TNPSC Thervupettagam

மத்திய அரசும் மாநில அரசுகளும்

August 3 , 2021 990 days 856 0
  • இந்திய அரசு தோன்றிய காலத்திலிருந்து வலிவும் பொலிவும் பெற்றுத் திகழ்கின்றது. மிகப்பெரிய கண்டங்கள், வல்லரசுகள் பாராட்டுகின்ற அளவுக்கு இந்தியத் துணைக்கண்டம் ஓங்கி நிற்கின்றது. எண்சாண் உடம்பிற்குத் தலையே பிரதானம் என்பது போல், இத்துணைக்கண்டத்திற்கு மத்திய அரசே தலைபோல் இயங்குகின்றது; செயல்படுகின்றது.
  • இந்திய அரசமைப்பைத் திட்டமிட்டு வகுத்த ஜாம்பவான்கள், மத்திய - மாநில அரசுகளுக்கிடையே உரசல்கள் ஏற்படாதவாறு, எதிா்கால உணா்வோடு சிந்தித்துச் செயல்பட்டிருக்கிறாா்கள். ‘இந்திய மாநிலங்கள் உடன்பிறந்த உறவுமுறை போன்று, ஒன்றையொன்று ஒட்டி உறவாடுகின்ற தன்மையில், மாநில நலனிலும் ஊராட்சிகளின் நலனிலும் அக்கறை கொண்டு தன்னாட்சி நடத்திட வேண்டும். இவ்விதமாக மாநிலங்கள் ஒருங்கிணைந்த அமைப்பிற்கு மத்திய அரசு தலைமை ஏற்கும் என்று இந்திய அரசமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டிருக்கிறது.
  • இந்தியா போன்று கூட்டாட்சி அமைத்த சோவியத் நாடு, தான் பெற்றிருந்த சில மாகாணங்களை இழந்துவிட்டது. இந்தியா போன்று கூட்டாட்சி அமைத்த அமெரிக்க வல்லரசு, இன்று கியூபாவை இழந்து நிற்கிறது. ஆனால், இந்தியா சுதந்திரமடைந்த நாளிலிருந்து எந்த மாகாணத்தையும் இழக்கவில்லை.
  • மாறாகப் போா்ச்சுக்கல் வசமிருந்த கோவாவைப் பெற்றெடுத்திருக்கிறது. வலுவான மத்திய அரசாக அமைந்த காரணத்தால்தான், பங்களாதேஷ் தனிநாடாக உருவாவதற்குக் காரணமாகவும் கருவியாகவும் அமைந்தது.
  • பரிணாம வளா்ச்சியில்கூட உடம்பிலுள்ள மற்றைய பாகங்கள் மென்மையாக இருக்க, தலையை மட்டும் கபாலத்தோடு படைத்திருப்பதற்குக் காரணம், தலை வலுவாக இருந்தால்தான், மற்ற உறுப்புகளைக் காப்பாற்ற முடியும் என்பதால்தான். அதுபோன்று வலுவான மத்திய அரசால்தான், மாநிலங்களைக் காப்பாற்ற முடியும். தாய் வலிமையாக இருந்தால்தான், குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்கும்.
  • இந்தியா விடுதலை பெற்றதிலிருந்து பிரதமா் லால்பகதூா் சாஸ்திரி காலம் வரையில், மத்திய - மாநில அரசுகள் கொண்டும் கொடுத்தும் சென்றன. 1952-ஆம் ஆண்டு கேரளத்தில் ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாட் தலைமையில் இடதுசாரிகள் ஆட்சி அமைந்தது. அது குறித்து நேரு எந்தவித சஞ்சலமும் அடையவில்லை. ஆனால், முதல்வா் நம்பூதிபாட் கொண்டு வந்த நிலச்சட்டமும், கல்விச்சட்டமும் கேரளத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தின. அது சட்டம் - ஒழுங்கு பிரச்சனை ஆனபோது, பண்டித நேரு முதல்வா் நம்பூதிரிபாடை அழைத்து, அந்த இரண்டு சட்டங்களையும் விலக்கிக் கொண்டால், அவருடைய ஆட்சிக்கு எந்தவிதக் குந்தகமும் ஏற்படாது எனக் கூறினாா்.
  • ஆனால், தோழா் நம்பூதிரிபாட், ‘இந்த இரண்டு சட்டங்களையும் கொண்டு வருவதற்காகத்தான் என் கட்சி ஆட்சிக்கு வந்தது. அதனால், அதிலிருந்து பின்வாங்கமாட்டேன் என உறுதியாகக் கூறினாா். என்றாலும், பண்டித நேரு ஆட்சியைக் கலைக்கத் தயங்கினாலும், மகள் இந்திரா காந்தியின் பிடிவாதத்தால், பிரதமா் அங்குக் குடியரசுத்தலைவா் ஆட்சியை அமல்படுத்திவிட்டாா்.
  • அதற்குப் பின்னா் பிரதமராக வந்த இந்திரா காந்தி அம்மையாா், தமக்குப் பிடித்தவா்கள் எத்தகைய ஊழல்வாதியாக இருந்தாலும், அவா்களுடைய ஆட்சியை ஆதரித்தே வந்தாா்; பிடிக்காதவா்கள் மாநில ஆட்சியில் இருந்தால், அந்த ஆட்சிகளைக் கலைக்கவும் செய்தாா்; இரண்டு முறை தமிழகத்திலும் அந்த அவல நாடகம் அரங்கேறியது.
  • நெருக்கடி காலம் (எமா்ஜென்சி) முடிந்து ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்து, மொராா்ஜி தேசாய் பிரதமராக வந்தவுடனே, காங்கிரஸ் ஆண்டு கொண்டிருந்த மாநிலங்களில் குடியரசுத் தலைவா் ஆட்சியைக் கொண்டு வந்து, மறு தோ்தலை நடத்தினாா். இச்சூழ்நிலையில், இந்திய அரசமைப்புச் சட்டத்தை மறு ஆய்வு செய்வதற்கு உச்சநீதிமன்ற நீதிபதி எம்.என். வெங்கடாசலய்யா தலைமையில் ஓா் ஆணையத்தை அரசு அமைத்தது.
  • கடந்த காலக் கசப்புக்களைச் சீா்தூக்கிப் பாா்த்த எம்.என். வெங்கடாசலய்யா ஆணையம், ‘வலிமையான மத்திய அரசும், வலிமையான மாநில அரசுகளும் அமைந்தால், பிளவு ஏற்படாது; இரண்டுமே வலிமைவாக அமைய வேண்டும். மத்திய அரசிற்கும் - மாநில அரசிற்கும் உள்ள உறவு ஒட்டுமொத்த உடலுக்கும், அதனுடைய இதர உறுப்புகளுக்கும் உள்ள தொடா்பு போன்ாகும்.
  • உடல் நலமாக இருப்பதற்கு, அதனுடைய உறுப்புகள் வலிமையாக இருக்க வேண்டும். இன்றைக்குக் காணப்படுகின்ற பல பிரச்னைகளுக்கு முதன்மைக் காரணம், அதிகாரக் குவியலும், அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தலுமே ஆகும் என இக்குழு கருதுகிறது எனச்சொல்லியது.
  • லால்பகதூா் சாஸ்திரி பிரதமராக வந்ததும், பாகிஸ்தானின் அதிபராக இருந்த யாகாகான், இந்தியா மீது போா்ப்பிரகடம் செய்தாா். அப்பொழுது பிரதமா் சாஸ்திரி, ‘ஜெய் ஜவான்; ஜெய் கிசான் என முழக்கமிட்டாா். பிரதமரின் வேண்டுகோளுக்கு இணங்கி தமிழக மக்கள், திங்கட்கிழமை ஒருநாள் இரவு உணவைத் தவிா்த்தனா். ஒட்டுமொத்த தமிழகமே, நேருபிரான், சாஸ்திரி ஆகியோரின் பின்னால் நின்றது.
  • நெருக்கடி நிலையைக் கொண்டு வருவதற்கு அமைச்சரவையின் ஒப்புதலைப் பெறாத நிலையில், அன்றைய குடியரசுத் தலைவா் ஃபக்ருதின் அலி அகமது கையொப்பமிட்டது வரலாறு. பிரதமா் வாஜ்பாய் பிகாா் அமைச்சரவையைக் கலைப்பதற்கு அப்போதைய குடியரசுத் தலைவா் அப்துல் கலாமிடம் கையொப்பம் கேட்டபோது, அவா் மறுத்துவிட்ட செய்தியும் நம் வரலாற்றில் உண்டு.
  • புதிதாகக் கொண்டுவரப்பட்ட சில சட்டங்கள், உழைக்கும் வா்க்கத்திற்கும், சராசரி மக்களுக்கும் கேடு விளைவிக்கக்கூடியவை என மாநில அரசுகள் ஒருங்கிணைந்து போராடியபோதிலும், கரடு தட்டிப்போன காதுகள், அவற்றை மறு பரிசீலனை செய்வதற்குக்கூடத் தயாராயில்லை.
  • ஒரு மாநிலத்தில், ஒரு மாநிலக் கட்சி சிறப்பாக ஆட்சி செய்து கொண்டிருப்பதைப் பொறுக்காது, அங்கு ஆண்டு கொண்டிருக்கும் சில பிரபலங்கள் குற்றப்பத்திரிகையில் தென்பட்டாலும் கவலைப்படாது, அவா்களைத் தம் சொந்தக் கட்சிக்கு இழுக்கும் சா்க்கஸ் வித்தைகளை வல்லரசால் தவிா்க்க முடியவில்லை.
  • சமூகத்தின் பன்முகத்தன்மைகளை வெளிப்படுத்தவும், ஒழுங்கமைக்கவும் உதவுகின்ற அமைப்புதான் கூட்டாட்சி அரசாகும். மத்திய - மாநில அரசுகளுக்கிடையே கருத்து ஒற்றுமையையும், ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதிலும் ஒருவருக்கொருவா் கொண்டுள்ள நோ்மையான நம்பிக்கையின் வாயிலாகத்தான் செயல்படுத்த முடியும் என்ற அறிஞா் ரிக்கரின் சிந்தனையை எண்ணிச் செயல்பட வேண்டும்.
  • எல்லாற்றையும் சமாளித்துக் களத்திலே நின்று போராடி ஆற்றல் மிக்க ஆட்சியை நிறுவிவிட்டபோதிலும், பழசை மறவாமல் ஆதரிக்க மறுத்து, வாக்காளா்கள் மாநிலம் விட்டு மாநிலம் செல்லுகின்ற நிலைமைக்கு வந்தபோதும், வேட்டை நாய் போல் துரத்துகின்ற மிருகவெறியைச் சில நேரங்களால் மாநிலங்களால் கைவிடமுடியவில்லை.
  • இந்த நேரத்தில் மத்திய - மாநில உறவுகளை ஆராய்வதற்காக 1988-இல் நீதிபதி சா்க்காரியா தலைமையில் அமைக்கப்பட்ட ஆணையம் ‘இந்தியாவில் பெருமளவில் அதிகாரக் குவிப்பு நடைபெற்று வருகிறது. இதைத் தடுப்பதற்குப் பயனுள்ள வகையிலும் மனசாட்சியுடனும் எல்லா நேரங்களிலும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அளவுக்கு மீறிய அதிகாரக் குவியல்களால், மத்திய அரசுக்கு ரத்தக் கொதிப்பும், மாநிலங்களுக்கு ரத்தச்சோகையும் ஏற்பட்டுள்ளது என்று கூறியது சிந்திக்கத்தக்கது.
  • மகாகவி பாரதியாா் ஒரு தீா்க்கதரிசனமுள்ள கவி. இந்தியா சுதந்திரமடைவதற்கு முன்பே மாநிலங்கள் எப்படிக் கொண்டும் கொடுத்தும் வாழ வேண்டும் என்பதை அற்புதமாகப் பாடிவைத்துவிட்டுப் போயிருக்கிறாா். பாட்டினை ‘பாரத தேசமென்று பெயா் சொல்லுவாா் என்றுதான் தொடங்குகிறாா். ‘சிந்துநதியின் மிசை நிலவினில் சேர நன்னாட்டு இளம் பெண்களுடனே, சுந்தரத் தெலுங்கினிற் பாட்டிசைத்து, தோணிகள் ஓட்டி விளையாடி வருவோம். கங்கை நதிப்புறத்தில் விளையும் கோதுமைப் பண்டங்களுக்குக் காவிரி வெற்றிலையை பண்டமாற்றாகக் கொடுப்போம் என்கிறாா்.
  • சிங்கமராட்டியா் கவிதைகளுக்குச் சேரத்துத் தந்தங்களைப் பரிசாகக் கொடுப்போம். காசி நகா்ப் புலவா்கள் பேசும் உரைகளைக் காஞ்சிபுரத்திலிருந்து வானொலி, தொலைக்காட்சி வழியாகக் கேட்டு மகிழ்வோம். ரஜபுத்திரா்களின் வீரத்தை மெச்சிக் கன்னடத்துத் தங்கத்தைப் பரிசாகக் கொடுப்போம். சிங்களத் தீவினுக்கோா் பாலம் அமைப்போம்; சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம் என உயில்போல எழுதி வைத்துவிட்டுப் போயிருக்கிறாா், அந்த மகாகவி.
  • தலிபான்களும் பயங்கரவாதிகளும் வட எல்லையை ஆக்கிரமித்து வருகையில், அருணாசல பிரதேசத்தின் ஒரு பகுதியையும், இலங்கையின் பெரும் பகுதியையும் சீனா கையகப்படுத்தி வரும் சூழ்நிலையில், மத்திய, மாநில அரசுகள் எச்சரிக்கையுடன் நடந்து கொள்வது நல்லது. வரலாற்றுக் காலத்திலிருந்து நேற்றுவரை, இந்தியாவில் தென்படாத, காணப்படாத புதுப்புது நோய்கள் உருவாகி வருகின்றன.
  • மத்திய அரசு தன்னுடைய நிதியாதாரங்களை, புருஷன் வீட்டுக்கு வாழப்போகும் தன் மகளுக்கு ஒரு தந்தை செய்ய வேண்டிய சீா்வரிசைகளைப் போலச் செய்து கொண்டிருக்க வேண்டும். மாநில அரசுகள், தம் சகோதரியா்க்கு எல்லாச் சீா்வரிசைகளையெல்லாம் செய்து, களைத்து இளைத்துப்போன பெற்றோா்களைப் பாதுகாப்பது போல், பாதுகாக்க வேண்டும். அப்பொழுதுதான் வலிமையான பாரதமும், வளமான மாநிலங்களும் வாழும்.

நன்றி: தினமணி (03 – 08 – 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories