மருத்துவத்துக்கு என்ன சிகிச்சை?

June 18, 201928 days 00
 • பாதுகாப்பான பணிச்சூழல் மருத்துவர்களுக்கு வழங்கப்பட வேண்டுமென்பதில் யாருக்குமே மாற்றுக் கருத்து இருக்க முடியாது. சிகிச்சை பலனளிக்காமல் போகும்போது, நோயாளிகளின் உறவினர்களுக்கு ஆத்திரம் ஏற்படுவது இயற்கை. அதற்காக அவர்கள் தங்களது ஆத்திரத்தை மருத்துவர்களின் மீது காட்ட முற்படுவதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது.
தவறான சிகிச்சை
 • தவறான சிகிச்சை வழங்கப்படுதல், சரியான சமயத்தில் மருத்துவர்கள் இல்லாமல் இருத்தல், கவனிக்காமல் இருத்தல் உள்ளிட்டவை கண்டனத்துக்குரியவை மட்டுமல்ல, தண்டனைக்குரியவையும்கூட.
 • அதற்காக வழக்குத் தொடுப்பதற்கான சட்டப் பிரிவுகள் இருக்கின்றன. சில மாநிலங்களில் சிறப்புச் சட்டங்களும் இயற்றப்பட்டிருக்கின்றன. அதனடிப்படையில், தவறான சிகிச்சை குறித்து வழக்குத் தொடரும் உரிமை நோயாளிகளுக்கு உண்டு. வழக்குத் தொடுத்து வெற்றி பெற்று இழப்பீடும் பெற்ற நிகழ்வுகளும் உண்டு. அப்படியிருக்கும்போது சட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டு மருத்துவர்கள் தாக்கப்படுவதை அனுமதிக்க முடியாது.
 • மருத்துவர்களின் பாதுகாப்பு குறித்து மட்டு மல்லாமல், பொதுவாக இந்திய மருத்துவத் துறையின் செயல்பாடுகள் குறித்தும், தரம் குறித்தும் பல கேள்விகளை கொல்கத்தா பிரச்னை எழுப்புகிறது. அரசின் தவறான கொள்கைகளால், மருத்துவர்களுக்கான தட்டுப்பாடு நிலவுகிறது. அதனால், இந்தியாவில் மருத்துவர்களின் எண்ணிக்கை மிக முக்கியமான பிரச்னை.
வழிகாட்டுதல்
 • உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டுதல்படி, 1,000 பேருக்கு ஒரு மருத்துவர் இருக்க வேண்டும். அதன்படி பார்த்தால், இந்தியாவில் 1,472 பேருக்கு ஒரு மருத்துவர் மட்டுமே இருக்கும் நிலைமை காணப்படுகிறது.
 • ஒட்டுமொத்த இந்தியாவில் செயல்படும் மொத்த மருத்துவர்களின் எண்ணிக்கையே 10 லட்சத்துக்கும் குறைவாகத்தான் காணப்படுகிறது.
 • மருத்துவர்களும் சரி, பெரும்பாலும் மாநிலத் தலைநகரங்களிலும் முக்கியமான பெரு நகரங்களிலும்தான் பணிபுரிகிறார்களே தவிர, பிற்பட்ட மாவட்டங்களிலும், ஊரகப் பகுதிகளிலும் பணி புரிபவரின் எண்ணிக்கை மிக மிகக் குறைவு. பகுதிகள் ரீதியாக பகுத்தாய்வு செய்து பார்த்தால், இந்தியாவின் பல பகுதிகளில் 25,000 பேருக்கு ஒரு மருத்துவர் என்கிற நிலையில்கூட மருத்துவர்கள் இல்லாத நிலை பரவலாகக் காணப்படுகிறது.
தனியார்
 • தனியார்மயத்துக்குச் சாதகமான மத்திய-மாநில அரசுகளின் செயல்பாடுகளால் புறக்கணிக்கப்படும் அரசு மருத்துவமனைகளும், அரசு மருத்துவக் கல்லூரிகளும் சாமானியர்களுக்குத் தரமான மருத்துவத்தை எட்டாக்கனியாக்கிக் கொண்டிருக்கிறது. மருத்துவக் கல்வியும் மருத்துவமும் வணிகமாக்கப்பட்டிருப்பதால் ஏற்பட்டிருக்கும் பாதிப்பை அடித்தட்டு மக்கள்தான் எதிர்கொள்கிறார்கள். நடுத்தர மக்கள் அதிக அளவில் கடனாளி ஆவதற்கு அதிகரித்துவிட்டிருக்கும் மருத்துவச் செலவுகள்தான் காரணம் என்று பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
 • மருத்துவக் கல்வி வணிகமாகிவிடக் கூடாது என்கிற நோக்கில், உச்சநீதிமன்றத்தால் வலியுறுத்தப்பட்டு கொண்டுவரப்பட்டிருக்கும்  நீட் தேர்வு, அரைகுறைத்  தீர்வாக மாறிவிட்டிருக்கிறது. இந்திய மருத்துவக் கல்வி குறித்த விரிவான விவாதம் நடத்தப்பட்டாக வேண்டும்.
மருத்துவக் கல்வி
 • மருத்துவக் கல்வியில் நீதித் துறையின் அவசியமற்ற தலையீடு காரணமாக, கிராமப்புறங்களில் பணியாற்ற மருத்துவர்கள் இல்லை. மருத்துவப் பட்டம் பெறுபவர்களில் பெரும்பாலோர் மருத்துவ மேல்படிப்புக்கு முனைகிறார்கள். குறைந்தது ஐந்தாண்டுகளாவது பொது மருத்துவ அனுபவம் பெற வேண்டும் என்கிற வரம்பு இல்லாததால், சிறப்பு சிகிச்சையில் காணப்படும் திறமை, மருத்துவர்கள் மத்தியில் பொது சிகிச்சையில் இல்லாமல் போய்விட்டிருக்கிறது. அது குறித்து யாரும் கவலைப்படுவதாக இல்லை. அதன் விளைவுதான் பொது மருத்துவத்தில் காணப்படும் தவறான சிகிச்சைகளும், எதிர்வினைகளும் என்பதை எடுத்தியம்பாமல் இருக்க முடியவில்லை.
  மருத்துவர்களுக்கு எதிரான வன்முறையை எந்தவிதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
 • இந்தியாவில் 77% மருத்துவர்கள் ஏதாவது வகையில் வன்முறையை எதிர்கொள்ளும் பணிச்சூழலில் இயங்குகிறார்கள் என்கிற கசப்பான உண்மையையும், போதுமான மருத்துவர்கள் இல்லாமல் இருக்கிறார்கள் என்பதும் மேற்கு வங்க மருத்துவர்களின் போராட்டத்தின் மூலம் ஆட்சியாளர்களின் கவனத்தை ஈர்க்குமேயானால், தவறிலும் ஒரு நன்மை ஏற்பட்டிருப்பதாக ஆறுதல் அடையலாம்.

நன்றி: தினமணி (18-06-2019)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three + 16 =