TNPSC Thervupettagam

வருமுன் காப்போம்

November 21 , 2022 494 days 390 0
  • கடந்த ஆண்டுகளைப் போலவே இந்த ஆண்டும் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளன.
  • இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் தில்லி, ஹரியானா, கர்நாடகம், ராஜஸ்தான், தமிழ்நாடு ஆகிய ஐந்து மாநிலங்களில் மட்டுமே டெங்கு நோய் பாதிப்பு இருந்தது. நூற்றுக்கணக்கானோர் இம்மாநிலங்களில் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அடுத்த பத்தாண்டுகளில் டெங்கு நோய் பாதிப்பு மகாராஷ்டிரம், கேரளம் மாநிலங்களில் வேகமாக அதிகரிக்கத் தொடங்கியது. 
  • இந்தியாவில் டெங்குப் பரவல் 2012-2013 ஆண்டுகளில் அதிகரித்த போதும் நாகாலாந்து மாநிலமும் யூனியன் பிரதேசமான லட்சத்தீவும் பாதிப்பின்றி இருந்தன. ஆனால் 2015 -ஆம் ஆண்டில் நாகாலாந்தில் 21 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டிருந்தனர். கடந்த சில ஆண்டுகளாக நாகாலாந்தில் டெங்குப் பரவல் கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், இந்த ஆண்டில் (2022ல்) லட்சத்தீவில் முதல்முறையாக டெங்கு நோய் பாதிப்பு பதிவாகியுள்ளது. 
  • இந்திய அரசின் தரவுகளின்படி செப்டம்பர் 30, 2022 வரை அங்கு 45 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு ஏழு இந்திய மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் மட்டுமே நூற்றுக்கும் குறைவானோர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 
  • தேசிய நோய்த்தொற்றுக் கட்டுப்பாட்டு மையத்தின் சமீபத்திய தரவுககளின்படி இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வரை   இந்தியாவில் 63,280 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டிருந்தனர். தமிழகத்தில் 2022ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை  4,900 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். அக்டோபர் மாதத்தில் மட்டும் பதிவான புதிய டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 616.  மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த செப்டம்பர் மாதம் வரை 239 பேர் மட்டுமே டெங்குவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அக்டோபர் மாதம் இறுதியில்  இந்த எண்ணிக்கை 42,000 ஆக உயர்ந்துள்ளது. 
  • கேரளத்தில் அக்டோபர் 18, 2022 வரை 7,000பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் டெங்குவால் 20 பேர் மரணமடைந்துள்ளனர். அதிகம் டெங்கு மரணம் நிகழ்ந்த இந்திய மாநிலங்களில் கேரளம் முதலிடத்தில் உள்ளது. டெங்கு பரவல் காலநிலை மாற்றம் உட்பட்ட மற்ற காரணிகளுடன் தொடர்புடையது என்பதனையே இத்தரவுகள் காட்டுகின்றன. 
  • மழை, ஈரப்பதம், வெப்பநிலை ஆகிய மூன்று காரணிகள் டெங்கு பரவும் இடத்தினையும் பரவும் வீதத்தினையும் தீர்மானிப்பதாக இத்துறை சார்ந்த வல்லுநர்கள் கூறுகின்றனர். 
  • "தி லான்செட்' மருத்துவ இதழில் வெளியான காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் ஆரோக்கிய பாதிப்புகள் குறித்த உலகளாவிய வருடாந்திர கணிப்பு என்ற கட்டுரை, ஒவ்வொரு ஆண்டும் ஏடிஸ் எஜிப்டி கொசுக்களால் டெங்கு பரவுவதற்கான காலம் ஐந்தரை மாதங்களாக உயர்ந்துள்ளது என கூறுகிறது. ஜியோஹெல்த் 2022 இதழில் வெளியான ஒரு ஆய்வுக் கட்டுரை காலநிலை மாற்றம் கொசுக்களின் பரவலை எங்கனம் தீர்மானிக்கிறது என்று கணித்துள்ளது.
  • ஏடிஸ் ஈஜிப்டி, ஏடிஸ் அல்போபிக்டஸ் ஆகிய இரண்டு கொசுக்களால் டெங்கு பரவுகிறது. ஏடிஸ் ஈஜிப்டி இந்தியாவின் தென் தீபகற்பம், கிழக்கு கடற்கரை, வடகிழக்கு மாநிலங்கள், வடக்கு சமவெளிகளிலும்  ஏடிஸ் அல்போபிக்டஸ் கிழக்கு - மேற்கு கடற்கரைகள், வடகிழக்கு மாநிலங்கள், கீழ் இமயமலையில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. 
  • எதிர்கால காலநிலை மாற்றங்களின் விளைவாக வெப்பமான வறண்ட தார் பாலைவனம் போன்ற பகுதிகளில் ஏடிஸ் எஜிப்டி கொசுக்களும் குளிர் பிரதேசமான இமயமலை போன்ற பகுதிகளில் ஏடிஸ் அல்போபிக்டஸ் கொசுக்களும் அதிகரிக்கும் என்று ஒரு ஆய்வு கணித்துள்ளது.
  • எரிசக்தி, சுற்றுச்சூழல், நீர் மன்றத்தின் காலநிலை பாதிப்புக் குறியீடு, ஜம்மு மற்றும் காஷ்மீர் பகுதிகள் பருவநிலை மாறுபாட்டினால் மிதமான பாதிப்புக்குள்ளாகும் என்று கூறுகிறது. 
  • சமீப காலம் வரை டெங்கு பரவுவதற்கு சாதகமாக வெப்பநிலை இல்லாத ஜம்மு மற்றும் காஷ்மீரில் 2006-ஆம் ஆண்டு வரை டெங்கு நோய் பாதிப்பு எதுவும் பதிவாகவில்லை. 2006-ஆம் ஆண்டு முதல் 2010-ஆம் ஆண்டு வரை ஜம்மு - காஷ்மீர் பகுதியில் புலம்பெயர் தொழிலாளர்களால் ஆங்காங்கே ஒன்றிரண்டு டெங்கு பாதிப்புகள் பதிவானது. 
  • 2017- ஆம் ஆண்டில் ஜம்மு - காஷ்மீர் பகுதிகளில் முதன்முறையாக டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 488 என்று பதிவானது. 2022-ஆம் ஆண்டு ஜம்மு - காஷ்மீரில் டெங்கு நோய் பாதிப்புக்குள்ளான 6,000 பேரில்  ஒன்பது மட்டுமே ஜம்மு - காஷ்மீர் பகுதியினை சார்ந்தவர்கள். மற்றவர்கள் அனைவரும் டெங்கு நோய் பாதிப்புக்குள்ளான நாட்டின் பிற பகுதிகளுக்கு சென்று வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஜம்மு - காஷ்மீரின் வெப்பநிலை, ஈரப்பதம் டெங்கு பரவுவதற்கு உகந்ததாக இல்லை என்றாலும் சமீப நாட்களில் ஏற்படும் வெப்பநிலை உயர்வு பருவமழைக்குப் பின் ஜூலையில் தொடங்கி நவம்பர் இறுதி வரை இப்பகுதியினை டெங்கு மையமாக மாற்றி வருகிறது.
  • எரிசக்தி, சுற்றுச்சூழல், நீர் மன்றத்தின் காலநிலை பாதிப்புக் குறியீடு பிகார் உள்ளிட்ட எட்டு  இந்திய மாநிலங்கள் பருவநிலை மாறுபாட்டினால் மிகுந்த பாதிப்புக்குள்ளாகும் என்று எச்சரித்துள்ளது. 
  • 2010 -ஆம் ஆண்டில் 510 டெங்கு நோயாளிகள் இருந்த பிகார் மாநிலத்தில்  2013 -ஆம் ஆண்டில் 1,246 நோயாளிகள் உருவாகினர். இம்மாநிலத்தில் 2019-ஆம் ஆண்டில் 6,712 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டிருந்தனர். கிராமங்களில் டெங்கு காய்ச்சல் பரவுவது பொது சுகாதாரத்திற்கு கவலையளிக்கும் முக்கிய அம்சம் என்று பிகார் மாநிலத்தின் டெங்கு பரவல் பற்றி  2019 -ஆம் ஆண்டு "இன்டர்நேஷனல் ஸ்கலர்ஸ் ஜர்னல்' இதழில் வெளியான ஆய்வுக் கட்டுரை ஒன்று கூறுகிறது.
  • நகரமயமாக்கல், காலநிலை மாற்றத்தால் எதிர்காலத்தில் டெங்குவின் பரவல் இந்தியாவில் அதிகரிக்கும் என்றும் பெரும்பாலான மாநிலங்களில் டெங்கு பரவல் ஆண்டு முழுவதும் நீடிக்கும் என்றும் இத்துறை ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். மத்திய - மாநில அரசுகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய காலகட்டம் இது.

நன்றி: தினமணி (21 – 11 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories