TNPSC Thervupettagam

நீதிபதிகள் நியமனத்தில் ஏன் வேண்டும் மாற்றம்

January 29 , 2023 446 days 319 0
  • நீதிபதிகள் நியமன அதிகாரம் பற்றிய சர்ச்சைகள் சூடுபிடித்துள்ளன. அப்பிரச்சினைக்குள் செல்வதற்கு முன் உயர் நீதி அமைப்பில் நீதிபதிகள் நியமனம் குறித்து அரசமைப்புச் சட்டம் என்ன சொல்கிறது, அது எவ்வாறு மாற்றப்பட்டுள்ளது என்பதைப் பார்க்கலாம்.
  • இந்திய அரசமைப்பு சட்டத்தின் பிரிவு 124(2)இன்படி, உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கான நியமன உத்தரவை உச்ச நீதிமன்ற நீதிபதிகளையும், அவர் எந்த மாநிலத்திலிருந்து நியமிக்கப்படுகிறாரோ அம்மாநில உயர் நீதிமன்றத்தையும் கலந்தாலோசித்து குடியரசுத் தலைவர் வழங்குவார்.
  • அதேபோல் அரசமைப்புச் சட்டப்பிரிவு 217(1)இன்படி குடியரசுத் தலைவர் இந்தியத் தலைமை நீதிபதியையும், மாநில ஆளுநரையும், மாநிலத் தலைமை நீதிபதியையும் கலந்து ஆலோசித்து உயர் நீதிமன்ற நீதிபதிகளை நியமிப்பார். இது தவிர அரசமைப்புச் சட்டத்தில் வேறெந்த வழிமுறைகளும் கூறப்படவில்லை. அரசமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு, முதல் 20 ஆண்டுகளில் பெரிய பிரச்சினைகள் எதுவும் எழவில்லை.

அரசின் தலையீடு

  • ஆனால், 1973இல் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி நியமன விவகாரத்தில் மூன்று மூத்த நீதிபதிகளின் பெயர்களைப் புறக்கணித்து, நான்காவது இடத்திலிருந்த நீதிபதி ஏ.என்.ரே என்பவரை மத்திய அரசு நியமித்தது. இதனால் மூன்று மூத்த நீதிபதிகளும் தங்களது பதவியை ராஜிநாமா செய்தனர்.
  • இதையடுத்து, நீதித் துறை நியமனங்களில் அரசின் தலையீட்டைத் தடுக்க வேண்டுமென்ற கருத்து மேலோங்கியது. எனவே, இது குறித்த பிரச்சினையைப் பொதுநல வழக்காகக் கருதி உச்ச நீதிமன்றம் தீர்ப்புகளை வழங்க ஆரம்பித்தது. அதில் மூன்று தீர்ப்புகள் ‘நீதிபதிகள் பிரச்சினை குறித்த வழக்குகள்’ என்று அழைக்கப்படுகின்றன.
  • நீதிபதிகள் நியமன விவகாரம் சார்ந்த இந்த வழக்குகளில் நீதித் துறையின் கட்டுப்பாட்டை உச்ச நீதிமன்றம் படிப்படியாக அதிகரித்தது; கடைசியாக விசாரிக்கப்பட்ட 1993 (இரண்டாம் நீதிபதிகள் நியமன வழக்கு), 1998 (மூன்றாம் நீதிபதிகள் நியமன வழக்கு) ஆகியவற்றின் மூலம் நீதிபதிகள் நியமன அதிகாரத்தை நீதிபதிகளே தக்கவைத்துக் கொண்டதுடன், அரசின் பங்கை முற்றிலும் ஒதுக்கி வைத்துவிட்டனர்.
  • நீதிபதிகள் பரிந்துரைத்தால் அப்பெயரை அரசு ஏற்றுக்கொண்டு குடியரசுத் தலைவருக்கு ஆலோசனை வழங்க வேண்டும் என்பதாக அந்தத் தீர்ப்பு இருந்தது. முதன்முறையாக ‘கொலீஜியம்’ நியமன நடைமுறை கொண்டுவரப்பட்டது.

கொலீஜியத்தின் செயல்பாடுகள்

  • கொலீஜியம்’ என்பது உயர் நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்கும்போது சம்பந்தப்பட்ட உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியையும், அவருக்கு அடுத்தபடியாக உள்ள மூத்த நீதிபதிகள் இருவரையும் உள்ளடக்கியது. இந்த கொலீஜியம் மட்டுமே உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கான பெயர்களைப் பரிந்துரைக்க முடியும். அது குறித்து மாநில அரசு கருத்து தெரிவிக்கலாம்; பரிந்துரைப் பட்டியலில் உள்ளவர்கள் பற்றிய அறிக்கையை மத்திய அரசுக்கு மத்திய உளவுத் துறை (IB) அனுப்பி வைக்கும். மாநில உயர் நீதிமன்றங்கள் அனுப்பிய பெயர்களை இதேபோல் உச்ச நீதிமன்றத்தில் உள்ள கொலீஜியம் பரிசீலிக்கும்.
  • மேலும், சம்பந்தப்பட்ட மாநிலத்திலிருந்து உச்ச நீதிமன்றத்தில் இருக்கும் நீதிபதிகளின் கருத்தும் பெறப்படும். மத்திய அரசு குறிப்பிட்ட பெயர் குறித்து ஆட்சேபம் தெரிவித்தால், மீண்டும் அப்பெயரை உச்ச நீதிமன்றத்தின் கொலீஜியத்தின் பரிசீலனைக்கு அனுப்புவார்கள். உச்ச நீதிமன்றம் அதை ஏற்றுக்கொள்ளாமல் தங்களது பரிந்துரையைமீண்டும் வலியுறுத்தினால் அப்பெயரை மத்திய அரசு ஏற்றுக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.
  • இதே போல் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் உச்ச நீதிமன்றத்தின் முதல் ஐந்து நீதிபதிகள் அடங்கியதே கொலீஜியம் ஆகும். இப்படிப்பட்ட கொலீஜியம் நடைமுறை அரசமைப்புச் சட்டத்திலேயே கூறப்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது. மேலும், தனக்கான ஓர் அதிகாரத்தைத் தமது தீர்ப்புகள் மூலம் உச்ச நீதிமன்றம் தானாகவே எடுத்துக்கொண்டது. ‘நீதித் துறையின் சுதந்திரத்தைப் பாதுகாக்க’ என்று இந்த ஏற்பாடு குறித்து நீதித் துறை கூற முற்பட்டது.

அரசு செய்த மாற்றம்

  • 2014இல் பாஜக தலைமையிலான மத்திய அரசு அமைந்த பிறகு நாடாளுமன்றத்தில் அரசமைப்பு 99ஆவது சட்டத் திருத்தம் நிறைவேற்றப்பட்டு, உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் கடைப்பிடிக்கப்பட்டு வந்த நியமன முறைகள் மாற்றப்பட்டன. புதிதாக ஏற்படுத்தப்பட்ட பிரிவு 124A மற்றும் 217ஆம் பிரிவில் கொண்டுவரப்பட்ட திருத்தத்தின்படி, தேசிய நீதித் துறை நியமன ஆணையம் புதிதாக உருவாக்கப்பட்டது.
  • தேசிய நீதித் துறை நியமன ஆணையம் நிரந்தரமானது. அதற்கென்று தலைமைச் செயலகம் ஏற்படுத்தப்படும். இந்தியத் தலைமை நீதிபதி, உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதிகள் இருவர், மத்திய சட்டத் துறை அமைச்சர், மேலும் திறமைபடைத்த சட்ட நிபுணர்கள் இருவர் என ஆறு உறுப்பினர்கள் இதில் இருப்பார்கள். திறமைபடைத்த சட்ட நிபுணர்கள் இருவரில் ஒருவர் பட்டியலினம், தொல்குடி, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பு, சிறுபான்மையினர் (அ) பெண்கள் ஆகிய பிரிவுகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்படுவர்.
  • இவர்களது பதவிக் காலம் மூன்று வருடங்கள் மட்டுமே. இந்த இருவரைத் தேர்ந்தெடுப்பதற்கு மூவர் குழு அமைக்கப்படும். அக்குழுவில் பிரதமர், இந்தியத் தலைமை நீதிபதி, மக்களவை எதிர்கட்சித் தலைவர் ஆகியோர் இருப்பர். இச்சட்டத் திருத்தம் 13.4.2015 முதல் நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டது.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பு

  • இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. அவ்வழக்கை விசாரித்த ஐந்து நீதிபதிகளில் நான்கு பேர் அரசமைப்புச் சட்டத்தின் 99ஆவது சட்டத் திருத்தம் செல்லாது என்றும் அரசு அமைத்த நீதித் துறை நியமன ஆணையம் நீதித் துறையின் சுதந்திரத்தைப் பறித்துவிடும் என்றும் தீர்ப்பளித்தனர். ஆனால், இச்சட்டத்திருத்தம் செல்லும் என்று சிறுபான்மைத் தீர்ப்பு எழுதிய நீதிபதி சலமேஸ்வர், தனது தீர்ப்பில் கொலீஜிய நியமன நடைமுறை திருப்தியளிக்கவில்லை என்று குறிப்பிட்டார்.
  • பல சந்தர்ப்பங்களில் உயர் நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைத்த பெயர்கள் உச்ச நீதிமன்ற கொலீஜியத்தால் நிராகரிக்கப்பட்டதைச் சுட்டிக்காட்டிய அவர், இதற்கான காரணங்களைப் புரிந்துகொள்ள முடியாதபடி அந்த ஆவணங்களின் ரகசியம் பாதுகாக்கப்படுகிறது என்றும், இத்தகைய நடவடிக்கைகளினால் நீதித் துறையின் மாண்பு குலைக்கப்பட்டு வருவது இந்நாட்டு மக்களின் நன்மைக்கு ஆகாது என்றும் குறிப்பிட்டார்.
  • தவறான நீதிபதி ஒருவர் உயர் நீதி அமைப்பில் நியமிக்கப்பட்ட பிறகு, நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்படும் கண்டனத் தீர்மானத்தின் மூலமாக மட்டும்தான் அவரது பதவியைப் பறிக்க முடியும். அதிலும் அந்த நீதிபதி மீதான குற்றச்சாட்டுகளை முதலில் மூன்று நீதிபதிகள் குழு விசாரிக்க வேண்டும். அதில் ஆரம்ப ஆதாரம் இருந்தாலொழிய நாடாளுமன்றம் கண்டனத் தீர்மானத்தைப் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள முடியாது.
  • விவாதத்திற்கு ஏற்றுக்கொண்ட தீர்மானத்தைப் பொறுத்தவரை, மூன்றில் இரண்டு பங்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வருகைபுரிவதுடன் அதில் பெரும்பான்மையானவர்கள் வாக்களித்தாலொழிய குற்றம் சாட்டப்பட்ட நீதிபதியைப் பதவிநீக்கம் செய்ய முடியாது. எனவே, நீதிபதிகளை நியமித்த பின் பதவிநீக்கம் செய்ய முடியாத சூழ்நிலையில், ஆரம்ப நியமனங்களில் ஏற்படும் கோளாறுகளைச் சரி செய்வதே சரியான வழியாக இருக்கும்.

மாற்றம் அவசியம்

  • நீதிபதிகள் நியமனக் குழுக்களில் அரசின் பிரதிநிதி இருக்க வேண்டுமென்று தற்போது குரல் எழுப்பி வருபவர்கள் இருவர். முதலாமவர், மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு. இரண்டாவது, குரல் குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கரிடமிருந்து வர ஆரம்பித்தது. ஆனால் இவர்கள் இருவருடைய போர்க்குரலின் பின்னணியில் இருப்பது பாஜக என்பதை யாரும் விளக்கத் தேவையில்லை.
  • எனவே, இத்தகைய எதிர்ப்பின் மூலம் நீதிபதிகள் நியமனத்துக்குப் புதிய நடைமுறையை உருவாக்கி, நீதித் துறையையும் காவிமயமாக்கிவிடுவார்கள் என்று சிலர் வாதிடுகின்றனர். அதே சமயத்தில், தேசிய நீதித் துறை நியமன ஆணையத்தை ரத்துசெய்த உச்ச நீதிமன்றத்தின் 2015ஆம் வருடத் தீர்ப்பின் அடிப்படையில் அதில் கூறப்பட்ட குறைகளைக் களைந்து புதிய நியமன ஆணையத்தை உருவாக்க வேண்டுமென்று மற்றொரு தரப்பில் கூறப்பட்டுவருகிறது.
  • எது எப்படியிருப்பினும், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நீதிபதிகள் நியமனத்தில் தற்காலிக அணுகுமுறைகளைத் தவிர்த்து, நிரந்தரமான அணுகுமுறை உருவாக்கப்பட வேண்டும் என்பதிலும், கடந்த 30 ஆண்டுகளில் கொலீஜியத்தின் மூலம் நியமன நடைமுறை ஏற்படுத்திய குழப்பங்களையும் தவறுகளையும் களைய வேண்டும் என்பதிலும் இரு வேறு கருத்துகள் இருக்க முடியாது.
  • எனவே, இப்பிரச்சினையில் கட்சி வேறுபாடு இல்லாமல் நீதிபதி நியமனங்களுக்கு நிரந்தர ஏற்பாட்டை உருவாக்குவதுடன், அதில் நீதித் துறையின் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கான விதிமுறைகளையும் உருவாக்க வேண்டும் என்பதே நியாயமான கருத்தாக இருக்க முடியும்.

நன்றி: தி இந்து (29 – 01 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories