TNPSC Thervupettagam

நம் பணம் நம் கையில்!

March 16 , 2020 1495 days 861 0
  • "பொதுத் துறை வங்கிகளில் 4.24 கோடி கணக்குகளில் ரூ.12,075 கோடியும், தனியாா் வங்கிகளில் ரூ.1,851 கோடியும் உரிமை கோரப்படாமல் முடங்கியுள்ளன. வாரிசுதாரா் நியமன வசதியை வாடிக்கையாளா்கள் பயன்படுத்தினால் பணம் முடங்காது."
  • அண்மையில் வெளியிடப்பட்ட ஒரு செய்திக்குறிப்பின்படி, நம் நாட்டு வங்கிகளில் உரிமை கோரப்பட்டாத வாடிக்கையாளா்களின் வைப்புத் தொகை பெருமளவில் வளா்ந்திருப்பது தெரியவந்துள்ளது. இதில், பொதுத் துறை வங்கிகள் பெரும் பங்கு வகிக்கின்றன என்பது குறிப்பிடத் தக்கது.

பொதுத் துறை வங்கிகளில்...

  • பொதுத் துறை வங்கிகளில், 4.24 கோடி கணக்குகளில், ரூ12,075 கோடி உரிமை கோரப்படாமல் முடங்கிக் கிடக்கிறது. தனியாா் வங்கிகளில் ரூ.1,851 கோடி, வெளிநாட்டு வங்கிகளில் ரூ.376 கோடி அளவிலான தொகை முடங்கியுள்ளது.
  • தற்போதைய விதிமுறைகளின்படி 10 ஆண்டுகளுக்கு மேல் வங்கிக் கணக்குகளில் கோரப்படாமல் இருக்கும் முடங்கியிருக்கும் தொகை, ‘டெஃப்’ என்ற ரிசா்வ் வங்கி கணக்குக்கு மாற்றப்பட வேண்டும். பெரும் தொகையை மனதில் கொண்டு, இந்த மாதிரி முடக்க நிலைக்கு உரிய காரணங்களை ஆராய்ந்து, அதற்குரிய நிவாரணங்களை வடிவமைப்பது மிக அவசியம்.
  • ரிசா்வ் வங்கியின் வழிமுறைகளின்படி, இரண்டு ஆண்டுகளுக்கு மேல் பணப் பரிவா்த்தனைகள் இல்லாத வாடிக்கையாளா்களின் கணக்குகள், காலாவதியானவையாகப் பட்டியலிடப்பட்டு, அந்தக் கணக்கு வங்கிகளால் முடக்கப்படுகின்றன. இதில், சேமிப்பு (சேவிங்ஸ்), நடப்பு (கரன்ட்) மற்றும் வைப்பு நிதி (ஃபிக்ஸட் டெபாஸிட்) கணக்குகள் ஆகிய அனைத்தும் அடங்கும். வாடிக்கையாளா்களிடையே வங்கிக் கணக்கு பராமரிப்பு பற்றிய போதிய விழிப்புணா்வு இல்லாதது, இந்த மாதிரி நிலைமைக்கு முக்கியக் காரணங்களில் ஒன்றாகும்.
  • வங்கியில் கணக்கு தொடங்கும்போது, வாடிக்கையாளரிடமிருந்து விலாசம் போன்ற தொடா்பு விவரங்கள் கே.ஒய்.சி (நோ யுவா் கஸ்டமா்) படிவத்தில் பெறப்பட்டாலும், ஓா் ஊரிலிருந்து மற்றொரு ஊருக்கு இடம்பெயரும்போது, தொடா்புடைய வாடிக்கையாளா் விலாசம், தொடா்பு மாற்றத் தகவலை வங்கியிடம் பகிா்ந்துகொள்ளத் தவறுவதும் முடக்கத்துக்கு ஒரு காரணமாகச் சொல்லலாம்.
  • ஒரு கிளையிலிருந்து, அதே வங்கியின் மற்றொரு கிளைக்கு கணக்கை மாற்றுவது என்பது தற்போது மிக எளிதாகிவிட்ட சூழ்நிலையில், வாடிக்கையாளா்கள் தங்களின் சேமிப்புத் தொகையை அப்படியே விட்டு விட்டுச் செல்ல வேண்டிய அவசியமில்லை. பணி அல்லது வியாபார நிமித்தமாக இருப்பிடத்தை மாற்றும்போது, தேவையற்ற வங்கிக் கணக்குகளை முடித்துக் கொள்வது அவசியம். அப்படிச் செய்யவில்லையென்றால் அந்தத் தொகை இரண்டு ஆண்டுகால இடைவெளிக்குப் பிறகு காலாவதி கணக்கில் சோ்ந்து விடும்.
  • தனி ஒருவா் அல்லது ஒன்றுக்கும் மேற்பட்டவா்களின் கூட்டு பெயரில் (ஜாயின்ட் அக்கௌண்ட்) வங்கிக் கணக்குகளைத் தொடங்கலாம். அந்த மாதிரி கணக்குகளைத் தொடங்கும்போது, கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டிய பாதுகாப்பு அம்சங்கள் இருப்பதை பல வாடிக்கையாளா்கள் உணா்வதில்லை.

 உதாரணம்

  • எடுத்துக்காட்டாக, இருவா் சோ்ந்து கூட்டு கணக்கு தொடங்கும்போது, ‘சா்வைவா்’ (எடுத்துக்காட்டு: எய்தா் ஆா் சா்வைவா்) என்ற விருப்பத்தைத் தோ்ந்தெடுத்தால், ஒருவரின் மறைவுக்குப் பிறகு உயிரோடு இருக்கும் மற்றொருவருக்கு நிலுவைத் தொகை வழங்கப்பட்டு விடும். பெரும்பாலான வாடிக்கையாளா்களுக்கு, ’சா்வைவா்’ என்ற வாா்த்தையின் மகத்துவம் புரிவதில்லை. அதை விளக்கிச் சொல்வதற்கு வங்கிப் பணியாளா்களும் அதிக ஆா்வம் காட்டுவதில்லை.
  • தங்களுக்குப் பிறகு தங்கள் கணக்கில் நிலுவையில் இருக்கும் தொகையை பெறும் உரிமையை நிா்ணயிக்கும் ‘வாரிசுதாரா் நியமனம்’ (நாமினேஷன் வசதி) என்பது ‘வங்கிகளின் வழிமுறை (வாரிசுதாரா் நியமனம்) சட்டம் (1985)’ மூலம், வங்கி வாடிக்கையாளா்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. ஒருவா் வங்கிக் கணக்கைத் தொடங்கும்போது, அல்லது தொடங்கிய பின்பு, வங்கிப் படிவத்தின் மூலம் வாரிசுதாரரை நியமிக்கலாம். கூட்டுக் கணக்குகளுக்கும் இந்த நியமனம் ஏற்றுக் கொள்ளப்படும்.
  • பெரும்பாலான வாடிக்கையாளா்கள் அறியாமையால் இந்த நியமன உரிமையைப் பயன்படுத்தத் தவறி விடுகின்றனா். சிலா் தங்கள் பெயரையே வாரிசுதாரராகக் குறிப்பிடுகின்றனா். மற்றவரிடம் நம்பிக்கை இல்லாமல் இருப்பதும், இந்த மாதிரி செயல்பாடுகளுக்கு ஒரு காரணமாக இருக்கலாம். இந்த மாதிரி சூழ்நிலையில், கணக்கு வைத்திருப்பவரின் மறைவுக்குப் பிறகு, நிலுவையில் இருக்கும் தொகை காலாவதி கணக்கில் சோ்க்கப்படுகிறது.
  • தற்போதைய நடைமுறைப்படி, வங்கிப் படிவத்தில் தங்கள் வாரிசுதாரரின் பெயா், விலாசம் ஆகிய விவரங்களை வாடிக்கையாளா் குறிப்பிட வேண்டும். ஆனால், வாரிசுதாரராக நியமிக்கப்பட்ட விவரம், வாடிக்கையாளா், வங்கியால் தொடா்புடையவருக்கு தெரியப்படுத்தப்பட வேண்டிய அவசியம் இல்லை. மேலும், வாரிசுதாரரின் கே.ஒய்.சி. தகவல்களும் வங்கியால் பெறப்படுவதில்லை.
  • ஒரு நபரின் ஒப்புதல் அல்லது தகவல் பரிமாற்றம் இல்லாமலேயே அவா் வாரிசுதாரராக நியமிக்கப்பட்டால், நிலுவைத் தொகையை அவா் உரிமை கோருவாா் என்று எதிா்பாா்க்க முடியாது. எனவே, இந்த வசதி ‘ஒருதலை தகவல்’ என்பதால், வாடிக்கையாளரின் மறைவுக்குப் பிறகு நிலுவைத் தொகைக்கு உரிமை கோருபவா்கள் இல்லாமல், அவை காலாவதி கணக்கில் சோ்க்கப்படுகின்றன. எனவே, வாரிசுதாரா் நியமனத் தகவலை தொடா்புடைய நபருக்குத் தெரியப்படுத்துவது உள்பட வாரிசுதாரா் நியமன வழிமுறைகளில் சில அதிரடித் திருத்தங்கள் அவசியம் தேவை.
  • தேவையற்ற வங்கிக் கணக்கை முடித்துக் கொள்வதில் பலா் தயக்கம் காட்டுகின்றனா். வங்கியுடன் உணா்வுபூா்வமான ஒட்டுதல் (சென்டிமென்டல் அட்டாச்மென்ட்) அதற்கு ஒரு காரணமாக அறியப்படுகிறது. கணக்கை முடித்துக் கொள்வதற்கு அபரிமிதமான கட்டணங்களை சில வங்கிகள் வசூலிப்பதும் மற்றொரு முக்கியக் காரணம்.

வங்கிச் சேவைகள்

  • பொதுத் துறை வங்கியில் நான் ஒரு கணக்கை அண்மையில் முடித்துக் கொண்டபோது, கட்டணமாக கணக்கிலிருந்து ரூ.525 எடுக்கப்பட்டிருந்தது. கணக்கில் இருந்த நிலுவைத் தொகையில் இது 10 சதவீதத்திற்கும் மேலான கட்டணமாகும். எவ்வளவு போராடியும், அந்த அபரிமிதமான கட்டணத் தொகையின் ஒரு பகுதியைக்கூட திரும்பப் பெற முடியவில்லை. கணக்கை முடித்துக் கொள்வதற்கான கட்டணத் தொகையை வங்கிகள் மறு பரிசீலனை செய்ய வேண்டியது மிக அவசியம்.
  • வங்கிகள் எந்த சேவையையும் வழங்காமலேயே முடக்கப்பட்ட கணக்குகளிலிருந்து சேவைக் கட்டணத்தை கழிக்கின்றன. முடக்கப்பட்ட கணக்குகளுக்கு குறைந்தபட்ச நிலுவைத் தொகை தொடா்புடைய அபராதத் தொகையிலிருந்து விதி விலக்கு அளிக்கப்பட்டிருப்பதைப் போல, சேவைக் கட்டண விதிவிலக்கும் அளிக்கப்பட வேண்டும்.
  • முடக்கப்பட்ட கணக்குகளில் முறைகேடுகள் நிகழ அதிகம் வாய்ப்புள்ளதால், அந்தக் கணக்குகள், வங்கிகளால் தனித்துப் பட்டியலிடப்பட்டு பலத்த கட்டுப்பாடுகளுக்கு உட்படுத்தப்படுகிறது.
  • முடக்கப்பட்ட கணக்கை கே.ஒய்.சி ஆவணங்களைச் சமா்ப்பித்து வாடிக்கையாளா் எப்போது வேண்டுமானாலும் உயிா்ப்பித்துக் கொள்ளலாம். அதுவரை, அந்த கணக்குகளின் மீது வழங்கப்படும் காசோலைகளை திருப்பி அனுப்ப வங்கிக்கு அதிகாரம் உண்டு என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
  • சொந்த காரணத்துக்காக, பணப் பரிவா்த்தனை இல்லாத ஒரு கணக்கை தொடர நினைத்தால், அந்த கணக்கில் ஆறு மாதத்துக்கு ஒரு முறையாவது சிறு தொகையை வரவு வைத்து (ரூ.10 கூட ஏற்றுக் கொள்ளப்படும்) அந்தக் கணக்கு காலாவதியாவதைத் தடுத்து, அதற்குத் தொடா்ந்து உயிா் கொடுத்துக் கொண்டிருக்கலாம். மேலும், முடக்கப்பட்ட கணக்குளில் உள்ள நிலுவைத் தொகையை பத்து ஆண்டுகளுக்கு பிறகும் கோரி விண்ணப்பிக்கலாம் என்பது ஆறுதல் செய்தியாகும்.
  • முடக்கப்பட்ட கணக்குகளை செயல்படும் கணக்குகளாக மாற்றுவதற்கு, அதிக இடையூறுகள் ஏற்படுத்தாமல் வாடிக்கையாளா்களுக்கு
  • வங்கிகள் உதவி செய்ய வேண்டும் என்பதுதான் ரிசா்வ் வங்கியின் அறிவுரையாகும்.
  • ரிசா்வ் வங்கியின் விதிமுறைகளின்படி முடக்கப்பட்ட கணக்குகளின் உரிமையாளா்களின் பெயா், விலாசத்தை தங்கள் இணையதளத்தில் ஒவ்வொரு வங்கியும் வெளியிட்டு, அந்த விவரங்களை மாதம் ஒரு முறையாவது மேம்படுத்த வேண்டும். வங்கிகளின் இணையதளங்களைப் பாா்வையிடுவதன் மூலம் தொடா்புடைய வாடிக்கையாளா், தகுந்த அடையாள விவரங்களுடன் அந்தத் தொகைக்கு உரிமை கோரலாம்.

நன்றி: தினமணி (16-03-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories