TNPSC Thervupettagam

வலுப்பெறட்டும் பொதுச் சுகாதாரத் துறை

February 5 , 2023 440 days 268 0
  • சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு, அதிசிறப்பு வாய்ந்த மருத்துவமனைக்கான (State of art) அந்தஸ்தை வழங்குமாறு அதன் முன்னாள் மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்; மிக நியாயமான கோரிக்கை இது. உண்மையில், இந்தியாவில் அதிசிறப்பு அந்தஸ்து பெற்ற வேறு எந்த நிறுவனத்தைவிடவும் இம்மருத்துவமனையின் பணி மிகவும் மதிப்பு வாய்ந்தது.
  • கரோனா காலகட்டத்தில் இங்கு கிடைத்த மருத்துவ வசதிகளும் சிகிச்சைகளும் மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்தன. ஏழை, எளிய மக்களுக்கு மிகப் பெரிய சேவையை இம்மருத்துவமனை வழங்கிவருகிறது. அதே வேளையில், முக்கியமான சில பிரச்சினைகளுக்கு இம்மருத்துவமனை முகங்கொடுக்க வேண்டியிருக்கிறது.

திணறும் மருத்துவர்கள்

  • புறநோயாளிகள் பிரிவுகளில் காய்ச்சல், சளி, தலைவலி போன்ற சாதாரணப் பாதிப்புகளுக்காக வருவோரின் எண்ணிக்கை இம்மருத்துவமனையில் அதிகரித்துக்கொண்டே போகிறது. இதன் காரணமாகவே இங்கு பணிபுரியும் மருத்துவர்கள், தீவிர நோய்களைக் கையாள்வதற்குப் போதுமான நேரம் ஒதுக்க முடியாமல் திணறுகிறார்கள். ஒரு சிறப்புநிலைத் தலைமை மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவில் ஆரம்ப சுகாதார நிலையங்களைப் போல் கூட்ட நெரிசல் ஏற்படுவது சரியல்ல.
  • மேலும், அருகருகே பல அரசு மருத்துவக் கல்லூரிகளும் தனியார் மருத்துவமனைகளும் இருந்தாலும், அதிதீவிர பிரச்சினைக்குள்ளான நோயாளிகள் பெரும்பாலும் கடைசி நேரத்தில் ராஜிவ் காந்தி மருத்துவமனைக்கே - அந்தந்த மருத்துவமனைகளிலிருந்து - அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.
  • இனி பிழைப்பதற்கு வாய்ப்பு குறைவு எனும் நிலையில் நோயாளிகள் அனுப்பப்படும்போது அவர்களைக் கையாளவும், இறப்புகளைப் பதிவுசெய்யவும், அதற்கான நடைமுறைகளைப் பின்பற்றவும் கணிசமான நேரத்தை இம்மருத்துவமனையின் மருத்துவர்கள் ஒதுக்க வேண்டியிருக்கிறது. இவை சென்னை பொது மருத்துவமனையின் அதிதீவிர சிகிச்சை முறைகளின் செயல்பாடுகளைப் பாதிக்கின்றன. இவையெல்லாம், ஒற்றை மருத்துவமனையின் தனிப்பட்ட பிரச்சினைகள் அல்ல என்பதுதான் கவனிக்க வேண்டிய விஷயம்.

பிரச்சினையின் ஊற்றுக்கண்

  • ஒரு மாநிலத்தில் உயர்சிறப்புத் தலைமைப் பொது மருத்துவமனையின் செயல்பாடு என்பது, அந்த மாநிலத்தின் பொதுச் சுகாதார - நோய்த் தடுப்புத் துறையின் செயல்பாடுகளோடு நேரடித் தொடர்புடையது. வலிமையான பொதுச் சுகாதார, நோய்த் தடுப்புக் கட்டமைப்பைக் கொண்டிருக்கும் மாநிலத்தில், அந்த மாநிலத்தின் தலைமை மருத்துவமனையின் செயல்பாடு சிறப்பானதாகவும் சுமைகளற்றும் இருக்க வேண்டியது அவசியம்.
  • தடுப்பூசிகளைப் பரவலாகக் கொண்டுசேர்த்து, பெரும் தொற்றுநோய்களை ஒழித்து, அதனால் ஏற்படக்கூடிய நிதிச் சுமையைத் தடுத்ததுபோல, ஆரம்பகட்டப் பொதுச் சுகாதாரத் திட்டங்களை உருவாக்குவதன் மூலம், அதனால் பின்னாளில் உருவாகக்கூடிய பெரும் நிதிச் சுமையைக் கணிசமாகக் குறைக்க முடியும். அதற்கு நமது பொதுச் சுகாதாரம் - நோய்த் தடுப்புத் துறையை வலுப்படுத்த வேண்டும்.
  • தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, பொதுச் சுகாதாரம் - நோய்த் தடுப்புத் துறை அதன் நூற்றாண்டைக் கொண்டாடும் தருணத்தில் இருக்கிறது. சின்னம்மை, போலியோ போன்ற நோய்களை முற்றிலுமாக ஒழித்தது முதல், தாய் - சேய் இறப்பைக் குறைத்தது, தடுப்பூசித் திட்டங்களைப் பரவலாக்கியது போன்ற பல சாதனைகளைப் பொதுச் சுகாதாரம் - நோய்த் தடுப்புத் துறை கடந்த காலங்களில் செய்திருக்கிறது.
  • இன்றைய சூழலில், பெருகிவரும் புதிய தொற்றுநோய்களும், அதிகரித்துவரும் உயர் ரத்த அழுத்தம், புற்றுநோய், நீரிழிவு போன்ற தொற்றாநோய்களும் மருத்துவத் துறைக்கு மிகப் பெரிய சவாலாக இருக்கின்றன. அது மட்டுமில்லாமல், மாணவர்களிடமும் இளைஞர்களிடமும் அதிகரித்துவரும் மனநலப் பிரச்சினைகள் இன்றைக்குப் பெரும் நெருக்கடியாக உருவெடுத்திருக்கின்றன. இவற்றை எல்லாம் ஆரம்ப நிலையில் கட்டுப்படுத்தினால்தான் தலைமை மருத்துவமனைகளுக்கு இதனால் உருவாகக்கூடிய சுமையைக் குறைத்து, அவற்றின் பணிகளை இன்னும் சீர்படுத்த முடியும்.
  • இதில் கவனம் செலுத்தாவிட்டால், அரசுக்கு ஏற்படக்கூடிய நிதிச் சுமையும் பலமடங்கு அதிகரிக்கும். அதனால் இவற்றையெல்லாம் தடுப்பதற்குரிய சாத்தியங்களைத் தமிழ்நாடு அரசு ஆராய வேண்டும். ‘மக்களைத் தேடி மருத்துவம்’ என்ற சிறப்பான முன்னெடுப்பும்கூட இந்த நோக்கத்தையே அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. இதுபோன்ற திட்டங்கள் பரவலாக்கப்பட வேண்டும்.

செய்ய வேண்டியவை

  • தொற்றாநோய்களான உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், புற்றுநோய், மனநலப் பிரச்சினைகள் போன்றவைதான் பின்னாளில் சுகாதாரத் துறைக்கு மிகவும் சுமையாக இருக்கப்போகின்றன என்கிறது உலக சுகாதார நிறுவனம்.
  • இதற்காக மருத்துவச் சேவைகளை மையமாக்குவதைத் தடுத்து, அவற்றைப் பரவலாக்க வேண்டும். சென்னை பொது மருத்துவமனையில் தீவிரப் பாதிப்புடன் வரும் நோயாளிகளில் பெரும்பாலானவர்கள் இந்தத் தொற்றாநோய்களின் நாள்பட்ட பாதிப்பினால்தான் வருகிறார்கள். இதற்கான ஆரம்பநிலைத் தடுப்பு முறைகளையும், தொடர் சிகிச்சையையும் ஆரம்ப சுகாதார நிலையங்களிலேயே வழங்குவதற்கான திட்டங்களை ஏற்படுத்த வேண்டும்.
  • ஆரம்ப சுகாதார நிலையங்களிலேயே பெரும்பாலான தொற்றுநோய்த் தடுப்புச் சிகிச்சைகளையும், தொற்றாநோய்களுக்கான பரிசோதனைகளையும் மேம்படுத்துவதற்கான நிதியைத் திட்டமிட வேண்டும். அதேபோல, பெருகிவரும் மனநலப் பிரச்சினைகளையும் தொடக்க நிலையிலேயே கண்டறியும் வசதிகளையும், சிகிச்சை வழங்குவதற்கான வசதிகளையும் ஆரம்ப சுகாதார நிலையங்களிலிருந்தே தொடங்க வேண்டும்.

நிதி ஆதாரத்தின் அவசியம்

  • இவற்றுக்காகப் பெரும்பாலும் மத்திய அரசின் தேசிய சுகாதாரத் திட்டம் (National Health Mission) வழியாகக் கிடைக்கும் நிதியைச் சார்ந்திருக்கும் நிலையே தொடர்கிறது. அதனால்தான் இந்தத் திட்டத்தின்வழி நிரப்பப்படும் பணியிடங்கள் எல்லாம் ஒப்பந்த அடிப்படையிலும், இடஒதுக்கீட்டைப் பின்பற்றாமலும் மேற்கொள்ளப்படுகின்றன.
  • மாநில அரசு இதில் பெரிதாகத் தலையிடுவதற்கும் சாத்தியம் இல்லாமல் போகிறது. பொதுச் சுகாதாரத் துறையை வலுப்படுத்த வேண்டுமானால், மாநில அரசு அதற்கென்று தனி நிதி ஆதாரங்களை உருவாக்க வேண்டும். அப்போதுதான் தமிழ்நாட்டுத் தேர்வாணையத்தின் வழியாகப் பணியிடங்களை உருவாக்கி முறையாக அவற்றை நிரப்ப முடியும்.
  • தற்போது தமிழ்நாட்டின் மருத்துவம், மருத்துவக் கல்வி - மக்கள் நல்வாழ்வு அமைச்சகத்தில், மருத்துவக் கல்வி இயக்ககம், மருத்துவப் பணிகள் இயக்ககம், பொதுச் சுகாதாரம் - நோய்த் தடுப்புத் துறை இயக்ககம் ஆகிய மூன்று துறைகள் செயல்படுகின்றன. இவற்றில் பொதுச் சுகாதாரம் - நோய்த் தடுப்புத் துறையைத் தனி அமைச்சகமாக உருவாக்கி, அதற்கென்று நிதி ஒதுக்கினால்தான் பொதுச் சுகாதாரத் துறைக் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்த முடியும். அதன் வழியாகவே மருத்துவத் துறையில் பின்னாளில் உருவாகும் சுமைகளைக் குறைக்க முடியும்.
  • மக்கள் நல்வாழ்வுத் துறையைப் பொறுத்தவரை தமிழ்நாடுதான் அத்தனை குறியீடுகளிலும் மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக இருக்கிறது. அதேபோல பொதுச் சுகாதாரத் துறைக்கென்று தனி அமைச்சகத்தை உருவாக்கி, அதன் வழியாகத் தொற்றுநோய்களையும், தொற்றாநோய்களையும் ஆரம்ப நிலையிலேயே தடுப்பதற்குரிய திட்டங்களை வகுத்துச் செயல்படுத்த வேண்டும். இந்த மாற்றங்கள் சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தொடங்கி ஆரம்ப சுகாதார நிலையங்கள் வரையிலான அனைத்துக் கட்டமைப்புகளிலும் தொடங்கும் என நம்புவோம்.

நன்றி: தி இந்து (05 – 02 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories