TNPSC Thervupettagam

மூன்று குறைபாடுகள்

September 21 , 2022 554 days 472 0
  • இந்திய குடியரசுத் தலைவர் தேர்தல் ஜூலை 18-இல் நடந்து முடிந்து, புதிய குடியரசுத் தலைவராக திரெளபதி முர்மு பதவியேற்று பல நாட்களாகி விட்டன. இத் தேர்தலின்போது ஆளும் தரப்பும் எதிர்க்கட்சிகளும் இரு அணிகளை உருவாக்கி மோதின. இரு தரப்பிலும் தங்கள் ஆதரவுத்தளத்தை விரிவுபடுத்த பெரும் முயற்சிகள் செய்யப்பட்டன. ஆனால், இந்தத் தேர்தலில் பல குறைபாடுகள் இருப்பதை அவர்கள் யாரும் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை.
  • நமது குடியரசுத் தலைவர் தேர்தலைப் பொறுத்தவரை, தேர்தல் முறையிலேயே மூன்று முக்கியமான முரண்பாடுகள் காணப்படுகின்றன. ஜனநாயகத்துக்கு எதிரான இந்த முரண்பாடுகள் குறித்து இதுவரை சரிவர விவாதிக்கப்படவில்லை. இந்த முரண்பாடுகளை சகித்துக்கொண்டேதான் இதுவரையிலான குடியரசுத் தலைவர் தேர்தல்கள் நிகழ்ந்து வந்திருக்கின்றன. நாட்டின் பிரதானத் தலைமைப்பீடமான குடியரசுத் தலைவரைத் தேர்வு செய்யும் தேர்தலிலேயே இந்தக் குறைபாடுகள் தொடர்வது சரியல்ல.
  • நமது அரசியல் சாசனத்தை வடிவமைத்த சிற்பிகள், குடியரசுத் தலைவர் பதவிக்கு மிகுந்த மதிப்பளித்துள்ளனர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு எதேச்சதிகாரமாகச் செயல்படும்போது அதைத் தடுக்கவும், முறைப்படுத்தவும் அதிகாரமுள்ளதாக குடியரசுத் தலைவர் பதவி வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • அரசியல் சாசனத்தின் 324-ஆவது பிரிவின் கீழ், இந்திய தேர்தல் ஆணையத்தால் குடியரசுத் தலைவர் தேர்தல் நடத்தப்படுகிறது. நாடாளுமன்றத்தின் இரு அவை உறுப்பினர்களும் மாநில சட்டப்பேரவை உறுப்பினர்களும் தில்லி, புதுச்சேரி ஆகிய யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளின் உறுப்பினர்களும் இத்தேர்தலில் வாக்களிக்கத் தகுதி பெற்றவர்கள் (அரசியல் சாசனத்தின் 54-வது பிரிவு). விகிதாசார பிரதிநிதித்துவ அடிப்படையில் ஒவ்வொரு வாக்காளரும் (எம்.பி., எம்.எல்.ஏ.) தனது வாக்கை ரகசியமாகப் பதிவு செய்கிறார் (அரசியல் சாசனத்தின் 55(3)ஆவது பிரிவு).
  • இத்தேர்தலில் நாம் இதுவரை கண்டுகொள்ளாமல் இருக்கும் மூன்று முரண்பாடுகளை இப்போது காணலாம். அவை: 1. தற்போதைய மக்கள்தொகையைக் கணக்கில் கொள்ளாமல் 1971 மக்கள்தொகை பதிவேட்டின் அடிப்படையில் வாக்காளரின் விகிதாசார பிரதிநிதித்துவ மதிப்பு கணக்கிடப்படுதல்; 2. அனைத்து யூனியன் பிரதேசங்களுக்கும் சமமான மதிப்பு அளிக்கப்படாதது; 3. நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாக்கு மதிப்பு ஒரே சீராக இல்லாதிருப்பது.
  • இந்தக் குறைபாடுகள் குறித்து விவாதம் தேவை. இனிவரும் காலத்திலேனும் இவற்றைச் சரிப்படுத்த நடவடிக்கைகள் தேவை.
  • 2031 வரை தொடரும் 1971 மக்கள்தொகை அடிப்படை: குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிக்கும் மக்கள் பிரதிநிதிகளின் வாக்குகள் சமமான மதிப்பு உடையவையாக இருக்க வேண்டும். ஆனால், இத்தேர்தலில் வாக்களிக்கும் மக்கள் பிரதிநிதிகளின் வாக்கு மதிப்பு ஒவ்வொரு மாநிலத்திலும் தற்போதைய மக்கள்தொகை அடிப்படையில் கணக்கிடப்படாமல், 1971-ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்புப் பதிவேட்டின் அடிப்படையிலேயே நிர்ணயிக்கப்படுகிறது. இது முதல் முரண்பாடாகும்.
  • ஒரு மாநில சட்டப்பேரவை உறுப்பினரின் வாக்கு மதிப்பு என்பது, அந்த மாநிலத்தின் ஒட்டுமொத்த மக்கள்தொகையை அம்மாநில சட்டப்பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கையால் வகுத்து, அந்த மதிப்பை ஆயிரத்தால் வகுத்துக் கிடைப்பதாகும். இதில் மாநிலத்தின் ஒட்டுமொத்த மக்கள்தொகையாக கருத்தில் கொள்ளப்படுவது 1971-ஆம் ஆண்டு மக்கள்தொகை பதிவேட்டிலுள்ள எண்ணிக்கையாகும். சுமார் ஐம்பது ஆண்டுகளில் நமது மாநிலங்கள் பலவும் மக்கள்தொகையில் பலத்த ஏற்ற இறக்கங்களைச் சந்தித்துள்ளன. அதற்கேற்ற வகையில், மாநிலங்களின் மாறிய மக்கள்தொகை இதில் கணக்கில் கொள்ளப்படாதது, பொதுமக்களின் வாக்கு மதிப்பைக் குறைப்பதாகும்.
  • உதாரணமாக, உத்தர பிரதேச சட்டப்பேரவை உறுப்பினரின் வாக்கு மதிப்பு, 1971-இல் அம்மாநிலத்தின் மக்கள்தொகையாக இருந்த 8.38 கோடியை 403 உறுப்பினர்களின் எண்ணிக்கையாலும் ஆயிரத்தாலும் வகுப்பதால் கிடைப்பதாகும். இதன் மதிப்பு 208. ஆனால் தற்போது உ.பி. மாநிலத்தின் ஒட்டுமொத்த மக்கள்தொகை 19.98 கோடி. நாட்டின் ஒட்டுமொத்த மக்கள்தொகை மாற்ற விகிதத்தில் இதன் பங்களிப்பு 48 % ஆகும். 1971-இல் இது 44 % ஆக இருந்தது.
  • இந்த மக்கள்தொகை மாற்றம் கருத்தில் கொள்ளப்படாமல் 1971-ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கில் கொள்ளப்படுவதற்கு, முந்தைய காங்கிரஸ் அரசு செய்த அரசியல் சாசனத் திருத்தமே காரணம். 1976-இல் மேற்கொள்ளப்பட்ட 42-ஆவது சட்டத் திருத்தம் மூலமாக, 2000-ஆம் ஆண்டு வரை குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான அடிப்படை புள்ளிவிவரமாக 1971 மக்கள்தொகை பதிவேடு கொள்ளப்பட்டது.
  • இதற்கு, மக்கள்தொகை கட்டுப்பாட்டுக் கொள்கையை தீவிரமாகக் கடைப்பிடிக்கும் மாநிலங்களின் மக்கள்தொகை குறைவதால், பிரதிநிதிகளின் வாக்கு மதிப்பு குறையும் என்பது காரணமாகக் கூறப்பட்டது. அதாவது மக்கள்தொகை கட்டுப்பாட்டுக் கொள்கையைக் கடைப்பிடிக்காத மாநிலங்களில் மக்கள்தொகை பெருகுவதால், அக்கொள்கையை முறைப்படி நடைமுறைப்படுத்தும் மாநிலம் பாதிக்கப்படுகிறது என்பது கவனத்தில் கொள்ளப்பட்டது.
  • இந்தத் திருத்தம் 2000-இல் காலாவதி ஆன நிலையில், 2001-ஆம் ஆண்டு ஆட்சியில் இருந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசும், 84-ஆவது சட்டத் திருத்தம் மூலமாக முந்தைய காங்கிரஸ் அரசின் நடைமுறையைத் தொடர்ந்தது. அதாவது, 2026-ஆம் ஆண்டு வரை 1971-ஆம் ஆண்டின் மக்கள்தொகைப் பதிவேடே ஆதாரப் புள்ளிவிவரமாகக் கொள்ளப்படும் என்பதை இந்த சட்டத் திருத்தம் உறுதிப்படுத்தியது. அதாவது 2031-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணி நடந்தேறும் வரை குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிக்கும் மக்கள் பிரதிநிதிகளின் வாக்கு மதிப்பு 1971-ஆம் ஆண்டு மக்கள்தொகை பதிவேட்டின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படும்.
  • இந்த இடத்தில், 1971-ஆம் ஆண்டிலும், 2001-ஆம் ஆண்டிலும் எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்புப் பதிவேடுகளின் அடிப்படையில், குறிப்பிட்ட நான்கு மாநிலங்களில் மாறியுள்ள மக்கள்தொகை மாற்ற விகிதங்களை கொஞ்சம் ஆராயலாம். பிகார் (25.40 %) உ.பி. (20.23 %), மேற்கு வங்கம் (13.84 %), கேரளம் (4.91 %) என பதிவாகியுள்ளது. குறிப்பாக, தேசிய அளவிலான மக்கள்தொகை பெருக்கத்துடன் ஒப்பிடுகையில், மேற்கு வங்கம் (மைனஸ் 4 %), கேரளம் (மைனஸ் 3 %) ஆகிய மாநிலங்களில் மக்கள்தொகைப் பெருக்க விகிதம் குறைந்துள்ளது. அதே சமயம், பிகாரிலும் உ.பி.யிலும் மக்கள்தொகைப் பெருக்க விகிதம் அதிகரித்துள்ளது. ஆனால், 1971-ஆம் ஆண்டு மக்கள்தொகைப் பதிவேட்டின் படியே இம்மாநில சட்டப்பேரவை உறுப்பினர்களின் வாக்கு மதிப்பு கணக்கிடப்படுகிறது.
  • எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் பகுத்தறிவுக்கு ஒவ்வாத இந்த நடைமுறையை மாற்ற முயலவில்லை. இந்த சட்டத் திருத்தங்களால், 1971-க்குப் பிறகு பிறந்த இந்தியக் குடிமகன்கள் குடியரசுத் தலைவர் தேர்தலில் பிரதிநிதித்துவ வாக்கு மதிப்பை இழக்கின்றனர். இது ஜனநாயக விரோதமானது; நியாயமற்றது.
  • யூனியன் பிரதேசங்களுக்கு மதிப்பில்லை: குடியரசுத் தலைவர் தேர்தலில் நாட்டு மக்கள் அனைவருக்கும் பிரதிநிதித்துவ வாக்கு மதிப்பு இருக்க வேண்டும். நாட்டிலுள்ள 28 மாநிலங்களின் மக்களுக்கும் முழுமையான பிரதிநிதித்துவ வாக்கு மதிப்பு தற்போது இருக்கிறது. இம்மாநிலங்களின் பிரதிநிதிகளாக எம்.பி.க்களும் எம்.எல்.ஏ.க்களும் இத்தேர்தலில் வாக்களிக்கின்றனர். ஆனால், எட்டு யூனியன் பிரதேசங்களில் தில்லி, புதுச்சேரி ஆகிய பகுதிகளில் மட்டுமே சட்டப்பேரவைகள் உள்ளதால், அங்குள்ள எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிக்கின்றனர். பிற ஆறு யூனியன் பிரதேசங்களில் சட்டப்பேரவைகள் இல்லாததால் அங்கு தேர்வாகும் எம்.பி.க்கள் மட்டுமே இத்தேர்தலில் வாக்களிக்க முடிகிறது. இதுவும் நியாயமற்றதாகும்.
  • உதாரணமாக, 2019-ஆம் ஆண்டு வரை மாநிலமாக இருந்த ஜம்மு- காஷ்மீர், மாநில மறுசீரமைப்புச் சட்டத்தால் இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டுவிட்டது. முந்தைய குடியரசுத் தலைவர் தேர்தல்களில் ஜம்மு- காஷ்மீர் எம்.எல்.ஏ.க்களும் எம்.பி.க்கள் போலவே வாக்களித்தனர். ஆனால் இம்முறை, அந்த வாய்ப்பை அவர்கள் இழந்துவிட்டார்கள். இது அப்பகுதி மக்களின் இழப்பாகும்.
  • எம்.பி.க்களின் வாக்கு மதிப்பு சீராக இல்லை: குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிக்கும் எம்.பி.யின் வாக்கு மதிப்பு நாடு முழுவதும் 708 ஆக உள்ளது. சராசரியாக 22.29 லட்சம் மக்களின் பிரதிநிதியாக ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் இருக்கும் வகையிலேயே அவர்களின் வாக்கு மதிப்பு கணிக்கப்படுகிறது. ஆனால் நடைமுறையில், பெரிய மாநிலங்களுக்கும் சிறிய மாநிலங்களுக்கும் இடையே எம்.பி. தேர்தலில் மாறுபாடு உள்ளது.
  • உதாரணமாக, ராஜஸ்தான் மாநில எம்.பி. 27.42 லட்சம் மக்களை பிரதிநிதித்துவப்படுத்துகிறார். ஆனால், லட்சத்தீவுகள் யூனியன் பிரதேச எம்.பி. 64 ஆயிரம் மக்களை மட்டுமே பிரதிநிதித்துவப்படுத்துகிறார். இப்படிப்பட்ட நிலையில் அனைத்து மாநில, யூனியன் பிரதேச எம்.பி.க்களுக்கும் ஒரே சீராக வாக்கு மதிப்பை நிர்ணயிப்பது முறையானதல்ல.
  • அதே போல மாநில மறுசீரமைப்பால் 2019-இல் மாநில அந்தஸ்தை இழந்த ஜம்மு- காஷ்மீரில் மீண்டும் சட்டப் பேரவை அமைக்கப்படவில்லை. இம்முறை குடியரசுத் தலைவர் தேர்தலில் ஜம்மு -காஷ்மீர் தனது எம்.எல்.ஏ.க்களின் வாக்குரிமையை இழந்துவிட்டது. 1992-லும் இப்பகுதி எம்.எல்.ஏ.க்கள் தேர்தலில் வாக்குரிமையை இழந்திருந்தனர்.
  • அரசியல் காரணங்களுக்காக சட்டப்பேரவை கலைக்கப்பட்ட குஜராத் (1974), அஸ்ஸாம் (1982), நாகாலாந்து (1992) ஆகிய மாநிலங்களும், அச்சமயங்களில் நடைபெற்ற குடியரசுத் தலைவர் தேர்தல்களில் எம்.எல்.ஏ.க்களின் வாக்குரிமையைப் பயன்படுத்த இயலவில்லை.
  • குடியரசுத் தலைவராக இருப்பவரின் பதவிக்காலம் நிறைவடையும் முன்னரே அப்பதவிக்கு தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று அரசியல் சாசனப் பிரிவு 62 (1) கூறுகிறது. அதன்படியே தேர்தலும் நடத்தப்படுகிறது. அதே சமயம், குடியரசுத் தலைவரைத் தேர்வு செய்யும் எம்.எல்.ஏ.க்களை, கலைக்கப்பட்ட சட்டப் பேரவைகளுக்கு தேர்வு செய்யப்படுவதையும் உறுதிப்படுத்துவது அரசின் கடமையல்லவா?தாக்குதல்கள்

நன்றி: தினமணி (21 – 09 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories