TNPSC Thervupettagam

கேம்பிரிட்ஜ் சமரச ஏற்பாடு இந்தியாவுக்குத் தீர்வாகுமா

September 21 , 2022 554 days 382 0
  • புதிய நாடாளுமன்றக் கட்டிடம் கட்ட வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்விக்கு, வீடமைப்பு-நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி பதில் அளிக்கையில் ‘மக்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கை அதிகரித்தால் இப்போதுள்ள நாடாளுமன்றக் கட்டிடத்தில் அவர்களுக்கு இடம் போதாது’ என்று பதில் அளித்தார். மக்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்தியே ஆக வேண்டும். 130 கோடி மக்களுக்கு 543 பிரதிநிதிகள்தான் இப்போது இருக்கின்றனர். சராசரியாக ஒவ்வோர் உறுப்பினரும் 23 லட்சம் மக்களின் பிரதிநிதியாகச் செயல்படுகிறார். இந்தியாவில் ஒரு தொகுதியின் சராசரி மக்கள்தொகை என்பது  கத்தார் நாட்டின் மொத்த மக்கள்தொகைக்கு இணையானது ஆகும்.
  • அப்படியே இதை ஐரோப்பிய நாடாளுமன்றத்துடன் ஒப்பிட்டுப் பாருங்கள். ஐரோப்பிய நாடாளுமன்றம் என்பது ஒரே நாட்டுக்கு உரியதல்ல - அது தேசிய எல்லைகளைக் கடந்த மக்கள் தொகுதியின் பொதுவான பிரதிநிதித்துவ அமைப்பு. ஐரோப்பாவின் 44.6 கோடி மக்களை அங்கே 705 உறுப்பினர்கள் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். இந்திய மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே இருக்கும் மக்களுக்கு, இந்தியாவில் உள்ள பிரதிநிதிகளின் எண்ணிக்கையைப் போல ஒன்றரை மடங்கு பேர்  நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருக்கின்றனர்!
  • பெருகிவரும் இந்திய மக்கள்தொகைக்கேற்ப மாநிலங்கள் வாரியாக எத்தனை மக்களவைத் தொகுதிகளை அதிகப்படுத்த வேண்டும் என்கிற சவாலான கடமை ஒன்றிய அரசுக்குக் காத்திருக்கிறது.

மாநிலங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினை

  • இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 82வது கூற்றின்படி, மிகச் சமீபத்திய மக்கள்தொகை அடிப்படையில் மக்களவைத் தொகுதிகளின் எல்லைகளை மறுவரையறுப்பது – தொகுதிகள் எண்ணிக்கையைக் கூட்டுவது ஆகியவை மறுசீரமைப்பு ஆணையம் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 1970கள் வரையில் இந்தக் கடமை நிறைவேற்றப்பட்டது. இயல்பாக அதிகரித்த மக்கள்தொகை, இடம்பெயர்ந்தவர்களால் ஏற்பட்ட அதிகரிப்பு ஆகியவற்றுக்கேற்ப மக்களவைத் தொகுதிகளின் எல்லைகள் வரையறைக்கப்பட்டதுடன் எண்ணிக்கையும் கூட்டப்பட்டது. இதனால் மக்கள்தொகை அதிகமுள்ள மாநிலங்களுக்கு அதிகத் தொகுதிகள் கிடைப்பது இயல்பானது. அதேசமயம்இது இந்திரா காந்தி அரசு கொண்டுவந்த மக்கள்தொகைக் கட்டுப்பாடு திட்டத்தின் நோக்கத்துக்கு நேர் முரணாகவும் அமைந்துவிட்டது.
  • ஆகையால், 1976இல் அரசமைப்புச் சட்டத்தில் ஒரு திருத்தம் (42வது திருத்தம்) கொண்டுவரப்பட்டது. 1971 மக்கள்தொகை அடிப்படையில் கடைசியாக  ஏற்படுத்தப்பட்ட மக்களவைத் தொகுதிகள், சட்டப் பேரவைத் தொகுதிகளின் எண்ணிக்கையானது மேற்கொண்டு உயர்த்தப்படாமல் 2001 மக்கள்தொகைக் கணக்கெடுப்பு காலம் வரையில் நிறுத்திவைக்கப்பட்டது. மக்கள்தொகை கட்டுப்பாட்டைத் தீவிரமாக அமல்படுத்திய மாநிலங்களைத் தண்டிக்கும் வகையில் அவற்றின் தொகுதிகளைக் குறைத்துவிடக்கூடாது என்ற நோக்கிலேயே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டது.
  • 2001இல் மீண்டும் இதே பிரச்சினை வந்தபோது, வாஜ்பாய் அரசு அரசமைப்புச் சட்டத்தில் மீண்டும் ஒரு திருத்தம் (84வது சட்டத் திருத்தம்) கொண்டுவந்து 2026 வரையில் இதே எண்ணிக்கை பராமரிக்கப்படுவதை உறுதிசெய்தது. வாக்காளர்கள் எண்ணிக்கைக்கேற்ப மாநிலத்துக்குள் மட்டும் தொகுதிகளின் எல்லைகளை மறுவரையறை செய்துகொள்ள அந்தத் திருத்தம் அனுமதி தந்தது.

தமிழ்நாடும் பிஹாரும்

  • இப்போது என்ன பிரச்சினை ஏற்பட்டது என்றால், தொகுதிகள் இடையே வாக்காளர்கள் எண்ணிக்கை சார்ந்து ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்தன. மக்கள்தொகைக் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிப்பதில் மாநிலங்கள் இடையே ஏற்றத்தாழ்வானது, சில தொகுதிகளில் ஐம்பதாயிரத்துக்கும் குறைவான வாக்காளர்கள், சிலவற்றில் முப்பது லட்சம் வாக்காளர்கள் என்ற அளவுக்கு முரண்பட்ட எண்ணிக்கைகள் உருவாக வழிவகுத்தது.
  • நம்முடைய அரசமைப்பின்படி, தேர்தலில் ‘ஒரு வாக்காளருக்கு ஒரு வாக்கு’ என்ற கொள்கை கடைப்பிடிக்கப்பட்டாலும், உண்மையில் மக்களவைப் பிரதிநிதித்துவத்தில் அது அடிபட்டுப்போய்விடுகிறது, இதனால் வாக்கின் மதிப்பு சிதைந்துவிடுகிறது.
  • 1971இல் தமிழ்நாடு, பிஹார் ஆகிய மாநிலங்களில் மக்கள்தொகை 4.2 கோடியாக இருந்தது. எனவே இரண்டுக்கும் முறையே 39, 40 மக்களவைத் தொகுதிகள் கிடைத்தன. இப்போது பிஹாரின் மக்கள்தொகை, தமிழ்நாட்டு மக்கள்தொகையைப் போல ஒன்றரை மடங்கு. இப்போது மத்திய பிரதேசத்தின் மக்கள்தொகை, தமிழ்நாட்டைவிட சிறிதளவு அதிகம் என்றாலும், அதற்கு 29 மக்களவைத் தொகுதிகள்தான், தமிழ்நாட்டுக்கு 39 என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

இனி என்னவாகும்?

  • தொகுதிகள் மறுவரையறை ஆணையம் 50 ஆண்டுகளுக்குப் பிறகு 2026இல் மீண்டும் தொகுதிகளின் எல்லையை மக்கள்தொகை எண்ணிக்கை அடிப்படையில் திருத்தியமைக்குமாறு கோரப்படும். இந்தப் பணி அனேகமாக 2031இல் நடைபெறக்கூடும். 2031 என்கிற ஆண்டைத் தேர்வுசெய்யக் காரணம், அதற்குள் எல்லா மாநிலங்களுமே மக்கள்தொகையை, இப்போதுள்ள அளவிலேயே பராமரிக்கும் அளவுக்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை எடுத்துவிடும் என்று சொல்லப்படுகிறது.
  • ஆனால், அதற்குள்ளாகவே அரசியல் விமர்சகர்கள் பலர், “புதிய மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகளின் எல்லை திருத்தியமைக்கப்படுவதுடன் எண்ணிக்கையையும் கூட்டும்போது கங்கைச் சமவெளி மாநிலங்களில் தொகுதிகள் எண்ணிக்கை கூடிவிடும்; இதனால் அந்த மாநிலங்களின்  அரசியல் ஆதிக்கம் அதிகரித்துவிடும்” என்று அச்சம் தெரிவிக்கத் தொடங்கிவிட்டனர். உத்தர பிரதேசம், பிஹார், மேற்கு வங்கம் ஆகிய மூன்று மாநிலங்களின் மக்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கை மட்டும் மொத்த எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்காக உயர்ந்துவிடும் என்று கணிக்கின்றனர். இன்றுள்ள ஏற்பாட்டின்படி மாநிலங்களவையிலும் இதேபோல சில மாநிலங்களுக்கு மட்டும் தொகுதிகள் அதிகம் கிடைக்கும்.
  • அடுத்த ஆறு ஆண்டுகளில் மறுவரையறை நடவடிக்கைகள் தொடங்கப்பட வேண்டியிருப்பதாலும், இந்தப் பணி மீண்டும் ஒரு முறை ஒத்திவைக்கப்படக்கூடிய வாய்ப்பு இல்லை என்பதாலும், இதற்குத் தீர்வு காண வேண்டியது அவசரத் தேவையாக இருக்கிறது.

மாற்று ஏற்பாடுகள் என்ன?

  • எந்த மாநிலமும் இப்போதுள்ள தொகுதிகள் எண்ணிக்கையை இழக்காமல் பார்த்துக்கொண்டு, மக்கள்தொகை அதிகமிருந்தும் குறைவான தொகுதிகளைப் பெற்றுள்ள மாநிலங்களுக்கு நியாயம் வழங்கும் வகையில் அவற்றுக்கு மட்டும் தொகுதிகளை அதிகரிக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது.
  • நாடாளுமன்ற விவாதங்களிலும் செயல்பாடுகளிலும் - எண்ணிக்கை காரணமாக – சில மாநிலங்கள் மட்டும் ஆதிக்கம் செலுத்தும் நிலை ஏற்பட்டுவிடக்கூடாது என்று பிற மாநிலங்கள் கவலைப்படுகின்றன. இந்த நிலையில்தான் ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் இடம்பெற்றுள்ள சிறியதும் பெரியதுமான பல நாடுகளும் திருப்திப்படும் வகையில் பிரதிநிதித்துவ முறை அமைந்ததற்குக் காரணமான ‘கேம்பிரிட்ஜ் சமரச ஏற்பாடு’ முறையை, இந்தியாவிலும் கடைப்பிடிக்க முடியுமா என்பதை ஆராய வேண்டியிருக்கிறது.

ஐரோப்பிய ஒன்றியமும் இந்தியாவும்

  • பல அம்சங்களில் ஐரோப்பிய நாடாளுமன்றமும் இந்திய நாடாளுமன்றமும் ஒற்றுமைகளைக் கொண்டிருக்கின்றன. இரண்டிலும் சமூகரீதியாகவும் கலாச்சாரரீதியாகவும் வேறுபட்ட மக்கள் வாழ்கின்றனர். இந்தியாவில் ஆங்கிலமும் இந்தியும் ஒன்றிய அரசின் அதிகாரப்பூர்வ ஆட்சிமொழிகளாகவும் 22 மொழிகள் மாநிலங்களின் ஆட்சிமொழிகளாகவும் கடைப்பிடிக்கப்படுகின்றன. ஐரோப்பிய ஒன்றியத்தில் ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன் ஆகியவை ‘நடைமுறை மொழி’களாக ஐரோப்பிய ஆணையத்திலும் ஐரோப்பிய நிர்வாக அலுவலகங்களிலும் கடைப்பிடிக்கப்படுகின்றன. வயதுவந்த அனைவருக்கும் வாக்குரிமை என்ற அடிப்படையில் 1979 முதல் ஐரோப்பிய நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்கின்றனர்.
  • தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள் ஐந்தாண்டுகள் பதவி வகிக்கலாம். இந்தியா என்பது இறையாண்மையுள்ள ஒரே நாடு. ஆனால், ஐரோப்பிய ஒன்றியமோ - தேசிய எல்லைகளைக் கடந்த – ‘இறையாண்மையை அதிகார ஒப்படைப்பாக பெற்ற’ நிர்வாக அலகு. மக்களை உணர்ச்சிப்பூர்வமாக இணைப்பதிலும் பிரதிநிதித்துவப்படுத்துவதிலும் இது நிச்சயம் முக்கியப் பங்கு வகிக்கிறது.
  • ஆனால், ஐரோப்பிய நாடாளுமன்றத்துக்கு இறங்குவரிசை விகிதாச்சாரப் பிரதிநிதித்துவ அடிப்படையில் 705 தொகுதிகள் எப்படிப் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன என்ற கொள்கையை, இந்திய உள்நாட்டுத்தன்மைக்கேற்ப கடைப்பிடிக்க முடியுமா என்று ஆராயலாம்.

கேம்ப்ரிட்ஜ் சமரச ஏற்பாடு

  • மொத்த மக்கள்தொகையை அந்தந்த நாட்டுக்கு அளிக்கப்படும் நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையால் வகுத்துவரும் இவை, அதற்கு அண்மையில் உள்ள முழு எண்ணாக முதலில் மாற்றுகின்றனர். அதாவதும் அதிக மக்கள்தொகை உள்ள நாடுகளிலிருந்து குறைந்த மக்கள்தொகை உள்ள நாடுகளுக்கு அதை இறங்குவரிசையில் குறைத்துக்கொண்டே செல்கின்றனர். மக்கள்தொகைக் குறைவாக இருக்கும் எந்த நாட்டுக்கும், மக்கள்தொகை அதிகமுள்ள நாட்டைவிட அதிகத் தொகுதிகள் கிடைத்துவிடாமலும் கவனமாக பார்த்துக்கொள்ளப்படுகிறது.
  • இந்த ஏற்பாட்டை மேலும் சீரமைக்க ‘லிஸ்பன் உடன்பாடு’ உதவுகிறது. இதன்படி ஒரு நாட்டுக்கு அதிகபட்ச தொகுதிகள் இவ்வளவு என்பதும், மக்கள்தொகை குறைவாக உள்ள நாட்டுக்கு குறைந்தபட்ச தொகுதிகள் இவ்வளவு என்பதும் தீர்மானிக்கப்பட்டுவிடுகிறது. உதாரணமாக, ஜெர்மனிக்கு அதிகபட்சம் 96 தொகுதிகள், மால்டா, எஸ்தோனியா, லக்சம்பர்க், சைப்ரஸ் ஆகிய நாடுகளுக்கு தலா 6 தொகுதிகள் மட்டுமே.
  • ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் அரசமைப்புச் சட்ட விவகாரங்களுக்கான குழு, கணித வல்லுநர்களை அழைத்து ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் அனைத்து நாடுகளும் திருப்தியடையும் விதத்திலும் பொருத்தமாகவும் பிரதிநிதித்துவம் கிடைக்க ஒரு வழியைக் காணுமாறு பொறுப்பை ஒப்படைத்தது. அந்தத் தீர்வு நீண்ட காலத்துக்கு நிலைத்திருக்க க்கூடியதாகவும், எந்த நாட்டுக்கும் சாதகமாகவோ – பாதகமாகவோ அமையாமலும் இருக்க வேண்டும் என்று நிபந்தனையும் விதிக்கப்பட்டது. இதுவே 2011இல் வெளியிடப்பட்ட ‘கேம்பிரிட்ஜ் சமரச ஏற்பாடு’ ஆகும்.
  • லிஸ்பன் உடன்படிக்கை ஏற்படுத்திய அதிகபட்ச – குறைந்தபட்ச தொகுதிகள் என்ற நிபந்தனைக்கும் உள்பட்டே ‘கேம்பிரிட்ஜ் சமரசம்’ வடிவமைக்கப்பட்டது. இது தொடர்பான பரிந்துரை இரண்டு செயல்களைக் கொண்டது. முதலாவது ஒவ்வொரு நாட்டுக்கும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான தொகுதிகளை நிர்ணயித்தது. அதற்கடுத்த கட்டத்தில் அந்தந்த நாட்டின் மக்கள்தொகைக்கேற்ப மேல்நோக்கிய வரிசையில், அடுத்த முழு எண்ணுக்கு கொண்டு செல்லப்பட்டு இறுதிசெய்யப்பட்டது. இந்தக் கணக்கீட்டில் அதிகபட்ச மக்கள்தொகையுள்ள நாடு, குறைந்தபட்ச மக்கள்தொகையுள்ள நாடு என்ற அம்சம் குறித்துக் கவலைப்படத் தேவையில்லாமல் ‘லிஸ்பன் உடன்பாடு’ செய்துவிட்டது.

நியாயமான பிரதிநிதித்துவம்

  • பல ஐரோப்பிய நாடுகள் தங்களுடைய சொந்த நாடாளுமன்றங்களில் ஒவ்வொரு கட்சியும் தேர்தலில் பெறும் மொத்த வாக்குகளின் எண்ணிக்கைக்கேற்ப தொகுதிகளை வழங்கும் ‘விகிதாச்சாரப் பிரதிநிதித்துவ முறை’யைக் கடைப்பிடிக்கின்றன. அமெரிக்காவிலோ மக்கள்தொகை எவ்வளவாக இருந்தாலும் ஒவ்வொரு மாநிலத்துக்கும் நாடாளுமன்றத்தில் தலா இரண்டு உறுப்பினர்கள்தான் என்ற ‘சமத்துவக் கொள்கை’ பின்பற்றப்படுகிறது. இந்த இரண்டுக்கும் இடைப்பட்ட நிலையில் இந்திய நாடாளுமன்றம் ஒரு தீர்வைக் காணலாம். அதை ‘கேம்பிரிட்ஜ் சமரச ஏற்பாடு’ அடிப்படையிலேயே மேற்கொள்ளலாம்.
  • ஐரோப்பிய நாடாளுமன்றம் இப்படி ஒரு தீர்வைக் கண்டிருந்தாலும் இதிலும் குறை காணும் பல அறிஞர்களும் இருக்கின்றனர். இது ‘சமத்துவமற்ற நாடாளுமன்றம்’ என்கிறார்கள் அவர்கள். சிறிய நாடுகளுக்கு அதிகப் பிரதிநிதித்துவமும் பெரிய நாடுகளுக்குக் குறைந்த பிரதிநிதித்துவமும் கிடைத்திருப்பதால் ஜனநாயக அடித்தளக் கட்டுமானமே பற்றாக்குறையில் தொடங்குகிறது என்கின்றனர். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலகிய பிறகு, நாடுகளுக்கு இடையில் சமநிலையைப் பராமரிக்க சில திருத்தங்களைச் செய்யலாம் என்றும் யோசனை கூறப்பட்டுள்ளது. மக்கள்தொகைக்கேற்ப பிரதிநிதித்துவம் இல்லை என்று கருதும் பெரிய நாடுகளுக்குக் கூடுதலாக ஒன்று முதல் ஐந்து எண்ணிக்கையுள்ள தொகுதிகளை வழங்கலாம் என்றும் யோசனை கூறப்பட்டுள்ளது. ஆனால், இந்த யோசனை நிராகரிக்கப்பட்டுள்ளது.
  • இந்திய மாநிலங்களுக்கிடையே மனக்கசப்பு இல்லாமல் – அதேசமயம் அவற்றின் மக்கள்தொகை, மக்கள்தொகையைக் கட்டுப்படுத்துவது உள்ளிட்ட திட்டங்களில் அவற்றின் செம்மையான பங்களிப்பு ஆகியவற்றை ஊக்குவிக்கும் அடிப்படையில் பொருத்தமாக தொகுதிகளை வழங்க வேண்டும்.
  • இதற்கு ‘கேம்பிரிட்ஜ் சமரச ஏற்பாடு’ உத்தியையோ அதைப் போன்ற ஒன்றையோகூட ஏற்கலாம். ஆனால், நாடாளுமன்றத் தொகுதிகள் மறுவரையறை – எண்ணிக்கை அதிகரிப்பு ஆகிய சீர்திருத்தங்களைத் துணிச்சலுடன் மேற்கொள்ளும் அரசியல் உறுதி முதலில் தேவை. ஏனென்றால், இதனால் பாதிக்கப்படுவதாகக் கருதும் மாநிலங்கள் அல்லது அரசியல் கட்சிகள் இதை மக்கள் முன் சொல்லி, அவர்களைத் திரட்டிப் போராட்டங்களை நடத்தும். நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தில் சீர்திருத்தம் செய்ய இந்த வாய்ப்பை நாடு பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
  • சிறிய மாநிலங்களின் நலன்கள் பாதுகாக்கப்படும் அதேவேளையில் மக்கள்தொகைக்கு ஏற்ற பிரதிநிதித்துவமும் நம் நாடாளுமன்றத்தில் நிலவ வேண்டும்.

நன்றி: அருஞ்சொல் (21 – 09 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories