TNPSC Thervupettagam

மீனவர் நலன் பெயர் மாற்றம் அனைத்தையும் மாற்றிவிடுமா

September 18 , 2022 584 days 370 0
  • தமிழ்நாடு மீன்வளத் துறை, 2021இல் தமிழகத்தில் நடந்த ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு, மீன்வளம் மற்றும் மீனவர் நலத் துறை எனப் பெயர் மாற்றம் பெற்றிருப்பது உண்மையிலேயே வரவேற்கத் தகுந்த மாற்றம்.
  • ஆனால் அப்பெயர் மாற்றம், இதுகாறும் இருந்த பாரம்பரிய மீனவர் வாழ்வை வளப்படுத்தியிருக்கிறதா என்றால், இல்லை என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது.
  • பொதுவாக எந்தத் துறையாக இருந்தாலும், அத்துறையின் செயல்பாடுகள் பல்வேறு அடுக்குகளாக நடைமுறைப்படுத்தப்படுகின்றன. தற்கால, நீண்ட கால இலக்குகளோடு அரசின் அங்கமாகச் செயல்படும் அமைச்சு சார்ந்த மேலாண்மை ஒருபுறம்; அதன்கீழ் செயல்படும் நிர்வாகம் மறுபுறம்.
  • நிர்வாகம் சீராக இயங்க வேண்டுமானால், அதற்குத் திணைசார் களத்தோடு தொடர்புடைய கண்காணிப்புப் பணி அத்தியாவசியத் தேவை.
  • காரணம், திணைசார் களம் என்பது வெறும் நிலப்பரப்போ, சூழலோ அல்ல. மாறாக, சமூகமாக வாழும் மக்களும் அவர்களது வாழ்வாதாரமும் அடங்கியது. அந்த மக்களின் வாழ்வே, நிலப்பரப்பின் அன்றாடச் சூழலையும் அரசின் மேலாண்மையையும் எதிர்கொள்கிறது.

நெய்தலின் நிர்வாகம்

  • அறியப்பட்ட ஐந்து வகை நிலப்பரப்புகளில், நெய்தலுக்கான வாழ்வு என்பது கடல்மேல் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. அதனாலேயே அது நிலையில்லாதது, கணந்தோறும் மாறும் இயல்புகொண்டது. நெய்தலை நிர்வகிப்பது கடினம் என்பதை மறுப்பதற்கில்லை.
  • இயற்கைப் பேரிடர் காலங்களில், ஏனைய திணை வாழ்வைத் தாராளமான நிவாரணத்தால் ஈடுசெய்துவிட முடியும். ஆனால் நெய்தல் வாழ்வை அதேபோல் கடந்து போய்விட முடியாது. காரணம், கடலில் ஏற்படும் உயிர்ப் பலிகள். அதே நேரம் அரசுத் துறையாக இருந்தாலும் அக்கறையான, அர்ப்பணிப்பான நடவடிக்கை மூலமே நெய்தலை நிர்வகிக்க முடியும்.
  • சமீபத்தில் ஒருசில தென்கிழக்குக் கடற்கரை ஊர்களில் பாரம்பரிய மீனவர்களின் நாரிழைப் படகுகளுக்கு வழங்கப்பட்டுவந்த அரசின் மண்ணெண்ணெய் மானியம் நிறுத்தப்பட்டிருக்கிறது.
  • புயல், காற்றடி கால அரசின் அறிவிப்பையும் மீறி, மீனவர்கள் மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்றதே அதற்கான காரணமாகச் சொல்லப்பட்டாலும், தவறான அறிவிப்புகளால் அன்றாடம் கடலில் பாடுபடும் மீனவர்களுக்குத் தொழிலும் வாழ்வும் பாதிப்புக்குள்ளாகியிருப்பது, அரசு நிர்வாகத்துக்குப் புரிவதாக இல்லை.
  • காற்றடி, கடலடிக் காலங்களில் உயிர்ச் சேதங்களைத் தவிர்ப்பதற்காக இதுபோன்ற நடவடிக்கைகளில் இறங்குவதாகத் துறைசார் அதிகாரிகள் சொன்னாலும், களநிலவரத்துக்குச் சம்பந்தம் இல்லாத இதுபோன்ற நடவடிக்கைகள் மக்களிடம் அரசு குறித்த நம்பிக்கையின்மையையும் வெறுப்பையும் விதைத்துவிடுகின்றன.
  • தமிழகக் கடற்கரை 1,076 கி.மீ. நீளமுள்ளது. இதில் நிலஅமைவு சார்ந்து காற்றடி, கடலடி போன்ற இயற்கைப் பாதிப்புகள் மாறுபடுகின்றன.
  • பெரும் பேரிடர்கள் தவிர்த்த காலங்களில், தென்மேற்குக் கடற்கரையான கன்னியாகுமரி மாவட்டக் கடலோரப் பகுதிகளின் இயற்கைப் பாதிப்புகள், அதன் அண்டை மாவட்டமான திருநெல்வேலி மாவட்டக் கடலோரத்தில் இருப்பதில்லை. தங்கள் அனுபவ அறிவின் மூலம் இந்தச் சூழலைப் புரிந்துகொண்ட பாரம்பரிய மீனவர்கள், களநிலவரம் தெரியாத அரசின் அறிவிப்புகளைக் கவனத்தில்கொள்வதில்லை.
  • பேரிடர் பயத்தில், சாதாரணமாகக் கடந்துபோகும் இயற்கைச் சூழலைக்கூடத் தேவையில்லாமல் ஊதிப் பெரிதுபடுத்தும் மீன்வளத் துறை அதிகாரிகளால் எங்கள் வாழ்வாதாரம் பாழ்படுகிறது என ஆதங்கப்படுகிறார்கள் பாரம்பரிய மீனவர்கள்.

களைய வேண்டிய சிக்கல்கள்

  • கடலோர மக்களின் வாழ்வாதாரம் சம்பந்தப்பட்ட ஒன்றுக்கொன்று தொடர்புடைய வானிலை, மீன்வளத் துறைகளின் தற்காப்பு நடவடிக்கைகளால் பாதிப்புக்குள்ளாவது கடலோர மக்களும் அவர்களின் வாழ்வாதாரமும்தான். ‘ஒக்கி’ புயலுக்குப் பின்னான காலத்தில், இதுபோன்ற துறைசார் நிர்வாகத் தற்காப்பு நடவடிக்கைகள் மிக அதிகமாகவே தென்படுகின்றன.
  • தென்மேற்குக் கடலோரப் பிரச்சினைக்காகத் தமிழகத்தின் ஒட்டுமொத்தக் கடற்கரையையுமே பூட்டிவைக்க முடியாது. பேரிடர் சேதங்களுக்குப் பொறுப்பேற்க வேண்டிவருமோ எனப் பயந்து, அன்றாடம் பாடுபடும் பாரம்பரிய மீனவர் தொழிலை முடக்குவது எந்த வகையிலும் ஏற்புடையதல்ல. வளர்ந்துவிட்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, துல்லியத் தகவல்கள் அளிக்கும் வகையில் வானிலை ஆய்வுத் துறையும் தன்னைத் தகவமைத்துக்கொள்ள வேண்டும்.
  • மீன்வளத் துறையில் பணியாற்றும் ஆய்வாளர்கள், சார் ஆய்வாளர்கள் உள்ளிட்ட களப்பணியாளர்களின் நிலையும் பரிதாபமாகவே தொடர்கிறது. பற்றி எரியும் ஒரு பிரச்சினையிலிருந்து மற்றொரு பிரச்சினைக்குத் தீர்வு காண்பதிலேயே தங்கள் நேரத்தைச் செலவழிக்கும் அவர்களால், எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டு தீர்வு நோக்கி நகரவே முடியவில்லை.
  • கேள்வி கேட்கும் அதிகாரம் படைத்த இந்திய ஆட்சிப் பணி அலுவலர்களை மேலாண்மை நிர்வாகப் பொறுப்புகளில் துரிதகதியில் அமர்த்தும் அரசு, பதிலளிக்கும் நிலையிலுள்ள, களத்துக்கு நெருக்கமான கண்காணிப்பு அலுவலர்களைப் பணியமர்த்துவதில் தயக்கம் காட்டுகிறது. குறைந்தபட்சம் நான்கு பேர் செய்யக்கூடிய பணியைச் செய்யும் ஒரு களப்பணியாளரிடம், நலத் திட்டப் பணிகள் குறித்த அறிவுரைகளை எதிர்பார்ப்பது ஏற்புடையது அல்ல.
  • இதன் காரணமாகவே கடலோர மக்கள்தொகை, படகுகளின் பதிவு, மானியம் வழங்கல் போன்றவற்றில் புள்ளிவிவரச் சிக்கல்கள் ஏற்படுகின்றன. கடலோர மக்களுக்கான நலத் திட்டங்கள், விரிவாக்கப் பணிகள் அவர்களைச் சென்றடையாமல் இருப்பதற்கும் இதுவே பிரதான காரணம்.

மீனவருக்கு என்ன தேவை?

  • தமிழகத்தில் இருக்கும் 14 கடலோர மாவட்டங்களில், மொத்தமாக இருக்கும் 167 மீன்வள ஆய்வாளர் பணியிடங்களில், 75 பணியிடங்களே இதுவரையிலும் நிரப்பப்பட்டிருக்கின்றன. அதைவிடவும் களத்துக்கு நெருக்கமாகச் செயல்படும், சார்ஆய்வாளர் பணியிடங்கள் அதிகமாக இருக்க வேண்டும்.
  • ஆனால், தமிழகமெங்கும் தேவைக்கும் குறைவாகவே இருக்கும் 84 பணியிடங்களில், 50 சார்ஆய்வாளர்களே பணியில் இருக்கிறார்கள். மேலாண்மை அதிகாரத்துக்குப் பதில் சொல்லும் நிலையிலிருக்கும் உதவி இயக்குநர்களின் கீழ், போதுமான கட்டமைப்பு இல்லை.
  • எந்த ஒரு துறையும் அதன் அடிப்படைக் கட்டமைப்பு வலுவாக இருக்கும்போதுதான் திறம்படச் செயலாற்ற முடியும்; அரசின் விரிவாக்கம், நலத் திட்டங்களை மக்களிடம் கொண்டுசேர்க்க முடியும்.
  • நிர்வாகப் பணியிடங்கள், தொழில்களத்திலிருந்து வெகுதூரத்தில் இருப்பதும் கடலோரப் பிரச்சினைகளுக்கான மற்றொரு காரணம். உதாரணமாக, தென்கிழக்குக் கடற்கரையில் திருநெல்வேலி மாவட்ட மீன்பிடித் தொழிலை நிர்வாகம் செய்யும் உதவி இயக்குநர் அலுவலகம், கடற்கரை ஊர்களிலிருந்து ஏறத்தாழ 35 கி.மீ. தொலைவில் கடற்கரைக்கே சம்பந்தம் இல்லாத ராதாபுரம் என்ற சமவெளிப் பகுதியில் இருக்கிறது.
  • அன்றாடம் தொழிலிருக்கும் பாரம்பரிய மீனவர்கள், தங்கள் தொழிலை விடுத்து நிவாரணம், பதிவு, கடன்வசதி, மானியம் போன்ற தேவைகளுக்காகத் தொலைதூரம் பயணிக்க விரும்ப மாட்டார்கள் என்ற உண்மையும் அரசுக்குப் புரிய வேண்டும்.

நன்றி: தி இந்து (18 – 09 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories