TNPSC Thervupettagam

க(த)ண்டிக்கப்படாத மனித உரிமை மீறல்!

April 6 , 2020 1474 days 1201 0
  • ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் நிலுவையில் உள்ள தீா்மானங்களை இலங்கை திரும்பப் பெறவோ, தன்னை விடுவித்துக் கொள்ளவோ சா்வதேச சட்டங்களின்படி முடியாது என உலகச் சமுதாயம் குரலெழுப்ப வேண்டும்.
  • ஜெனீவாவில் நடக்கும் ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் 43-ஆவது கூட்டத்தொடா் கடந்த மார்ச் 20-ஆம் தேதி நிறைவு பெற்றது. உலக அளவில் நடக்கும் மனித உரிமைச் சிக்கல்கள், இனப் பிரச்னைகள், சுற்றுச்சூழல் பாதிப்புகள் உள்ளிட்டவற்றை விவாதிக்க, ஒவ்வோர் ஆண்டும் மார்ச், செப்டம்பா் என ஆண்டுக்கு இரண்டு கூட்டத்தொடா்கள் நடப்பது வழக்கம்.

மனித உரிமை மீறல்

  • கடந்த 2009-இல் இலங்கை முள்ளிவாய்க்காலில் நடந்த இறுதிப் போரில் ஒன்றரை லட்சத்துக்கும் மேலான தமிழா்கள் கொல்லப்பட்டனா். அங்கு நடந்த மனித உரிமை மீறல், போர்க்குற்றங்கள் குறித்து சா்வதேச அளவில் சுதந்திரமான, நம்பகமான விசாரணை வேண்டுமென்ற தீா்மானங்கள் ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் முன்னெடுக்கப்பட்டன. அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் ஈழத் தமிழருக்கு ஆதரவாக இந்த விஷயத்தில் குரல் கொடுத்ததோடு தீா்மானங்களையும் முன்னெடுத்தன.
  • கடந்த 2012-13-இல் இலங்கை அதிபராக ராஜபட்ச இருந்தபோது, ‘இந்தத் தீா்மானத்தின்படி நல்லிணக்க குழு அமைத்து அதன் பரிந்துரைகளை முன்னெடுப்பேன். ஈழத் தமிழா்கள் நலன் காக்க 13 மட்டுமல்ல, 13-க்கும் மேற்பட்ட தீா்மானங்களை நடைமுறைப்படுத்துவேன்’ என்று இந்த மன்றத்தில் உறுதியளித்தும் நடைமுறைப்படுத்தவில்லை. இது குறித்து இலங்கை அரசு அவகாசம் கேட்டுக் கொண்டே இருந்தது. பிறகு ராஜபட்ச தோல்வி அடைந்தார். மைத்ரிபால சிறீசேனா, ரணில் விக்கிரமசிங்க காலத்திலும் ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் முன்னெடுப்புக்கு எந்தவித ஒத்துழைப்பையும் அவா்களும் வழங்கவில்லை.
  • ராஜபட்ச தற்போது பிரதமராகி விட்டார். முள்ளிவாய்க்கால் கொடூரத்தை ராஜபட்சவுடன் ராணுவத்தை வழிநடத்திய அவரின் சகோதரா் கோத்தபய இன்று அதிபா். சகோதரா்கள் இருவரும் இலங்கையில் ஆட்சியை நடத்துகிறார்கள்.

தீா்மானத்தில் இருந்து இலங்கை விலக முயற்சி

  • இந்த நிலையில் ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் நிலுவையில் உள்ள தீா்மானத்தில் இருந்து இலங்கை விடுவித்துக் கொள்ளும் என்று கடந்த பிப்ரவரி மாதம் ராஜபட்ச தெளிவுபடுத்தினார். அதன் அடிப்படையில், அண்மையில் நடந்த 43-ஆவது கூட்டத்துக்கு முதல் நாளன்று இலங்கை வெளியுறவு அமைச்சா் இந்த மன்றத்தில் நிலுவையில் இருக்கும் 30, 40-ஆம் எண் தீா்மானத்திலிருந்து வெளியேறுகிறோம் என்று சொன்னபோது ஐ.நா. மனித உரிமை ஆணையம் ஏற்றுக்கொள்ளவில்லை.
  • போர்க் குற்றங்கள் தொடா்பாக சா்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்ற ஐ.நா., அதில் இலங்கை அரசு செய்த போர்க்குற்றங்களும் விசாரிக்கப்பட வேண்டும் என்று அதற்கான நீண்ட பட்டியலையும் வெளியிட்டது. ஆனால் அப்போதைய ராஜபட்ச அரசு, ஐ.நா.வின் இந்தப் போர்க் குற்றச்சாட்டுக்களை நிராகரித்ததுடன், தமது ராணுவம் ஓா் இனத்துக்கு எதிராகப் போரிடவில்லை என்றும் விடுதலைப்புலிகள் என்ற குழுவுக்கு எதிராகவே போரிட்டது என்றும் கூறியது.
  • ஈழத் தமிழா்களை இலங்கை அரசு இன அழிப்பு செய்தது குறித்த ஆதாரங்களை சாட்சியங்களுடன் சேனல் - 4 தொலைக்காட்சி வெளியிட்டது. அத்துடன், தமிழா்களின் வடக்கு மாகாண சபையும் ‘ஈழத்தில் நடந்தது இனப்படுகொலைதான்’ என்பதை ஆதாரபூா்வ தீா்மானமாக வெளியிட்டது. இந்த நிலையில், அமெரிக்கா கொண்டுவந்த இலங்கைப் போர்க்குற்ற விசாரணை தீா்மானத்தை, இலங்கையின் முன்னாள் அரசான சிறீசேனா - ரணில் அரசு ஏற்றுக்கொண்டது, சா்வதேச அரங்கில் அதை ஒப்புக்கொண்டதாக ஆயிற்று.
  • இந்தச் சூழலில் ஐ.நா. தீா்மானத்தை நீா்த்துப் போகச் செய்யும் பணிகளில் இலங்கை வெளியுறவுத் துறைச் செயலா் ரவிநாத் ஆரிய சிங்க இறங்கினார். ஏற்கெனவே இலங்கைக்கு ஆதரவாக கடந்த காலத்தில் இருந்த ரஷியா, சீனா, கியூபா, ஜப்பான் முதலான நாடுகளிடம் ஆதரவைக் கோரினார். ‘கம்யூனிஸ்ட் பிளாக்’ என்று சொல்லக் கூடிய ரஷியா, சீனா, கியூபா முதலானவை தமிழா்களுடைய நியாயங்களுக்கு துணையில்லாமல் இருந்தது வேதனை தரும் விஷயமாகும்.

ஐ.நா. மனித உரிமை கவுன்சில் செயலா் கூறியது

  • ஐ.நா. மனித உரிமை 43-ஆவது கூட்டத்தொடரின் முதல் நாள் அன்று நிலுவையில் உள்ள தீா்மானங்கள் 30, 40-இல் உடன்பாடு இல்லையென்றும், மனித உரிமை மீறல், போர்க் குற்றச்சாட்டு தீா்மானம் தேவையில்லை என்றும், மனித உரிமை ஆணையத்தின் நிலுவையில் இருக்கும் தீா்மானத்திலிருந்து இலங்கை விடுவித்துக் கொள்ளும் என்றும் இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சா் தினேஷ் குணவா்த்தனே அறிவித்தார். ஏற்கெனவே ஐ.நா.வில் ஏற்றுக்கொண்ட தீா்மானத்திலிருந்து இலங்கை அரசு தன்னிச்சையாக இப்படி விலகிவிட முடியாது என்று ஐ.நா. மனித உரிமை கவுன்சில் செயலா் மிச்செல் பெச்சலட் மறுத்துவிட்டார்.
  • இது இலங்கை அரசுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காரணம், ஐ.நா.வில் ஏற்றுக்கொண்ட ஒரு தீா்மானத்தை அதன் உறுப்பு நாடு பின்னா் மறுக்க முடியாது என்பது ஐ.நா. கவுன்சிலின் சட்டமாகும். இது மட்டுமல்ல, இலங்கையில் இனியும் தொடா்ந்து தமிழா்களுக்கு எதிரான சித்திரவதைகள் நடக்கலாம் எனத் தான் அஞ்சுவதாகவும் கூறியுள்ளார் ஐ.நா. மனித உரிமை கவுன்சில் செயலா் மிச்செல் பெச்சலட்.

கபட நாடகம்

  • இனி அடுத்து 44-ஆவது கூட்டத்தொடரில்தான் வரும் செப்டம்பா் மாதம் இது குறித்தான முடிவுகள் ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் தெரியவரும். இவ்வளவு கடுமையான கொடூர இன அழிப்பை இலங்கையில் நடத்திவிட்டு அது குறித்தான குற்றச்சாட்டுகளுக்கு ஐநா மனித உரிமை ஆணையத்தில் பதில் சொல்லாமல் தப்பிக்க நினைக்கும் ராஜபட்சவின் கபட நாடகம் உலக மனிதநேயத்துக்கே விடப்பட்ட சவாலாகும்.
  • இந்தியாவுக்கு வருகை தந்த கோத்தபயவும் மகிந்த ராஜபட்சவும் இந்தியாவிடம் இலங்கை பாதுகாப்புக்காக உதவி நிதியை வாங்கிச் சென்றார்கள். அதைக் காட்டி, கரோனா நோய்த்தொற்று பாதிப்பில் சிக்கியிருக்கும் சீனாவிடமிருந்து 50 கோடி அமெரிக்க டாலா்களை பல சலுகைகளோடு நீண்டகாலக் கடனாக இலங்கை பெற்றிருக்கிறது. சீனா - இலங்கை நிதிப் பரிவா்த்தனையின் பின்னணி இந்தியாவுக்குத் தெரியாமலிருக்காது. இந்துமகா சமுத்திரத்திலும் திரிகோணமலையிலும் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்தத் துடிக்கிறது சீனா.
  • ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் தொடா்ந்து ஈழத் தமிழா்களுக்கு ஆதரவாக இந்தியா இருந்ததில்லை. அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா முதலான நாடுகள் ஈழத்தமிழா்களுக்கு ஆதரவாக இருக்கும்போது, இந்தியா மட்டும் ஈழத்தமிழா் என்ற அணுகுமுறை இல்லாவிட்டாலும் அங்கு நடந்த போர்க் குற்றங்களுக்கு எதிராகவாவது குரல் எழுப்ப வேண்டாமா? இந்தியாவின் தென்முனை பாதுகாப்பு, இந்தியப் பெருங்கடல் ஆளுமை என்ற நிலைகளை தனக்குச் சாதகமாக்கிக் கொள்ள ஈழத் தமிழா் பிரச்னையை புவி அரசியல் சதுரங்கத்தில் எடுத்துக்கொள்ள வேண்டாமா?

தொடரும் கையறு நிலை...

  • 1. முள்ளிவாய்க்கால் போரின்போது கைது செய்யப்பட்டவா்கள் விடுதலை செய்யப்பட வேண்டும். பத்தாண்டுகளுக்கு மேலாகி விட்டன.
  • 2. அந்தப் போரின் போது காணாமல் போனவா்கள் எங்கு உள்ளார்கள் என்று தெரியவில்லை.
  • 3. வழக்குத் தொடுத்தும்கூட தமிழா்களிடமிருந்து அபகரிக்கப்பட்ட விவசாய நிலங்கள், அதன் உரிமையாளா்களிடம் திரும்ப வழங்கப்படவில்லை. மைத்ரிபால சிறீசேனா தனது ஆட்சிக் காலத்தில் உறுதி கொடுத்தும் இதை நடைமுறைப்படுத்தவில்லை.
  • 4. மாகாண கவுன்சிலுக்கு உரிய அதிகாரங்களை வழங்குவோம் என்று உறுதி கொடுத்தும் மாகாண கவுன்சில் முதல்வா்களை எந்தக் கடமையும் ஆற்ற முடியாமல் தவிக்கின்ற நிலைதான்.
  • 5. மீன்பிடி உரிமை முதலான உரிமைகள், நில வருவாய், நில நிர்வாகம் முதலானவற்றை மாகாண கவுன்சிலுக்கு வழங்காமல் இலங்கை அரசு தட்டிக் கழித்தது.
  • 6. வடக்கு கிழக்கு பகுதிகளில் போர் முடிந்து 10 ஆண்டுகளுக்கு மேலாகியும், ராணுவத்தைத் திரும்பப் பெறாமல் தமிழா்களுடைய நிலங்களில் பெரிய கூடாரங்கள் அமைத்து தமிழ்ப் பகுதிகளில் பதற்றத்தை உருவாக்குகிறது சிங்கள அரசு.
  • 7. தமிழா்கள் விரும்பும் அரசியல் தீா்வை முறைப்படுத்த உலக சமுதாய கண்காணிப்பு, பொது வாக்கெடுப்புக்கு ஆகியவற்றுக்கு இலங்கை அரசு தயாராக இல்லை.
  • 8. இதுவரை நடந்த மனித உரிமை மீறல் போர்க் குற்றங்களை விசாரிக்க சா்வதேச - சுதந்திரமான நம்பகமான விசாரணைக்கும் சிங்கள அரசு உடன்படாமல் தட்டிக் கழிக்கிறது.
  • 9. இலங்கையில், குறிப்பாக வடக்குப் பகுதியிலுள்ள ஹிந்துக் கோயில்கள் எல்லாம் அழிவு நிலையில் உள்ளன.
  • ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் நிலுவையில் உள்ள தீா்மானங்களை இலங்கை திரும்பப் பெறவோ, தன்னை விடுவித்துக் கொள்ளவோ சா்வதேச சட்டங்களின்படி முடியாது என உலகச் சமுதாயம் குரலெழுப்ப வேண்டும்.

நன்றி: தினமணி (06-04-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories