காந்திக்குப் பின்னால் முதன்முறையாக திரண்ட இந்தியா

June 12, 20198 days 00
  • “பஞ்சாபில் நடந்த சம்பவங்களைப் பற்றி நான் ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை. அவற்றைப் பற்றி நான் நினைக்கவில்லை என்பதாலோ அவை குறித்த உணர்வு எனக்கு ஏற்படவில்லை என்பதாலோ அல்ல. எதை நம்புவது, எதை நம்பக் கூடாது என்பதே எனக்குத் தெரியாததால்தான்” என்று வைஸ்ராய்க்கு அனுப்பிய கடிதத்தில் காந்தி கோபமாக எழுதியிருந்தார்.

ஜாலியன்வாலா பாக் படுகொலை

  • ஜாலியன்வாலா பாக் படுகொலை நடந்து ஒரு மாதத்துக்குப் பிறகே காந்திக்கும் வெளியுலகுக்கும் தகவல் தெரிந்தது. பஞ்சாபில் ராணுவச் சட்டம் அமலில் இருந்ததாலும் பத்திரிகைகள், கடிதங்கள் கடுமையாகத் தணிக்கை செய்யப்பட்டதாலும் அந்தப் படுகொலைச் சம்பவம் பற்றிய தகவல்கள் காந்தியைப் போய்ச்சேரவே இல்லை. விஷயம் அவர் காதுக்குச் சென்ற பிறகும் பஞ்சாபுக்குச் செல்வதற்கு ஆங்கிலேய அரசாங்கம் அனுமதிக்கவில்லை. ஜாலியன்வாலா பாக் படுகொலையின் பின்னணியிலும் அதற்குப் பிறகான அடக்குமுறையின் பின்னாலும் அந்த அளவுக்கு ரௌலட் சட்டம் இருந்தது.
  • காந்தியைப் பொறுத்தவரை அதுவரை பிரிட்டிஷ்காரர்கள் மீது அவர் வைத்திருந்த கொஞ்சநஞ்ச நம்பிக்கையையும் முற்றிலும் தகர்த்தெறிந்த சம்பவம் அது. 1857-ல் நிகழ்ந்த சிப்பாய் கலகத்தைவிட மோசமானது ஜாலியன்வாலா பாக் படுகொலை என்று கருதினார். ஆங்கிலேயர்கள் ஜனநாயகவாதிகள் என்ற எண்ணமும் காந்தியிடமிருந்து அகன்றது. இப்படிப்பட்ட சூழலில் ஜாலியன்வாலா பாக் படுகொலையாலும் கிலாஃபத் இயக்கத்துக்காகவும் இந்தியா விடுதலை அடைய வேண்டும் என்ற எண்ணத்திலும் ஒத்துழையாமை பற்றிய எண்ணம் காந்திக்கு வருகிறது.

கிலாஃபத் இயக்கம்

  • 1919-ன் இறுதியில் அமிர்தசரஸில் நடந்த கிலாஃபத் இயக்கத்தினரின் மாநாட்டில் காந்தி கலந்துகொண்டார். அங்கே, ஆங்கிலேயருக்கு எதிராக அந்நியப் பொருள்களையும் அந்நியத் துணியையும் பகிஷ்கரிப்பு செய்வது உள்ளிட்ட விஷயங்கள் பேசப்பட்டன. பின்னாளில் அந்நியத் துணி பகிஷ்கரிப்பை காந்தி முழுமூச்சுடன் முன்னெடுத்தாலும் அந்த மாநாட்டில் அதை ஆதரிக்கவில்லை. ஏனென்றால், அந்நியர்களின் பொருளைத் தங்கள் உடம்பில் தாங்கியிராதவர்கள் காந்தியைத் தவிர வேறு யாரும் அந்த மாநாட்டில் இருந்திருக்க மாட்டார்கள். நம்மிடம் உற்பத்தி இல்லாமல் அதுபோன்றதொரு முடிவை உடனடியாக எடுத்துவிட முடியாது என்பதால் ஆங்கிலேயரை பாதிக்கக்கூடிய வேறு ஏதாவது செய்ய வேண்டும் என்று காந்தி கூறினார். அப்போது அவருக்குத் தோன்றிய யோசனைதான் ஒத்துழையாமை இயக்கம்.

ஒத்துழையாமை இயக்கம்

  • ஒத்துழையாமை இயக்கம் குறித்த எண்ணங்கள் காந்திக்கு ஓடிக்கொண்டிருந்த வேளையில், ஜாலியன்வாலா பாக் படுகொலை பற்றி விசாரணை நடத்த ஆங்கிலேய அரசு நியமித்திருந்த ஹன்ட்டர் குழு தன் முடிவை அறிவித்தது. ஜெனரல் டையர் வெறுமனே நாடு கடத்தப்பட்டார். பஞ்சாபில் நிலவிய ராணுவச் சட்டத்தின் சர்வாதிகாரி லெஃப்டினென்ட்-கவர்னரான மைக்கேல் ஓ’ட்வையருக்குச் சிறு தண்டனைகூட அறிவிக்கப்படவில்லை. கூடவே, மாண்டேகு சீர்திருத்தங்கள் மீது வைத்திருந்த நம்பிக்கையும் பொய்த்துப்போகிறது. இந்த நிலையில் 1920 டிசம்பர் மாதம் ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்குகிறார் காந்தி.
  • ஒத்துழையாமை இயக்கம் அகிம்சை வழியில் நடைபெறும் என்றும், ஆங்கிலேய அரசின் கல்வி நிறுவனங்கள், நீதிமன்றங்கள், ஏனைய அரசு அலுவலகங்கள் போன்றவற்றில் பணிபுரியும் இந்தியர்கள் தங்கள் வேலைகளை விட்டுவிட வேண்டும் என்றும், விவசாயிகள் வரி கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும் என்றும் காந்தி கூறினார். அந்நியப் பொருட்களை வாங்குவதைத் தவிர்க்க வேண்டும் என்பதையும் இம்முறை சேர்த்துக்கொண்டார்.
  • காந்தியின் அழைப்புக்கு ஒட்டுமொத்த இந்தியாவே செவிகொடுத்தது. சாதி, மத வித்தியாசமின்றி அனைவரும் திரண்டார்கள். அரசு அலுவலங்களிலிருந்து இந்திய ஊழியர்களும் அரசுக் கல்வி நிலையங்களிலிருந்து இந்திய மாணவர்களும் வெளியேறினார்கள். இதையடுத்து இந்தியர்களால் ஏராளமான கல்வி நிறுவனங்கள் உருவாக்கப்பட்டன. இந்தியா முழுவதும் அப்படித் தொடங்கப்பட்ட பல்வேறு கல்வி நிறுவனங்கள் இன்னும் இயங்கியபடி ஒத்துழையாமை இயக்கத்தின் பெருமையைச் சொல்லிக்கொண்டிருக்கின்றன.
  • ஒத்துழையாமை இயக்கம் வெற்றிகரமாக நடந்தால் ஓராண்டில் விடுதலை கிடைத்துவிடும் என்று காந்தி இந்தியர்களுக்கு வாக்குறுதி அளித்திருந்தார். 1920-ன் இறுதியில் ஆரம்பித்து 1921-ம் ஆண்டு முழுவதும் ஒத்துழையாமை இயக்கம் நடைபெற்று 1922 பிறந்தும்கூட விடுதலை கிடைக்கவில்லை என்ற கவலை காந்தியையும் உறுத்தாமல் இல்லை. ஒரே ஒரு இடத்தைத் தேர்ந்தெடுத்து அங்கே பெரிய அளவில் தன்னுடைய நேரடி மேற்பார்வையின் கீழ் ஒத்துழையாமை இயக்கத்தைப் பரீட்சித்துப் பார்ப்பது என்ற திட்டத்தை காந்தி முன்வைத்தார். இதற்கு அவர் தேர்ந்தெடுத்த இடம் குஜராத்தின் பர்தோலி.

அகிம்சை

  • இதற்கிடையே பர்தோலியிலிருந்து எட்டு மைல் தொலைவில் உள்ள சௌரி சௌராவில் ஒரு சம்பவம் நடந்தது. போராட்டக்காரர்களுக்கும் காவல் துறையினருக்கும் இடையே நடந்த கலவரத்தில் எண்ணிக்கையில் குறைவாக இருந்த காவல் துறையினர் பயந்துபோய்க் காவல் நிலையத்துக்குள் போய் ஒளிந்துகொள்ள, கூட்டத்தினர் அந்தக் காவல் நிலையத்தைத் தீ வைத்து எரித்துவிட்டனர். இதில் 23 காவலர்கள் உயிரிழந்தார்கள். இந்தச் செய்தி காந்தியை எட்டியதும் மிகுந்த துயரத்தில் ஆழ்கிறார். அகிம்சையை உயிர்நாடியாகக் கொண்டு தான் தொடங்கிய ஒத்துழையாமை இயக்கம் இதுபோன்ற சம்பவங்களை அவரால் எப்படி அனுமதிக்க முடியும். அவருடைய சகாக்கள், தொண்டர்கள் பலரும் எவ்வளவோ வலியுறுத்தியும் ஒத்துழையாமை இயக்கத்தை நிறுத்திவிடுகிறார்.
  • அகிம்சையிலும் சத்தியாகிரகத்திலும் முறையாகப் பயிற்சி பெறாத மக்களைக் கொண்டு பெருந்திரள் போராட்டத்தில் இறங்குவது ஆபத்து என்பதை காந்தி சௌரி சௌரா சம்பவத்தின் மூலம் கண்டுகொண்டார். ஒத்துழையாமை இயக்கத்தைப் பாதியிலேயே காந்தி நிறுத்தியதற்கு அந்தக் காலத்திலிருந்து இந்தக் காலம் வரை கடுமையாக விமர்சித்தவர்கள் பலருண்டு. அருந்ததி ராய்கூட சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பேட்டியில் காந்தியின் முடிவை விமர்சித்திருந்தார். ஆனால், அந்த இயக்கம் நடைபெற்ற சுமார் இரண்டு ஆண்டுகளில் ஆங்கிலேய அரசை மிரள வைத்தது என்பதும், வெளிநாட்டிலிருந்து இந்தியா திரும்பி சில ஆண்டுகளே ஆகியிருந்த காந்தியின் பின்னால் ஒரு தேசமே திரண்டது என்பதும், காங்கிரஸை மேட்டுக்குடியினரிடமிருந்து நாடெங்கும் உள்ள ஏழை எளியவர்களிடம் கொண்டுசேர்த்த இயக்கம் என்பதும் ஒத்துழையாமை இயக்கத்தின் வெற்றிகள்!

நன்றி: இந்து தமிழ் திசை (12-06-2019)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 2 =