அரசு திட்டங்களும் மக்கள் ஆதரவும்

December 5, 201813 days 370
 • மன்னன் பதினாறாம் லூயி தன் அமைச்சனைப் பார்த்து, ஏன் மக்கள் அடிக்கடி போராட்டம் செய்கிறார்கள்? என்று கேட்டான். நாம் கருவூலத்திலிருந்து மக்களுக்கு பனிப் பாறைகளைப் போல நிதியை அனுப்புகிறோம். ஆனால், மக்களின் கைகளுக்கு ஓரிரு சொட்டு நீரே கிடைக்கிறது என்று அலுவலர்களின் ஊழலை காட்சிப் படுத்தினான் அமைச்சன்.
புரட்சி
 • சிறிது காலத்திற்குப் பிறகு வெடித்த புரட்சியில் மன்னனும் அவன் மனைவியும் களத்தில் தலை துண்டிக்கப்பட்டனர்.
 • சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் வேண்டி, புரட்சி மூலம் முடியாட்சியை சாய்த்த அதே பிரெஞ்சு மக்கள், 17-ஆவது வயதில் பிரெஞ்சு பீரங்கிப் படையில் சேர்ந்து, தனது தீரத்தால் தளபதியாகி, நாடுகள் பலவற்றை வென்ற போனபார்ட் நெப்போலியனை அரசுக் கட்டிலில் அமர வைத்து முடி சூட்டி அழகு பார்த்தனர்.
 • இது ஒரு விநோதமான நிகழ்ச்சி என்றாலும் மக்களின் காரணம் சரியானது. நெப்போலியன் சிறந்த வீரன் மட்டுமல்ல, நல்ல நிர்வாகியும்கூட. அரசின் எல்லா துறைகளிலும் சீர்திருத்தம் செய்து முறையாக வரி வசூல் செய்தான். அவன் இட்ட அடித்தளத்தால்தான் இன்றைக்கு பிரெஞ்சு நாடு உலக வல்லரசுகளில் ஒன்றாகத் திகழ்கிறது.
அரசு திட்டங்கள்
 • நம் நாட்டிலும், மத்திய-மாநில அரசுகள், மக்கள் நலனுக்காக பல திட்டங்களை வரைகின்றன. அவற்றைச் செயல்படுத்த நிதியையும் அளிக்கின்றன. ஆனால், திட்டங்கள் வெற்றி பெறுவது இல்லை.
  நகர்ப்புறங்களில் மக்கள் நடப்பதற்காக நடைபாதைகள் அமைக்கப்படுகின்றன. ஆனால், பாதசாரிகள் பயன்படுத்த இயலாத அளவிற்கு கடைகள், குடியிருப்புகள் பரவியுள்ளன. அவ்வப்போது சட்ட நடவடிக்கை பாய்ந்தாலும் பயனில்லை.
 • இரு சக்கரத்தில் பயணிக்கும் இருவரும் தலைக்கவசம் அணிதல் சட்டப்படி கட்டாயம். இது உயிர் காக்கும் நல்ல திட்டம். ஆனால், ஒரே வாகனத்தில் தலைக்கவசம் இன்றி மூவர் பயணிப்பது இன்றும் குறையவில்லையே!
 • அரசு ஊழியர் எவரும் எந்த ஒரு பணிக்காகவும் கையூட்டு பெறக் கூடாது. இது ஒரு சட்டம். ஆனாலும் என்ன? சாதாரண வாகன ஆய்வாளர் ஒருவரின் வங்கிப் பெட்டகத்தில் 13 கிலோ தங்கம், பெருமளவு பணம் காணக் கிடக்கிறதே. தலைமைச் செயலகத்திலும், தலைமைச் செயலாளர் இல்லத்திலும் சோதனை நடைபெறுகிறதே!
  இரண்டாவது உலகப் போர் நடைபெற்ற சமயத்தில் லண்டனில் வின்ஸ்டன் சர்ச்சில் ஒரு திட்டம் வகுத்தார்.
 • போர் விமானங்களுக்கு எரிபொருளான பெட்ரோல் தேவைப்படுவதால், மக்கள் தங்களிடம் இருப்பதை தரச் சொல்லி ஒரு வேண்டுகோள் வைத்தார்.
  எல்லாரும் தம் நாடு போரில் வெல்ல வேண்டுமென்பதற்காக, தங்களிடமிருந்த பெட்ரோலைத் தந்தனர். சட்டம் போடாமலேயே திட்டம் பலித்தது. அதனால்தான் அந்நாட்டில் முடியுடை மன்னரும் போற்றப்படுகிறார். குடியுடை மக்களும் நாட்டை ஆளுகின்றார்கள்.
நீதிபதியின் கருத்து
 • சென்னையின் மக்கள்தொகை சுமார் 80 லட்சம். வாகனங்களின் தொகை சுமார் 3 லட்சம். சாலை விரிவாக்கப் பணிகளுக்கு நிலத்தை கையபடுத்துவதில் இருந்து, விமான நிலைய விரிவாக்கம் வரை திட்டம் வெற்றி பெற சட்டம் பல இடர்ப்பாடுகள்.
  அண்மையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ஒருவர், தமிழ்நாட்டில் பல்வேறு நீதிமன்றங்களில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு, பிணையில் வெளி வர முடியாத வகையில் தேடப்படுவோர் 40 ஆயிரம் பேர்.
 • இவர்களில் 10,956 குற்றவாளிகளே இதுவரை பிடிபட்டு உள்ளனர் என்றார். நீதிபதிக்கு பதிலளித்த காவல்துறைத் தலைவர், சில குற்றவாளிகள் தந்தவை போலி முகவரிகள், சிலர் தலைமறைவாக வாழ்கிறார்கள், சிலர் வெளி நாட்டுக்குத் தப்பியோடி விட்டனர் என்று காரணம் சொன்னார்.
 • கடந்த ஐந்து ஆண்டுகளாக, தேடப்படுவோர் மட்டுமே 21,129 பேர். சென்னையில் மட்டும் 3,572 குற்றவாளிகள். இவர்களில் ஒருவர் கூட பிடிபடவில்லை. 13 மாவட்டங்களில் பல ஆயிரம் என்று பட்டியல் நீளுகிறது.
  பண்டித நேரு காலத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டமுந்த்ரா ஊழல் விஸ்வரூபம் எடுத்து ஓய்ந்தது. நேருவோடு அவர் மருமகன் பரோஸ் காந்தி நாடாளுமன்றத்தில் சொற்போர் புரிந்தார்.
 • நேருவைத் தனது நட்பு வட்டத்திற்குள் கொண்டு வந்த தர்மதேஜா என்பவர் குறைவான மூலதனத்தோடு ஜெயந்தி கப்பல் கார்பரேஷனை தொடங்கி பல கோடி ரூபாயை சுருட்டினார்.
 • இந்திரா கரீபி ஹட்டாவோ (வறுமையை ஒழிப்போம்) என்று முழங்கி 14 வங்கிகளை நாட்டுடைமையாக்கினார். நகர்வாலா என்பவர் பாரத ஸ்டேட் வங்கியில் பெருந்தொகையை மோசடி செய்தார்.
  இன்று உள்ள 21 அரசு வங்கிகளில், இந்தியன் வங்கி, விஜயா வங்கி தவிர, மீதமுள்ள 19 வங்கிகளின் நஷ்டக் கணக்கு பொதுமக்களை கதிகலங்கச் செய்துள்ளது. மக்கள் அரசு வங்கிகள்தான் பாதுகாப்பு என்று கருதி சுமார் ரூ. 115 லட்சம் கோடியை முதலீடு செய்து உள்ளனர்.
 • தங்கள் பிள்ளைகளின் திருமணம், உயர்கல்வி, வீடு வாங்குதல், முதுமைகால செலவு என்று திட்டமிட்டு சேர்த்து வைத்த பணத்தை மிக எளிதாக பெரும்புள்ளிகள் எடுத்துக் கொள்கிறார்கள்.
தனி நபர் – ஊழல்
 • வங்கிகளை நாட்டுடைமை ஆக்கிய இந்த 49 ஆண்டுகளில் அவற்றின் வருமானத்தை பல மடங்கு உயர்த்தி, லாபம் ஈட்டியிருக்கலாம். ஆனால், 2017 டிசம்பர் வரை வாராக்கடன் தொகை ரூ. 4 லட்சம் கோடி என வங்கிகள் கணக்கு காட்டுகின்றன. மத்திய அரசு, வங்கிகளின் சுமையைக் குறைக்க 2.11 லட்சம் கோடி ரூபாயை மறு முதலீடு செய்துள்ளது. விஜய் மல்லையா என்ற தனி மனிதரே ஒன்பதாயிரம் கோடி ரூபாய் கடன் பாக்கி வைத்திருக்கிறார். நீரவ் மோடி 11 ஆயிரம் கோடிக்கு மேலே கடன் பெற்று இருக்கிறார். வீடியோகான் என்ற நிறுவனம் 40 ஆயிரம் கோடி கடன் பாக்கி வைத்திருக்கிறது.
 • இதுபோன்ற வாராக்கடன்களால்தான் பேங்க் ஆஃப் இந்தியாவின் நஷ்டம் இவ்வாண்டு 3,969 கோடியாக அதிகரித்திருக்கிறது. பஞ்சாப் நேஷனல் வங்கி அதைவிட அதிகம். இந்தியாவின் 10 பெரிய நிறுவனங்கள் பட்டியலில் இருந்து பாரத ஸ்டேட் வங்கி கீழே இறங்கி உள்ளது. அரசியல் தலைவர்களோ வங்கி உயர் அதிகாரிகளோ உதவாமல் ஒருவர் பல்லாயிரம் கோடி கடன் பெறுவது சாத்தியமில்லை.
  ரூ. 5,000 கோடி கடன் பெறும் தொழிலதிபர், கடன் பெற உதவியவர்களுக்கு கையூட்டாகவும், அரசியல் கட்சிகளுக்கு நன்கொடையாகவும் ரூ. 500 கோடியை செலவு செய்யத் தயங்குவதில்லை. கெடுபிடிகள் வரும்போது, பயந்து போய் வெளி நாடுகளுக்குப் பறந்து விடுகின்றனர்.
 • நாம் நாட்டு வங்கி மோசடி விஜய் மல்லையா, லண்டன் நீதிமன்றத்தில், என்னை இந்தியாவிற்கு அனுப்பாதீர்கள். அங்கே சிறைச்சாலைகள் மோசம் என்று கூறுகிறார். அந்நாட்டு நீதிமன்றம், நம் நாட்டு சிறை வசதிகள் பற்றி அறிக்கை அனுப்பச் சொல்லுகிறது.
 • அன்றைய இந்தியாவில் வாழ்ந்த 30 கோடி மக்களும் விடுதலை பெற வ.உ. சிதம்பரனார் சிறையில் செக்கிழுத்தார். சிறையில் ஆட்டுத்தோல் உரித்து தொழுநோய் கண்டார் சுப்பிரமணிய சிவா. அன்று இந்திய சிறைச்சாலைகளின் தரம் சொல்லத் தரமன்று. இன்றைக்கு சில பெரும்புள்ளிகளுக்கு நட்சத்திர விடுதிபோல சிறை அமைக்கப்படுகிறது. சிறையில் எல்லாமே கிடைக்கிறது. இந்நிலையில், நம்மை அடிமைபடுத்தியவர்களின் வாரிசுகளான லண்டன் நீதிபதிகள் நம் நாட்டு சிறைகளின் வசதி பற்றி அறிக்கை கேட்கின்றனர், வெட்கக்கேடு.
 • சில நேரங்களில், வெள்ள பாதிப்பாலோ, வறட்சியாலோ விவசாயிகள் தங்கள் வங்கிக் கடனுக்கான தவணையை கட்டத் தவறுவதுண்டு. அப்போது வங்கி அதிகாரிகள் விவசாயியின் பொருள்களை பறிமுதல் செய்ய முற்படுவர். அதனால், அவமானம் தாங்காமல் விவசாயி உயிர் விட்ட சம்பவங்களும் நடந்திருக்கின்றன.
  மத்திய அரசு, கணக்கில் வராத கருப்புப் பணத்தை ஒழிக்கும் முயற்சியாக 2016-இல் உயர் மதிப்பு செலாவணிகளை செல்லாததாக்கியது. ஆனால், எதிர்பார்த்த வெற்றி கிட்டவில்லை என்றாலும், அதனால் பல நன்மைகள் விளைந்தன என்பது உண்மையே!
  அந்த நடவடிக்கைக்குப் பிறகு, புதிதாக 80 லட்சம் பேர் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்து உள்ளனர். இது முன் எப்போதும் இல்லாத உயர் எண்ணிக்கை. வரி செலுத்துவோர் 61 சதவீதம் அதிகமாகி உள்ளனர். 2014-இல் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்தோர் எண்ணிக்கை 8 கோடி. 2017-18-இல் 6.86 கோடி பேர் தாக்கல் செய்து உள்ளார்கள்.
 உயர் மதிப்பு செலாவணி மதிப்பிழப்பு
 • உயர் மதிப்பு செலாவணி மதிப்பிழப்புக்கு முன் வருமான வரி விகிதம் 6 சதவீதம்தான். இப்போது அது 9 சதவீதமாக உயர்ந்துள்ளது. உலகின் பெரிய பொருளாதார நாடுகள் வரிசையில் 7-ஆவது இடத்திலிருந்த இந்தியா, பிரான்ஸை பின்னுக்குத் தள்ளி 6-ஆவது இடத்திற்கு உயர்ந்து உள்ளது.
 • 2018-19-இல், வரி வருமானம் 7 லட்சம் கோடியாக உயரும் என்றும் ஜி.டி.பி.யின் வளர்ச்சி விகிதம் 7.75 சதவீதமாக உயரும் என்றும் பொருளாதார நிபுணர்கள் கணித்து உள்ளனர். அதனால் நிதி பற்றாக்குறை 3.3 சதவீதமாக குறையும்.
 • 2017-18 நிதியாண்டில், ரூ. 89 லட்சம் கோடி நேர்முக வரி வருமானம் உயர்ந்துள்ளதாக மத்திய வரிகள் வாரியம் கூறியுள்ளது. உயர்மதிப்பு செலாவணிகளை பல வழிகளில் வங்கிகளில் செலுத்திய மூன்று லட்சம் பேருக்கு விளக்கம் கேட்டு வருமானவரித் துறை கடிதம் அனுப்பி உள்ளது. இதனால், கருப்புப் பணத்தை வங்கியில் செலுத்தினால் வெள்ளையாகி விடும் என்று நினைத்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
 • இதுவரை 80 ஆயிரம் பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ரூ. 37 லட்சம் கோடி சோதனை நடத்தி பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. வங்கிகளுக்கு வராத 16 ஆயிரம் கோடி ரூபாயும் அரசுக்கு வருமானமே. மூன்று லட்சத்திற்கும் அதிகமான போலி நிறுவனங்கள் (ஷெல் கம்பெனி) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
  இதனால் 21 லட்சம் இயக்குநர்கள் நிர்வாக சபை கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாது. கருப்புப் பண சந்தையின் ஊற்றுக்கண் ஏறக்குறைய அடைக்கப்பட்டு விட்டது.

நன்றி: தினமணி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen + twenty =