TNPSC Thervupettagam

மீன்பிடித் தடைக்காலமும் மீறல்களும்

May 26 , 2023 330 days 276 0
  • இந்திய தீபகற்பத்தில் கடலுணவு உற்பத்தி தொடர்ந்து குறைந்துவரும் நிலையில், மத்திய அரசால் அறிவிக்கப்பட்டு, மாநில அரசுகளால் ‘மீன்பிடித் தடைக்காலம்’ நடைமுறைப்படுத்தப்படுகிறது. கடலில், குறிப்பாக கரைக்கடலிலும் அண்மைக்கடலிலும் சுற்றுச்சூழலைப் பாதுகாத்து, அதன் மூலம் மீன்களின் இனப்பெருக்கத்தை உறுதிசெய்து, மீன் உற்பத்தியைப் பெருக்குவதே இந்த ஏற்பாட்டின் நோக்கம்.

அனுபவப் பாடமின்மை

  • இழுவைமடித் தொழிலால் நாளும் கடலின் அடியாழத்தை நாசம் செய்யும் மீன்பிடிக் கப்பல்-விசைப்படகுகளின் செயல்பாட்டைத் தடைசெய்யும் இந்த நடைமுறை, பாரம்பரிய மீனவர்களின் தொழில்முறையைத் தடுப்பதில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். காரணம், பாரம்பரிய மீனவர்கள் இழுவைமடித் தொழில் செய்வதில்லை.
  • சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பில்லாத தூண்டில், செவுள் வலைகளை வைத்தே மீன் பிடிக்கிறார்கள். தமிழ்நாட்டுக் கடற்பரப்பில் ஏப்ரல் 15 தொடங்கி மே 30 வரை அமல்படுத்தப்படும் இத்தடைக்காலம், அண்டை மாநிலமான கேரளத்தில் ஜூன் முதல் வாரம் தொடங்கி ஜூலை இறுதிவரை நடைமுறையில் இருக்கிறது.
  • அரசால் முன்வைக்கப்படும் திட்டங்களும், களச் செயல்பாட்டு விதிமுறைகளும் சம்பந்தப்பட்ட துறை நிர்வாகத்தால் முறையாகக் கண்காணிக்கப்படுவதில்லை என்பது பரவலான குற்றச்சாட்டு; எந்தத் துறையும் இதற்கு விதிவிலக்கல்ல. நிர்வாகத்தின் கண்காணிப்புக் குறைபாடு, சட்டம்-ஒழுங்குப் பிரச்சினையாக மாறிய பிறகே, அரசின் மேல்மட்ட கவனத்துக்கு வந்து சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால், அதற்குள் பிரச்சினைகள் கைமீறிப் போயிருக்கும். அதிகார வர்க்கத்தின் அலட்சியப் போக்குதான் இதற்கான முழுமுதற் காரணம். அனுபவப் பாடம் என்ற ஒன்றே அரச நிர்வாகத்திடம் இல்லை என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது.

ஆபத்தான கூட்டு

  • பாரம்பரிய மீனவர்களுக்கும் விசைப்படகு மீனவர்களுக்கும் எந்த நேரத்திலும் கடலில் மோதல் வெடிக்கலாம் என்கிற நிலையில், தென் கடல் பரப்பு பதற்ற நிலையில் இருக்கிறது. அண்மைக் கடல் தாண்டி கரைக் கடலுக்குள் விசைப்படகுகள் நுழைவது ஒருபுறமென்றால், தற்போதைய பதற்றச் சூழலுக்கான மற்றொரு காரணம், தடைக் காலத்திலும் பாரம்பரிய மீனவரின் தொழில் எல்லைக்குள் நுழையும் - மீன்பிடித் தடை நடைமுறையில் இல்லாத - அண்டை மாநில விசைப்படகுகள். பேராசையின் உச்சத்தில் மீன்பிடித் தடை வாய்ப்பைப் பயன்படுத்தி, சில எல்லையோரத் தமிழ்நாட்டு விசைப்படகுகளும் மற்ற மாநில விசைப்படகுகளோடு இணைந்துவருவது பாரம்பரிய மீனவர்களால் அடையாளம் காணப்பட்டிருக்கிறது.

சுயநலச் செயல்பாடுகள்

  • விசைப்படகு மீனவரின் சுயநலச் செயல்பாடுகள்தான் இதுபோன்ற பிரச்சினைகளுக்குக் காரணம் என்றபோதிலும், அரசு நிர்வாகத்தின் கண்காணிப்புக் குறைபாடே இந்த அத்துமீறல்களுக்கான காரணம் என்கிறார்கள் அரசை நம்பி வாழும் பாரம்பரிய மீனவர்கள். தடைக் காலத்தில் அத்துமீறிக் கரைக்கடலில் நுழையும் விசைப்படகுகள், பாரம்பரிய மீனவர்களின் வலைகளைக் கிழித்துப் பெரும் பொருளாதார இழப்பை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், இரவு நேரங்களில் கரைக்கடல் விபத்துக்கும், தொழில் செய்யும் அப்பாவிப் பாரம்பரிய மீனவர்களின் உயிரிழப்புகளுக்கும் காரணமாகிவிடுகின்றன.
  • தென் கடலின் பதற்றச் சூழலைத் தடுக்கவும், பேரிழப்புகளைத் தவிர்க்கவும் தமிழ்நாடு அரசு உடனடியாக அண்டை மாநில அரச நிர்வாகத்தோடு தொடர்புகொண்டு, நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர வேண்டும். மீன்வளத் துறைசார் கட்டமைப்பைச் சீர்செய்து, களக் கண்காணிப்பை உறுதிப்படுத்த வேண்டும். விசைப்படகு மீனவர்களும், கிடைப்பதை எடுக்க வேண்டும் என்கிற சுயநல எண்ணத்திலிருந்து மாறி, அரசின் மீன்பிடித் தடைக்கால வரைமுறை தங்கள் தொழிலுக்குமானது என்கிற எண்ணத்துடன் செயல்பட முன்வர வேண்டும்.

நன்றி: தி இந்து (26 – 05 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories