கிறது.
 • இந்தியாவின் பல மாநிலங்களில் மக்கள்தொகைப் பெருக்கம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருக்கிறது என்பது மட்டுமல்ல, குறையவும் தொடங்கியிருக்கிறது.
  இவையெல்லாம் இருந்தாலும்கூட, 2019-இல் நாம் அடியெடுக்கும்போது நம்மை எதிர்கொள்ளும் சவால்கள் மிகமிக அதிகம். அவை வித்தியாசமானவையாகவும் இருக்கின்றன. வறுமைக்கோட்டிற்குக் கீழே உள்ளவர்களுடைய எண்ணிக்கை குறைந்திருக்கிறது என்று நாம் மகிழ்ச்சி அடைந்தாலும், இந்தியாவின் 95 சதவீத மக்கள்தொகையினர் குறைந்த வருவாய்ப் பிரிவினர்தான் என்பதை நாம் உணர வேண்டும்.
 • அவர்களின் செலவழிப்புத் திறன் அதிகரித்திருக்கிறது, அவ்வளவே!
  குழந்தைகளுக்கான இலவச சத்துணவுத் திட்டமும், அடித்தட்டு மக்களுக்கான நலத்திட்டங்களும் பெருமளவில் பசிக் கொடுமையை அகற்றி இருக்கின்றன. அதேநேரத்தில், எந்த அளவுக்கு குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்கின்றன என்கிற கேள்வியை எழுப்பும்போது, பாராட்டும்படியான நிலையில் நாம் இல்லை.
 • இந்தியாவில் அடித்தட்டு மக்களின் குழந்தைகள் ஊட்டச்சத்து இல்லாமலும், ரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால், அவர்களுடைய உடல் வளர்ச்சியும் சிந்திக்கும் திறனும் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பதாக சமூக ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.
நிதி ஒதுக்கீடுகள்
 • மத்திய – மாநில அரசுகளின் நிதி ஒதுக்கீடுகள் முறையாக போய்ச் சேராத நிலையில், இந்தியாவின் சுகாதாரத் தேவை தனியார் துறையைச் சார்ந்து இருக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. அதன் விளைவாக ஏற்படுகின்ற மருத்துவச் செலவுகளை சாமானிய அடித்தட்டு மக்களால் எதிர்கொள்ள முடியாத நிலையில் அவர்கள் பாதிக்கப்படுகிறார்கள்.
 • ஆண்டுதோறும் ஐந்து கோடிக்கும் அதிகமானோர் மருத்துவச் செலவுகளால் கடனாளிகளாவதாக ஓர் ஆய்வு தெரிவிக்கிறது. குடும்பத்தில் ஏற்படும் மருத்துவச் செலவு சேமிப்புகளை கரைத்து விடுவதுடன் பலரையும் கடனாளியாக்கி விடுவதால், போதுமான ஊட்டச்சத்து குழந்தைகளுக்குக் கிடைக்காத நிலை ஏற்படுகிறது.
 • மருத்துவச் செலவினங்களால் வறுமைக்குத் தள்ளப்படுகின்ற குடும்பங்கள் அதிலிருந்து மீள முடியாமல் தொடர்வதுதான் அவர்களுடைய வாழ்க்கைத்தரம் உயராமல் இருப்பதற்குக் காரணம் என்று கண்டறியப்பட்டுள்ளது.
  பேறுகால மரணம், சிசு மரணம், தொற்று நோய் ஆகியவை ஒருபுறம் இந்தியாவை எதிர்கொள்கின்றன என்றால், இன்னொருபுறம் பணக்காரன் – நடுத்தர வர்க்கம் – ஏழை என்கிற வர்க்க பேதம் இல்லாமல் தொற்று அல்லாத நோய்களான ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், மன அழுத்தம் போன்றவை இந்தியாவின் இளைய சமுதாயத்தின் உற்பத்தித் திறனைப் பாதிக்கின்றன.
 • ஆயூஷ்மான் பாரத் உள்ளிட்ட காப்பீட்டுத் திட்டங்களும், உதவிகளும் ஓரளவுக்கு மட்டும்தான் இந்திய சமுதாயம் எதிர்கொள்ளும் சுகாதாரப் பிரச்னையை ஈடு செய்ய முடிகிறது.

நன்றி: தினமணி