TNPSC Thervupettagam

உயர்கல்வியில் தாய்மொழிக் கல்வி அவசியம் குறித்த தலையங்கம்

November 23 , 2022 514 days 325 0
  • மத்திய பிரதேசத்தில் கடந்த அக்டோபர் 16-ஆம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில், உயிரி வேதியியல், உடற்கூறியல், மருத்துவ உடலியல் பாடங்கள் ஹிந்தியில் மொழிபெயர்க்கப்பட்டு, அப்புத்தகங்கள் உள்துறை அமைச்சர் அமித் ஷாவால் வெளியிடப்பட்டன. மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட அனைத்துப் படிப்புகளுமே உள்ளூர் மொழியில் கற்பிக்கப்பட வேண்டும் என்கிற தேசிய கல்விக் கொள்கையின் ஓர் அங்கமாக, நாட்டில் முதல் மாநிலமாக மத்திய பிரதேசம் இதை முன்னெடுத்துள்ளது.
  • அவரவர் தாய்மொழியில் படிப்பது நல்ல விஷயமாகத் தோன்றலாம். அதற்கு முன் பல கேள்விகளுக்கு விடை காண வேண்டியுள்ளது.
  • ரஷியா, ஜப்பான், பிரான்ஸ், கியூபா, சீனா, ஜெர்மனி உள்ளிட்ட பல நாடுகளில் அவரவர் நாட்டு மொழிகளில்தான் மருத்துவம் உள்ளிட்ட படிப்புகள் கற்பிக்கப்படுகின்றன என்பது தாய்மொழி ஆதரவாளர்களின் வாதம். ஆனால், இதில் உள்ள மற்றோர் உண்மையையும் நாம் கருத்தில் கொள்ளவேண்டும்.
  • மேலே குறிப்பிட்ட நாடுகளில் சீனாவும், ரஷியாவும்தான் நம்மைவிட பரப்பளவில் பெரிய நாடுகள். சீனாவில் மட்டும்தான் நம்மைவிட மக்கள்தொகை அதிகம். மற்ற நாடுகள் எல்லாம் தமிழ்நாட்டை விட சற்றுக் கூடுதலாகவோ, குறைவாகவோ பரப்பளவும், மக்கள்தொகையும் கொண்ட நாடுகள்.
  • இந்த நாடுகளில் எல்லாம் ஒரே தேசிய மொழி இருப்பதுபோல, நமது நாட்டில் ஒரே தேசிய மொழி கிடையாது. மத்திய பிரதேசத்தை தொடர்ந்து ஹிந்தி பேசும் மாநிலங்களில் ஹிந்தியிலும், ஹிந்தி பேசாத மற்ற மாநிலங்களில் அவரவர் மாநில மொழியிலும் மருத்துவம், பொறியியல் உள்ளிட்டவை கற்பிக்கும் முயற்சி முன்னெடுக்கப்படலாம். அது "மண்ணின் மைந்தர்'களுக்கு வாய்ப்பு என்கிற வாதத்தில் முடிந்து தேச ஒற்றுமைக்கே பாதிப்பை ஏற்படுத்தும்.
  • இப்போது நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் நாட்டின் எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் மாணவர்கள் சேர்க்கை பெற முடியும். ஆனால், உள்ளூர் மொழியில்தான் கல்வி என்பது தீவிரமாக அமல்படுத்தப்படுமானால், அது மாணவர்களுக்கான அந்த வாய்ப்புக்கு முட்டுக்கட்டையாகிவிடும்.
  • மருத்துவத்தைப் பொறுத்தவரை, வகுப்பறைகளில் படிப்பதைவிட பொதுவெளியில் கிடைக்கும் தகவல்களே மருத்துவரை மேம்பட்டவராக ஆக்குகின்றன. சர்வதேச இதழ்கள், ஆய்வுக் கட்டுரைகள் உள்ளிட்டவற்றை மாணவர்கள் படிப்பது அவசியம். ஆங்கில அறிவு இல்லை எனில் இதில் சிக்கல் ஏற்படும். ஒரு குறிப்பிட்ட உள்ளூர் மொழி வழியில் படிப்பவர்கள் அந்த மாநிலத்தைவிட்டு வெளியே செல்வதற்கு தயங்குவார்கள் என்பதுடன், வெளிநாடுகளில் மேற்படிப்பை மேற்கொள்ளும் வாய்ப்பையும் அவர்கள் இழக்கக்கூடும்.
  • அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் 13 உறுப்புக் கல்லூரிகளில் வழங்கப்படும் தமிழ் வழி பொறியியல் (பி.இ.) படிப்புகளில் சேர மாணவர்கள் பெரிதும் ஆர்வம் காட்டவில்லை என்பது தெரியவந்திருக்கிறது. இதுவரை நான்கு சுற்று கலந்தாய்வு நிறைவடைந்துள்ள நிலையில் சிவில் என்ஜினீயரிங் படிப்பில் மொத்தம் உள்ள 360 இடங்களில் 88 இடங்களே (24 %) நிரம்பி இருக்கின்றன. அதேபோன்று, மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படிப்பில் மொத்தம் உள்ள 429 இடங்களில் 84 மாணவர்கள்தான் (20 %) சேர்ந்துள்ளனர்.
  • தமிழ்வழியில் படிப்பவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதில் உள்ள சிரமமும், பொறியியல் படிப்புகளின் மீதான மோகம் குறைந்துள்ளதுமே இதற்கு காரணங்கள் என பேராசிரியர்கள் கூறுகின்றனர். மேற்படிப்புகளுக்கான வாய்ப்பு இருக்காது என்கிற அச்சமும்கூட காரணமாக இருக்கக்கூடும். இதற்குத் தீர்வுதான் என்ன?
  • புரிந்து கொள்வதற்கு எளிது என்பதால் தாய்மொழியில் படிப்பது சிறந்தது என்பது உலகம் முழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்ட கல்வியாளர்களின் கருத்து. ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை தாய்மொழி வழியிலேயே கற்பிக்க வேண்டும் என்று தேசிய கல்விக் கொள்கை -2020 வலியுறுத்துகிறது. இதை கேந்திரிய வித்யாலயா தவிர, அந்தந்த மாநிலங்களில் இயங்கும் அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிகுலேஷன் பள்ளிகள், சிபிஎஸ்இ பள்ளிகளில் முதலில் அமல்படுத்தலாம்.
  • மருத்துவம், பொறியியல் போன்றவற்றில் உள்ளூர் மொழியில் கற்பிப்பது தொடர்பாக ஒரு குறிப்பிட்ட கல்வி நிறுவனத்தில் சிறிய அளவில் முயற்சி செய்து (பைலட் புராஜெக்ட்) அதில் கிடைக்கும் அனுபவத்தின் அடிப்படையில் கருத்தொற்றுமை கண்டு விரிவாக்கம் செய்யலாம். அதுவரை மருத்துவம், பொறியியல் போன்றவை ஆங்கில வழியிலேயே கற்பிக்கப்பட வேண்டும்.
  • மருத்துவ, பொறியியல் பாடங்கள் உள்ளூர் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு மாணவர்களுக்குக் கிடைக்கும்படி செய்யலாம். பயிற்று மொழி ஆங்கிலமாக இருந்தாலும் அந்த மொழிபெயர்ப்புகள் அவர்களுக்கு போதிய புரிதலை ஏற்படுத்தும்.
  • மருத்துவப் படிப்பு ஆங்கில வழியில்தான் கற்பிக்கப்படும் என தேசிய மருத்துவ கவுன்சில் ஏற்கெனவே அறிவித்துள்ள நிலையில், தாய்மொழியில் படிப்பு உடனடியாக அமலாவதற்கு சாத்தியம் இல்லை. ஆங்கிலம் புறக்கணிக்கப்பட்டு தாய்மொழி அல்லது ஹிந்தியிலேயே கற்பிக்க வேண்டும் என்கிற கருத்து, எதிர்பார்க்கும் நன்மைக்கு பதிலாகக் கெடுதலை ஏற்படுத்திவிடலாகாது.
  • முதலில் தாய்மொழியில் சரியாக எழுதவும், பேசவும், படிக்கவும் தெரிந்த தலைமுறையை உருவாக்குவோம். அதற்குப் பிறகு உயர்கல்வியில் தாய்மொழிக் கல்வி குறித்து யோசிப்போம்!

நன்றி: தினமணி (23 – 11 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories