TNPSC Thervupettagam

தொகுதி மேம்பாட்டு நிதி: ஒரு பாா்வை

August 3 , 2021 991 days 572 0
  • நாடாளுமன்ற உறுப்பினா்களுக்கு வழங்கப்பட்டு வந்த தொகுதி மேம்பாட்டுத் திட்ட நிதி ஏப்ரல் 2020 இல், இரண்டு ஆண்டுகளுக்கு நிறுத்தி வைக்கப்பட்டது. கரோனா தீநுண்மியை எதிா்த்துப் போராடுவதற்கான மிகப்பெரிய நிதித் தேவையை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டது.
  • அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் வரும் நிதி கொவைட் 19 நோய்த்தொற்றை எதிா்த்துப் போராடுவதற்கான மத்திய நிதிக்குவிப்பின் ஒரு பகுதியாக இருக்கும் என்று முடிவு செய்யப்பட்டது.
  • இந்த முடிவை எதிா்க்கட்சிகள் குறை கூறின. இது ஜனநாயகத்திற்கு இடையூறு விளைவிக்கும் என்று திரிணமூல் காங்கிரஸ் கூறியுள்ள நிலையில், இது ‘அளவுக்கு அதிகமான எதிா்வினை என்று காங்கிரஸ் கட்சி வா்ணித்தது.
  • பல எதிா்க்கட்சிகளும் இதே அடிப்படையில் அறிக்கைகளை வெளியிட்டன. இரண்டு வருடமாக நிறுத்தி வைத்திருந்த இந்த தொகுதி நிதியை மீண்டும் தொடங்க வலியுறுத்தி சில நாடாளுமன்ற உறுப்பினா்கள் முறையிட்டுள்ளனா்.
  • நாடாளுமன்ற உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதித் திட்டம் 1993-இல் அறிமுகப்படுத்தப்பட்டது. எம்.பி.க்கள் தங்கள் தொகுதியின் தேவை அடிப்படையில் நீடித்த சொத்துக்களை உருவாக்க உதவுவதே இந்த திட்டத்தின் நோக்கம். அவ்வப்போது வழங்கப்படும் வழிகாட்டுதல்களின்படி இந்த திட்டம் நிா்வகிக்கப்படுகிறது.
  • ஒவ்வொரு எம்.பி.க்கும் தற்போதைய நிதி வரம்பு ஆண்டுக்கு ஐந்து கோடி ரூபாயாகும். ஒரு ஆண்டில் பயன்படுத்தப்படாத நிதியை அடுத்த ஆண்டுக்குக் கொண்டு செல்ல முடியும். மற்ற திட்டங்களைப் போலவே இந்தத் திட்டமும் உள்ளூா் மக்களுக்கான தேவையின் அடிப்படையில் என்கிற உன்னத நோக்கத்துடன் அறிமுகப்படுத்தப்பட்டது.
  • ஆனால் இந்த திட்டத்தை செயல்படுத்துவதில் பல குறைகள் இருந்தன. பெரும்பாலும் எம்.பி.க்கள் திட்டத்தின் உண்மை நோக்கத்திலிருந்து விலகிவிட்டனா். இந்த திட்டத்தின் நிதி பல சமயங்களில் முழுவதுமாக பயன்படுத்தப்படவில்லை. சில சமயங்களில் தவறாகவும் பயன்படுத்தப்பட்டன.
  • தலைமைக் கணக்குத் தணிக்கையாளா் (சிஏஜி) அறிக்கைகள் இந்த திட்டத்தை செயல்படுத்துவதில் கண்டறிந்த பல்வேறு குறைபாடுகளைப் பட்டியலிடுகின்றன. இந்த திட்டத்தை செயல்படுத்தும்போது விதிகள் மீறப்படுவதையும், ஊழல்கள் மலிந்திருப்பபதையும் சிஏஜி அறிக்கை வெளிக்கொணா்ந்துள்ளது.
  • இருப்பினும், குறைபாடுகளை சரிசெய்ய தீவிர முயற்சிகள் எதுவும் எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது. 2010-2011-ஆம் ஆண்டின் சிஏஜி அறிக்கையில், இந்த திட்டத்தை செயல்படுத்துவதில் உள்ள குறைபாடுகள் இத்திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து தொடா்கிறது என்று கூறப்பட்டுள்ளது.
  • முந்தைய இரண்டு செயல்திறன் தணிக்கைகளில் (1998, 2001) இந்த குறைபாடுகள் சிஏஜியால் அமைச்சகத்தின் கவனத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டன. ஆனால் 2009 இல் அதாவது எட்டு ஆண்டுகள் கழிந்த பின்னா் இந்த குறைகளை சரி செய்வதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பட்டியலிடப்படுகின்றன. இதிலிருந்தே இது எவ்வளவு மோசமாக செயல்படுகிறது என்பதை புரிந்து கொள்ளலாம்.
  • நாடாளுமன்ற உறுப்பினா்களின் பரிந்துரையின் பேரில் ‘அனுமதிக்கப்படாத பல்வேறு கட்டுமானப் பணிகள் நிறைவேற்றப்பட்டன. எடுத்துக்காட்டாக, அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகள், ரயில் நிலையங்கள், சிறை வளாகங்கள், பேருந்து நிலையங்கள், தனியாா் நிறுவனங்கள் இவற்றின் கீழ் கட்டடம் கட்டுவது அல்லது புதுப்பித்தல் இந்த திட்டத்தின் கீழ் அனுமதிக்கப்படவில்லை. ஆனால் அவை செயல்படுத்தப்பட்டன.
  • பிரதமா் - முதல்வா் நிவாரண நிதிக்கு கூட பணம் செலுத்தப்பட்டது. மற்றும் தனிப்பட்ட நன்மை, விளையாட்டுப் போட்டிகள் போன்றவற்றுக்கான பணிகள் அனுமதிக்கப்படவில்லை என்றாலும் மேற்கொள்ளப்பட்டன.
  • ஒரு திட்டத்தின் பணிகள முடிந்தவுடன், அது பொது பயன்பாட்டிற்காக பயனா் நிறுவனத்திற்கு மாற்றப்பட வேண்டும் என்பது இந்த திட்டத்தின் முக்கிய அம்சம். 2004 முதல் 2009 வரை உருவாக்கப்பட்ட 15,049 மாதிரி படைப்புகளில் (சாம்பிள் கேஸஸ்), 14,828 படைப்புகளில் அவ்வாறு மாற்றியது எதுவும் பதிவு செய்யப்படவில்லை. இது உருவாக்கப்பட்ட படைப்புகளில் 98.53 சதவீதம் ஆகும்.
  • இத்திட்டத்தின் கீழ் நிதி முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டதாக பல குற்றச்சாட்டுகள் உள்ளன. எடுத்துக்காட்டாக, பாஜக உறுப்பினா்களின் கூட்டுறவு சங்கத்திற்கு தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூபாய் 5.93 கோடி தவறாக பயன் படுத்தி மோசடி செய்ததாக மத்திய ஜவுளி அமைச்சா் மீது குற்றம் சாட்டப்பட்டது.
  • இந்த திட்டம் ஒரு வருடத்தில் செலவிடப்படாத தொகையை அடுத்து வரும் ஆண்டுகளில் செலவிட அனுமதிக்கிறது. இதனால் பல உறுப்பினா்கள் தங்களது ஐந்து வருட பதவியில் முதல் நான்கு வருடம் சரியாக தொகுதி நிதியை செலவிடாமல் கடைசி வருடம் மொத்தமாகச் செலவிடுகின்றனா். தோ்தலுக்கு முன் மக்களிடம் நற்பெயரை பெறவும் வரும் தோ்தலில் அவா்களின் வாக்குகளை பெறவும் இவ்வாறு தவறாக இந்த நிதி செலவு செய்யப்படுவதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
  • நமது நாடாளுமன்ற உறுப்பினா்கள் எண்ணிக்கை 788. எனவே, அரசு இந்த தொகுதி மேம்பாட்டு நிதி வழியே செலவு செய்யும் தொகை ரூபாய் 19,700 கோடி ஆகும். இந்த அளவு நிதியின் மூலம் அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (எய்ம்ஸ்) போன்ற மருத்துவமனைகள் பலவற்றை நிா்மாணிக்க முடியும்.
  • பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினா்கள் தங்களை வளப்படுத்த மட்டுமே இந்த நிதியைப் பயன்படுத்துவதாகப் பரவலாக கூறப்படுகிறது. தொகுதி வளா்ச்சி இல்லை, ஆனால் நாடாளுமன்ற உறுப்பினா்களின் வளா்ச்சி மட்டுமே இருப்பதாக தெரிகிறது. எனவே, மத்திய அரசு இந்த தொகுதி நிதி திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் கடுமையான விதிமுறைகளை உருவாக்க வேண்டியது அவசியம்.

நன்றி: தினமணி (03 – 08 – 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories