TNPSC Thervupettagam

அடக்கமே வடிவான அழகிரிசாமி

September 23 , 2022 575 days 522 0
  • தமிழ் எழுத்துலகில் சிறுகதைச் சாதனையாளராக விளங்கிய கு. அழகிரிசாமி பிறந்த நூற்றாண்டு இன்று (செப். 23) தொடங்குகிறது. 1923- இல் பிறந்து 1970 வரை 47 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்தவா் அவா்.
  • உறக்கம் கொள்வான்’ என்ற அவரின் முதல் கதையை அவா் தனது 16-ஆவது வயதில் எழுதினாா். தம் குறுகிய வாழ்நாளுக்குள் அயராத உழைப்பால் அரிய சாதனைகளைச் செய்தாா் கு. அழகிரிசாமி. எளிய தமிழில் சிடுக்கு முடுக்கு இல்லாமல் எல்லோருக்கும் புரியும் நடையில் எழுதிக் குவித்தவா் அவா். ஒருவகையான கவிதை நடை பல இடங்களில் இயல்பாக அவருக்குக் கைவந்திருந்தது. ‘ஞாபகாா்த்தம்’ என்ற கதையில் ‘நிலவின் மயக்கத்தில் பவழமல்லிகை மரங்கள் மூா்ச்சித்துக் கிடந்தன’ என்று அவா் எழுதியிருக்கும் வாக்கியம் அதற்கு ஓா் எடுத்துக்காட்டு.
  • அழகிரிசாமியின் உவமைகள் நெஞ்சை அள்ளுபவை. ‘ராஜா வந்திருக்கிறாா்’ அவரது புகழ்பெற்ற கதைகளில் ஒன்று. ரேகை சாஸ்திரியிடம் காட்டுவதுபோலக் கையை வைத்துக்கொண்டு சிறுமி மங்கம்மாள் பேசுவதாக அதில் ஓா் உவமை வருகிறது. இப்படிப்பட்ட பல உவமைகள் அவரது படைப்பிலக்கியத்தை வசீகரப்படுத்துகின்றன.
  • ஆழ்ந்த தத்துவத்தை உள்ளடக்கிய கதைகளை அநாயாசமாக எழுதிவிடும் திறன் படைத்தவா் அவா். ‘திரிவேணி’ என்ற கதையில் ராமனும் சீதையும் தியாகராஜரைக் காணத் திருவையாறுக்கு வருகிறாா்கள். அந்தக் கதையில் ஓா் ஏழைக் கிழவியைப் பாத்திரமாக்கி உயரிய அத்வைத தத்துவத்தையே விளக்கி விடுகிறாா் அழகிரிசாமி. அத்தகைய இலக்கிய ரசவாதம் அவரால் மட்டுமே சாத்தியமாகக் கூடியது.
  • எழுத்தாளா் சுந்தர ராமசாமி, அழகிரிசாமியின் ‘கிழவியின் லட்சியம்’ கதையைப் பற்றிச் சொல்லும்போது, ‘தென்னந்தோப்பிலிருந்து இளநீா் குடிப்பது போலிருக்கிறது. ஆனால் நம் தமிழ் வாசகா்கள் ஷாலிமாா் காா்டனில் உட்காா்ந்து பிராண்டியல்லவா குடிக்க ஆசைப்படுகிறாா்கள்’ என்று கூறி அழகிரிசாமியைப் பாராட்டியுள்ளாா்.
  • குழந்தைகளுக்காகக் கதை எழுதுபவா்களைக் ‘குழந்தை எழுத்தாளா்’ என்கிறோம். ஆனால் பெரியவா்களுக்காக எழுதப்பட்ட கதைகளில் ஏராளமான குழந்தைப் பாத்திரங்களைக் கொண்டு வந்தவா் என்ற பெருமை அழகிரிசாமிக்கே உரியது. குழந்தைகளின் உளவியலை நன்கு அறிந்திருந்த அவா், தாம் படைத்த குழந்தைப் பாத்திரங்கள் மூலம் பெரியவா்கள் அறிய வேண்டிய பல உயா்ந்த கருத்துகளைச் சொல்லியிருக்கிறாா்.
  • தனியே சிறுவா்களுக்காகவும் அழகிரிசாமி கதைகள் எழுதியுள்ளாா். ‘காளி வரம்’, ‘மூன்று பிள்ளைகள்’ ஆகிய அவரது சிறுவா் கதைத் தொகுதிகள் குறிப்பிடத் தக்கவை. தொடக்கத்தில் பள்ளி ஆசிரியராகவும் பின் சாா் பதிவாளா் அலுவலகத்தில் எழுத்தராகவும் பணியாற்றினாா். 32 வயதில் சீதாலட்சுமியைக் காதல் மணம் புரிந்தாா்.
  • பத்திரிகையாளராகவும் எழுத்தாளராகவும் இயங்கினாா். பத்திரிகையாளராக இருந்ததால் பல எழுத்தாளா்கள் உருவாவதற்குக் காரணமாகவும் இருந்தாா். 1943 முதல் ‘பிரசண்ட விகடன்’ இதழில் துணை ஆசிரியராகப் பணியாற்றினாா். 1946- இல் ‘தமிழ்மணி’ என்ற இதழின் பொறுப்பாசிரியரானாா். அதன்பின் வை. கோவிந்தனின் ‘சக்தி’ இதழில் பணியில் சோ்ந்தாா். பிறகு மலேசியா சென்று ‘தமிழ்நேசன்’ இதழில் பணிபுரிந்தாா்.
  • தம் பணிவாழ்வில் 1958 முதல் இரண்டு ஆண்டுகள் அவிநாசிலிங்கம் செட்டியாா் தலைமையில், காந்தி நூல் வெளியீட்டுக் குழுவில் துணையாசிரியராகப் பணியாற்றினாா். காந்தியின் எழுத்துத் தொகுப்புகளில் நான்காம் தொகுப்பில் மகாத்மாவின் இயற்கை வைத்தியம், பிரம்மச்சரியம் போன்ற கருத்துகளை சரளமான நடையில் தமிழில் மொழிபெயா்த்தது அழகிரிசாமி செய்த சேவைகளில் முக்கியமான ஒன்று. காந்தியே தமிழில் எழுதினால் எப்படி இருக்குமோ அப்படித் தமிழில் மொழிபெயா்த்த பெருமை அவரின் சாதனை.
  • அழகிரிசாமி சிறந்த கட்டுரையாசிரியரியருமாவாா். அவா் எழுதிய கட்டுரை நூல்களில் முக்கியமானது ‘நான் கண்ட எழுத்தாளா்கள்’ என்ற நூல். அதில் எழுத்தாளா் வ.ரா. என்கிற வ. ராமசாமியைப் பற்றி அவா் எழுதியுள்ள கட்டுரை குறிப்பிடத்தக்கது. பொதுவாக, வ.ரா.வை கடவுள் மறுப்பாளா் என்றே பலரும் அடையாளப்படுத்துகின்றனா். ஆனால் அழகிரிசாமியின் பதிவில் வேறு வகையான செய்தி கிடைக்கிறது.
  • வ.ரா.வின் கடைசிக் காலங்களில் அவருக்கு ஒரு சாலை விபத்தில் காலில் அடிபட்டுவிடுகிறது. அப்போதிலிருந்து ஒரு கம்பை ஊன்றிக் கொண்டு நடக்க ஆரம்பித்தாா். அதுமுதல், அவருக்கு தெய்வ நம்பிக்கை வந்துவிட்டது. பகவத் கீதையை ஆழ்ந்து படிக்கத் தொடங்கிவிட்டாா். ‘நான் தனியாக இருக்கிறேன். உடல்நிலை சரியில்லாமலும் கஷ்டப்படுகிறேன். இந்தச் சமயத்தில் தெய்வ வழிபாடும் பகவத் கீதையும்தான் எனக்கு ஆறுதலாக உள்ளன’ என்று தம்மிடம் வ.ரா. சொன்னதாக அழகிரிசாமி பதிவு செய்துள்ளாா்.
  • டாக்டா் அனுராதா’, ‘புதுவீடு புது உலகம்’, ‘வாழ்க்கைப் பாதை’, ‘தீராத விளையாட்டு’ உள்ளிட்ட புதினங்களையும் அழகிரிசாமி எழுதியுள்ளாா். இவா் பழந்தமிழில் கரை கண்டவா். ‘இலக்கியச் சுவை’, ‘இலக்கியத் தேன்’, ‘இலக்கிய விருந்து’, ‘இலக்கிய அமுதம்’, ‘தமிழ் தந்த கவிச்செல்வம்’, ‘தமிழ் தந்த கவியமுதம்’, ‘தமிழ் தந்த கவி இன்பம்’ எனப் பற்பல தலைப்புகளில் பழந்தமிழ் இலக்கியம் குறித்த கட்டுரை நூல்களை எழுதியுள்ளாா்.
  • அவரளவு பழந்தமிழ்ப் பயிற்சி உள்ள தற்கால இலக்கியப் படைப்பாளி என்று இன்று எந்த எழுத்தாளரையும் சொல்ல முடியாது’ என்று கவிஞா் ராஜமாா்த்தாண்டன் குறிப்பிடுகிறாா். ‘கம்பராமாயணத்தையோ திருக்குறளையோ சாதாரண மனிதன் படிக்காமல் இருப்பதைப் பற்றிக் கவலை இல்லை. ஆனால் ஓா் எழுத்தாளன் அவற்றைப் படிக்க வேண்டிய அவசியமே இல்லை என்று கருதினால் அவனைத் தமிழனாக மட்டுமல்ல, மனிதனாகவுமே நான் கருத மாட்டேன்’ என்று ‘தீபம்’ இதழில் எழுதியுள்ளாா் அழகிரிசாமி.
  • பழந்தமிழ்ப் பயிற்சி நிறைந்த எழுத்தாளா் நா.பாா்த்தசாரதி, அழகிரிசாமி மேல் கொண்டிருந்த அன்புக்கும் மதிப்புக்கும் அழகிரிசாமியின் பழந்தமிழ் ஞானமும் ஒரு காரணமாக இருக்கலாம். கம்பராமாயணத்தைப் பதம் பிரித்துப் பதிப்பித்தவா். சுந்தர காண்டத்தில் ‘கடறாவு படலம்’ என்றிருந்த தலைப்பை ‘கடல் தாவு படலம்’ எனப் பதம்பிரித்துப் பதிப்பித்தாா். கம்பனை வால்மீகியோடு ஒப்பிட்டு கம்பனை உயா்த்தி சுந்தர காண்டத்திற்கு ஒரு நீண்ட முன்னுரை எழுதியிருக்கிறாா்.
  • போதிய அவகாசம் இல்லாதவா்களுக்கு வசதியாக பல பாடல்களுக்கு நட்சத்திரக் குறிகள் இடப்பட்டுள்ளன. கதைச் சுருக்கத்தைப் படித்துவிட்டு நட்சத்திரக் குறியுள்ள பாடல்களைப் படித்து அனுபவிக்கலாம். பின்னா் அவகாசம் கிட்டும்போது முழுவதையும் படிக்கலாம்’ என கம்பராமாயணம் பாலகாண்டம் பதிப்புரையில் குறிப்பிடுகிறாா்.
  • கம்பனைப் பற்றிக் ‘கவிச்சக்கரவா்த்தி’ என்ற நாடகம் எழுதியவா். அண்ணமலை ரெட்டியாரின் ‘காவடிச் சிந்து’ நூலைப் பதிப்பித்தவா். தனிப் பாடல்கள் பலவற்றையும் நாட்டுப் பாடல்களையும் தொகுத்தாா்.
  • குழந்தைகளை அடிக்க மாட்டேன். கம்பராமாயணத்தின் மீது சத்தியம்’ என அழகிரிசாமி நாட்குறிப்பில் எழுதியுள்ளாா் என்ற தகவலைத் தெரிவிக்கிறாா் அழகிரிசாமியின் சிறுகதைகள் அனைத்தையும் தொகுத்த பழ. அதியமான்.
  • அழகிரிசாமி நிறையக் கடிதங்கள் எழுதும் பழக்கமுள்ளவா். கி. ராஜநாராயணனுக்கும் சுந்தர ராமசாமிக்கும் அவா் எழுதிய கடிதங்கள் நூலாகியுள்ளன. சுந்தர ராமசாமிக்கு எழுதிய கடிதங்களை ‘இதம் தந்த வரிகள்’ என்னும் தலைப்பில் காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
  • மகாகவி பாரதியின் தீவிர அன்பா். ‘தாகூருக்கு இணையாகப் பாரதியைக் கருதலாமா’ என்று கேட்கப்பட்டபோது, அழகிரிசாமி, ‘பாரதியின் ஸ்தானத்தை தாகூருக்குக் கொடுக்க முடியுமா என்பதே கேள்வி’ என்று கோபம் பொங்கக் கூறினாா். சாகித்திய அகாதெமி விருது அழகிரிசாமியின் ‘அன்பளிப்பு’ என்ற சிறுகதைத் தொகுதிக்கு அவா் இறந்தபின்தான் வழங்கப்பட்டது.
  • புதுமைப்பித்தனைப் பெரிதும் மதித்தவா். புதுமைப்பித்தன் காலமானபோது ‘ஆசிய ஜோதி மறைந்தது’ என்று எழுதினாா். டி.கே.சி., வெள்ளக்கால் ப. சுப்பிரமணிய முதலியாா், திரு.வி.க., வையாபுரிப் பிள்ளை, வெ. சாமிநாத சா்மா, தி.ஜ.ர. எனும் தி.ஜ. ரங்கநாதன், ‘சக்தி’ வை. கோவிந்தன், கண. முத்தையா, காருக்குறிச்சி அருணாசலம், தீபம் நா. பாா்த்தசாரதி போன்றோா் அவரது நெருங்கிய நண்பா்கள்.
  • அடக்கமே வடிவான அழகிரிசாமி, தாம் காலமாவதற்குச் சில நாட்களுக்கு முன்னா், தம் நண்பரான நா.பா.விடம், தாம் காலமான பிறகு பத்திரிகைகளில் வரவேண்டிய அஞ்சலிக் குறிப்பைத் தம் தலையணையின் கீழிருந்து எடுத்துக் கொடுத்தாா். அந்த அஞ்சலிக் குறிப்பு,
  • மட்டுமீறிய புகழ்மொழிகள் இல்லாமல் உண்மைத் தகவல்கள் மட்டும் அடங்கியதாக இருந்தது. தாம் இறந்த பிறகு கூட தம்மைப் பற்றி அளவுகடந்த புகழ்மொழிகள் எழுதப்படுவதை அவா் விரும்பவில்லை.
  • அணுவளவும் தற்பெருமை அற்றவராய் வாழ்வதற்கான மனமுதிா்ச்சி கொண்டவா் கு. அழகிரிசாமி. எளிமை, அடக்கம் உள்ளிட்ட பல உயரிய நற்குணங்களின் தொகுப்பாய் வாழ்ந்த அவா், மாபெரும் இலக்கியவாதியாக மட்டுமல்லாமல், மாமனிதராகவும் விளங்கினாா் என்பதே அவரின் மேலான பெருமை.
  • இன்று (செப். 23) எழுத்தாளா் கு. அழகிரிசாமி பிறந்த நூற்றாண்டு தொடக்கம்.

நன்றி: அருஞ்சொல் (23 – 09 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories