உலகின் கவனத்தை ஈர்த்த மஞ்சள் அங்கி

December 6, 201812 days 630
 • பிரான்ஸில் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக நடந்துவரும் மஞ்சள் அங்கி போராட்டம், உலகையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது. வழி நடத்துபவர்களோ, தலைவர்களோ யாருமின்றி, பெருநகரங்கள் முதல் கிராமங்கள் வரை நாடு முழுவதும் தன்னெழுச்சியாக மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்துவதே இதற்குக் காரணம்.
பிரான்ஸ் – போராட்டம்
 • 1968-ஆம் ஆண்டு நடந்த மாணவர் போராட்டத்துக்குப் பிறகு நடைபெறும் மிகப்பெரும் போராட்டமாக இது கருதப்படுகிறது.
 • 2017ஆம் ஆண்டு மே மாதம் அதிபராகப் பதவியேற்ற இமானுவேல் மேக்ரான், பிரான்ஸ், தனது பழைய கௌரவத்தை மீட்டெடுக்க ஒரு புரட்சி நடத்தப்போவதாக அறிவித்தார்.
பொருளாதார சீர்திருத்தம்
 • பொருளாதார சீர்திருத்தவாதியாக தன்னை அறிவித்துக்கொண்ட அவர், பதவியேற்றவுடன் தொழில்முனைவோருக்கும், அதிக வருமானம் ஈட்டுபவர்களுக்கும் வரிச்சலுகையை அறிவித்தார்.
 • அத்துடன் பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும் என்ற நீண்டகாலத் திட்டத்தின் ஒரு பகுதியாக, பெட்ரோல், டீசல் மீதான வரியை அதிகரித்தார். அதன்படி, கடந்த ஓராண்டில் டீசல் விலை லிட்டருக்கு 51 யூரோ ( சுமார் ரூ.121) அதிகரிக்கப்பட்டது.
 • மேலும், சர்வதேச சந்தையில் கடந்த சில வாரங்களாக எண்ணெய் விலை குறைந்து வரும் நிலையில், டீசல் மீதான பசுமை வரி 5 சதவீதமும், பெட்ரோல் மீதான பசுமை வரி 3.9 சதவீதமும் அதிகரிக்கப்பட்டது.
 • 2019, ஜனவரி முதல், டீசல் மீதான வரி 5 சதவீதமும், பெட்ரோல் மீதான வரி 2.9 சதவீதமும் அதிகரிக்கப்படும் எனவும் அரசு அறிவித்தது. இந்த அறிவிப்புதான் மக்களைக் கொந்தளிக்கச் செய்தது.
டீசல்
 • பிரான்ஸில் டீசல் வாகனங்கள்தான் அதிகம். அதுவும் சிறு நகரங்கள், ஊரகப் பகுதிகளில் போக்குவரத்துக்கு பொதுமக்கள் பெரும்பாலும் சொந்த வாகனங்களையே நம்பியிருக்கின்றனர்.
 • இச்சூழ்நிலையில் எரிபொருள் மீதான வரி அதிகரிப்பால், தங்களது வாழ்க்கைச் செலவினம் அதிகரிப்பதாக சமூக ஊடகங்களில் தொடங்கிய கருத்துப் பரிமாற்றங்கள், நவம்பர் 17-ஆம் தேதி, பொதுமக்களை வீதிக்கு அழைத்து வந்தது.
 • பிரான்ஸில், வாகன ஓட்டிகள், எதிரே வரும் வாகன ஓட்டிகளைக் கவரும் வகையில் ஒளிரும் மஞ்சள் மேலங்கியை அணிந்து செல்ல வேண்டும். அந்த வகையில் அரசின் கவனத்தைக் கவரும் வகையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், மஞ்சள் அங்கி அணிந்து திரண்டதால், இப்போராட்டம் மஞ்சள் அங்கி போராட்டம் எனப் பெயர் பெற்றது.
 • ஆரம்பத்தில் சாலை மறியல், ஆர்ப்பாட்டம் எனத் தொடங்கிய போராட்டம், கடந்த நவம்பர் 3-ஆம் தேதி வன்முறையாக வெடித்தது. வாகனங்களும் அரசுக்குச் சொந்தமான கட்டடங்களும் அடித்து நொறுக்கப்பட்டன. விற்பனை நிலையங்களுக்கு எரிபொருளை கொண்டு செல்வதும் தடுக்கப்பட்டது.
 • உச்ச கட்டமாக, பாரீஸின் சேம்ப்ஸ் எலிசீஸ் அவென்யூவில் உள்ள போர் நினைவுச் சின்னம் சேதப்படுத்தப்பட்டது. இதன் தாக்கம், சுற்றுலாத் துறையில் உடனடியாக எதிரொலித்தது. இதன்மூலம் நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து பேச்சுவார்த்தைக்கு அரசு தயாரானது.
 • போராட்டம் தொடங்கி சுமார் 3 வார காலமாகியும் இதற்கு தலைவர் என யாரும் உருவாகாததுதான் மஞ்சள் அங்கி போராட்டத்தை வித்தியாசப்படுத்திக் காட்டியது.
 • வீதிகளில் திரண்ட ஒவ்வொருவருமே நான் மஞ்சள் அங்கி போராளி என பெருமிதத்துடன் கூறிக்கொண்டே காவல் துறையினரை எதிர்கொண்டனர்.
 • நாட்டையே அதிரவைத்த வன்முறைக்குப் பின்னர் நடத்தப்பட்ட ஆய்வில், இந்த மஞ்சள் அங்கி போராட்டத்துக்கு 70 சதவீத மக்கள் ஆதரவு தெரிவித்தனர்.
 • இப்போராட்டத்தில் அரசுக்கு எதிரான நிலைப்பாடு கொண்டவர்களும் பயங்கரவாதிகளும் ஊடுருவியுள்ளதாக அரசு குற்றம் சாட்டினாலும், ஒருவழியாக வரும் ஜனவரி முதல் நாளிலிருந்து அமலுக்கு வரவிருந்த எரிபொருள்கள் மீதான வரி உயர்வை ஆறு மாதங்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்தது.
 • இது போராட்டக்காரர்களை திருப்திப்படுத்துவதாக இல்லை. எரிபொருள்கள் மீதான வரி உயர்வை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும் என சமூக ஊடகங்களில் பலர் வலியுறுத்தி வருகின்றனர்.
 • இப்போராட்டம் பொதுமக்களுக்கு கிடைத்த வெற்றியாகவும், அரசுக்கு கிடைத்த தோல்வியாகவும் கருதப்படுகிறது.
 • அதாவது, அடுத்த ஆண்டு மே மாதம் பிரான்ஸில் நடைபெறவுள்ள ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்றத் தேர்தலில் மேக்ரானுக்கு இது சிக்கலை ஏற்படுத்தக்கூடும்.
 • கடந்த ஆண்டு புத்தாண்டு தினச் செய்தியில் பிரான்ஸ் அதிபர் மேக்ரான், நாட்டுக்காக நாம் என்ன செய்தோம் என தினமும் காலையில் உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள் என மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
  ஆனால், மேக்ரான் பதவியேற்ற பதினெட்டே மாதங்களில், பிரெஞ்சு புரட்சியின்போது வீழ்த்தப்பட்ட பிரான்ஸின் கடைசி மன்னரான 16-ஆம் லூயிஸுடன் அவரை ஒப்பிட்டுப் பேசும் அளவுக்கு நிலைமை மாறிவிட்டது.
 • பொருளாதார சீர்திருத்தம் என்கிற பெயரில் செயல்படுத்தப்படுபவை, மக்களைப் பாதிக்காத வகையில் இருக்க வேண்டும்; இல்லாவிடில் புரட்சி வெடிக்கும் என உலகிற்கே உரக்கச் சொல்லியிருக்கிறார்கள் பிரான்ஸ் மக்கள்.

நன்றி: தினமணி

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 + 1 =