மீண்டும் ஒரு வாய்ப்பு!

June 15, 201931 days 00
 • தர்க்க ரீதியாகப் பார்த்தால் சந்தைப் பொருளாதாரம் என்பது நுகர்வோருக்கு சாதகமான சூழலை உறுதிப்படுத்துவதாக அமைய வேண்டும். அமெரிக்கா உள்ளிட்ட சந்தைப் பொருளாதாரத்தின் அடிப்படையிலான நாடுகளில் எல்லாம் அதன் பயனை நுகர்வோர் முழுமையாக அனுபவிக்கிறார்கள். அந்த நாடுகளில் அமல்படுத்தப்பட்டிருக்கும் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டமும், கண்காணிப்பு அமைப்புகளும், நுகர்வோர் இயக்கங்களும், எல்லாவற்றிற்கும் மேலாக மக்கள் மத்தியில் காணப்படும் விழிப்புணர்வும்தான்அதற்குக் காரணம்.
1991-இல்
 • 1991-இல் அன்றைய நரசிம்ம ராவ் அரசு பாரியவாதம்(“குளோபலைசேஷன்’), பொருளாதார சீர்திருத்தம் என்கிற பெயரில் இந்தியாவில் சந்தைப் பொருளாதாரத்தை அறிமுகப்படுத்தியபோது, நுகர்வோரின் நலனை முன்னிறுத்தி எடுக்கப்படும் நடவடிக்கை என்று கூறப்பட்டது. ஆனால், கடந்த 28 ஆண்டு பொருளாதார சீர்திருத்தத்தின் செயல்பாட்டை மீள்பார்வை பார்க்கும்போது, இந்தியாவில் காணப்படுவது சந்தைப் பொருளாதாரமல்ல, மோசடி முதலாளித்துவம் (“குரோனி கேப்பிடலிஸம்’) என்றுதான் கூறத் தோன்றுகிறது. நுகர்வோர் அமைப்புகள் வலிமையாக இல்லாமல் இருப்பதும், இந்தியாவில் வலுவான நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் இல்லாமல் இருப்பதும்தான் இதற்குக் காரணம்.
 • 1986-ஆம் ஆண்டு நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தைஅன்றைய ராஜீவ் காந்தி அரசு  கொண்டுவந்தது. 1991-இல் பொருளாதார சீர்திருத்தம் அறிவிக்கப்படுவதற்கு முன்னால் அல்லது அறிவிக்கப்பட்டவுடன், “நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 1986′-இல் மாற்றங்களை ஏற்படுத்தி கடுமைப்படுத்தியிருக்க வேண்டும்.
 • நுகர்வோர் அமைப்புகள் தொடர்ந்து குரல் எழுப்பியும்கூட, ஆட்சிக்கு வந்த பல்வேறு அரசுகளும் அது குறித்த முனைப்பைக் காட்டவில்லை.
 • 2014-இல் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்தபோது, மத்திய நுகர்வோர் நல அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் இந்தப் பிரச்னையில் முனைப்புக் காட்டினார். மாதிரி வரைவு மசோதா உருவாக்கப்பட்டது. அந்த மாதிரி மசோதா, அடுத்த ஐந்து ஆண்டுகள் பல்வேறு மாற்றங்களைக் கண்டது. பல திருத்தங்கள் செய்யப்பட்டன. 2019-இல்
  16-ஆவது மக்களவை முடிவுக்கு வந்தவுடன் அந்த மசோதா காலாவதியாகிவிட்டது.
 • பிரதமர் நரேந்திர மோடியின் கடந்த ஆட்சியில் அமைச்சர்ராம்விலாஸ் பாஸ்வானால் கொண்டுவரப்பட்ட மசோதாவில், “நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 1986′-இல் இருந்த பல அடிப்படைக் குறைபாடுகள் களையப்படாமல் தொடர்ந்தன. கொண்டுவரப்பட்ட சில மாற்றங்கள், மசோதாவை மேலும் பலவீனப்படுத்துவதாக இருந்தன. ஒருவகையில் பார்த்தால், அந்த மாதிரி மசோதா தாக்கல் செய்யப்படாமல் காலாவதியானதேகூட வரவேற்புக்குரியது என்றுதான் கருத வேண்டும்.
நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 1986
 • “நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 1986′-இன் மிகப் பெரிய குறை, இழுத்தடிக்கப்படும் மிகவும் சிக்கலான வழக்கு நடைமுறைகள். முந்தைய சட்டத்துக்கு மாற்றாக தயாரிக்கப்பட்ட புதிய மசோதா, பேச்சுவார்த்தைத் தீர்வை வலியுறுத்தியது. வஞ்சிக்கப்படும் நுகர்வோருக்கு நியாயம் வழங்கப்படுவதற்கு பதிலாக பேச்சுவார்த்தைத் தீர்வு வழங்குவது, நுகர்வோர் நலனைப் பாதுகாப்பதாக இருக்காது.
 • நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டபோது தயாரிப்பாளர்களுடனும், சேவை வழங்குபவர்களுடனுமான பிரச்னைகளை வழக்குரைஞர்களின் உதவியில்லாமல் விரைவாகத் தீர்வு காணும் மாற்று முறையை வழங்குவதுதான் இலக்கு என்று ஆட்சியாளர்கள் உறுதியளித்தது நடைமுறைப்படுத்தப்படவே இல்லை. எளிமையாகவும், விரைவாகவும், செலவில்லாமலும்நுகர்வோருக்கு நீதி கிடைப்பதில்லை என்பதுதான் நடைமுறை எதார்த்தம். பல்வேறு ஆய்வுகள் இதற்குப் பல காரணங்களைத் தெரிவிக்கின்றன. மிக முக்கியமான காரணம், அதிக அளவிலான வழக்குரைஞர்களின் தலையீடு, நுகர்வோர் நீதிமன்றத்தை வழக்கமான நீதிமன்றம்போல மாற்றியிருப்பதுதான்.
 • “நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 1986′-இல் ஒழுங்காற்று ஆணையர் குறித்து குறிப்பிடப்பட்டிருந்தாலும், அந்த ஆணையரின் கடமைகள் குறித்த முறையான, விரிவான விளக்கங்கள் இல்லை. நுகர்வோரின் உரிமைகளை உறுதிப்படுத்த வலிமையான ஆணையமும், ஆணையரும் இல்லாமல் நுகர்வோர் பாதுகாப்பு குறித்து விவாதிப்பது என்பதே அர்த்தமற்றது.
 • “1986′ சட்டத்தின்படி, நுகர்வோரின் முதல் உரிமையே அவர்களுக்குப் பாதுகாப்பான பொருள்களும், முறையான சேவையும் வழங்கப்படுவதுதான். இன்று சந்தையில் காணப்படும் பெரும்பாலான பொருள்கள் நுகர்வோரை வஞ்சிப்பவையாகவும், பாதுகாப்பற்றவையாகவும் இருக்கின்றன எனும்போது, நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், நுகர்வோர் கண்துடைப்புச் சட்டமாக மாற்றப்பட்டிருக்கிறது என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
 • கடந்த ஆட்சியில் நுகர்வோர் பாதுகாப்பு மசோதாவை நிறைவேற்ற முடியவில்லை என்று வருத்தம் தெரிவித்த அமைச்சர்ராம்விலாஸ் பாஸ்வானுக்கு இப்போது மீண்டும் ஒரு வாய்ப்பு கிட்டியிருக்கிறது. பழைய மசோதா காலாவதியாகிவிட்ட நிலையில், அவர் 17-ஆவது மக்களவையில் புதிய மசோதாவை தாக்கல் செய்யும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இது “நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 1986′-இல்  ஏற்படுத்தப்படும் திருத்தம் அல்ல, புதிய நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம்.
 • பழைய தவறுகள் களையப்பட்டு, நுகர்வோரின் பாதுகாப்பை மட்டுமே முன்னிறுத்தி, புதிய நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தை நிறைவேற்ற அவருக்குக் கிடைத்திருக்கும் அரிய வாய்ப்பை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் நழுவவிடக் கூடாது.

நன்றி: தினமணி (15-06-2019)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × five =