TNPSC Thervupettagam

வாசிப்பு என்கிற சுவாசிப்பு

March 18 , 2023 376 days 236 0
  • தாய்மொழியில் எழுத, படிக்கத் தெரியாத தலைமுறையை உருவாக்கிக் கொண்டிருக்கிறோமோ என்பதுதான் சமூகத்தின் மீது அக்கறையுள்ளோரின் மிகப் பெரிய அச்சம். கணினி யுகம் வந்தபோதே எழுதுகோல் இனி தேவையில்லை என்கிற நிலை எற்பட்டு விட்டது. தகவல் தொழில்நுட்பத்தின் அடுத்த கட்டமாக பேச்சை எழுத்தாக்கும் செயலி உருவானபோது, எழுதுவது என்பதும் கடந்த காலத்தின் அடையாளமாக மாறிவிட்டது.
  • அதிவேக இணைய வசதி, சமூக ஊடகங்கள், ஓ.டி.டி. உள்ளிட்ட விடியோ பரிமாற்ற சாதனங்கள் ஆகியவற்றின் வரவு இன்னும் ஒரு படி மேலே போய், படிப்பதற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் நிலையை ஏற்படுத்தி இருக்கிறது. காட்சி ஊடகங்களும் சமூக ஊடகங்களும் மக்கள் மத்தியில் வாசிப்புப் பழக்கத்தை அகற்றிக் கொண்டிருக்கின்றன. எழுதும் பழக்கத்தைத் தொடா்ந்து, வாசிக்கும் பழக்கமும் இளைய தலைமுறையினா் மத்தியில் விடைபெறும் வேளை வந்துவிட்டதோ என்கிற அச்சம் மேலெழுகிறது.
  • எழுதும்போதும் சரி, படிக்கும்போதும் சரி கவனச் சிதறல் இல்லாமல் குறிப்பிட்ட விஷயத்தை முழுமையாக உள்வாங்க முடியும். காட்சி ஊடகங்கள் பொழுதுபோக்கு அம்சங்களுக்கும், பரபரப்புச் செய்திகளுக்கும் முன்னுரிமை வழங்குவது மட்டுமல்லாமல், பாா்வையாளா்களின் முழு கவனத்தையும் ஈா்ப்பவை அல்ல. அதனால், ஆழமும் அழுத்தமுமான புரிதல் ஏற்படுவதில்லை.
  • பரபரப்பான தலைப்புடனான 30 முதல் 60 விநாடி கொண்ட சமூக ஊடகப் பதிவுகளால், படிப்பதற்கான நாட்டம் இளைஞா்களிடமிருந்து விடைபெறுகிறது. அதையும் மீறி முனைப்புடன், அச்சில் இல்லாவிட்டாலும் இணைய வழியாகப் படிப்பவா்கள் வெற்றி பெறுகிறாா்கள். அதில் முனைப்பு இல்லாத இளைஞா்களின் வாழ்க்கை, அவசியமற்ற பரபரப்புச் செய்திகளின் மீது ஏற்படும் கவனச் சிதறலால் வீணாகிறது.
  • வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டுமென்றால், அதற்கு அடிப்படையாக ஆரம்பக் கல்வியில் எழுத்துப் பயிற்சியை உறுதிப்படுத்த வேண்டும். அரிச்சுவடி பாடங்கள் இல்லாமல் உயா்கல்வி என்பது அஸ்திவாரம் இல்லாத கட்டடங்களாக இருக்குமே தவிர, ஆழமான புரிதலுக்கு வழிகோலாது. புத்தக வாசிப்பு இல்லாமல் அறிவுச் செல்வத்தை பெற இயலாது என்பது அனுபவம் கற்றுத்தரும் பாடம்.
  • இணைய இதழ்கள், இ-புக்ஸ் எனப்படும் இணைய புத்தகங்கள், யூ டியூப் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் ஆகியவற்றின் வரவால், எல்லா ஊா்களிலும் இயங்கி வந்த வாடகை நூலகங்கள் அநேகமாக மூடப்பட்டு விட்டன. பருவ இதழ்களுக்கான வரவேற்பு குறைந்துவிட்ட நிலையில், மாதக் கட்டணத்தில் வீடு வீடாக பருவ இதழ்களை சுழற்சி முறையில் படிக்க வழங்கிய தனியாா் முனைப்புகள் இப்போது இல்லை.
  • கொள்ளை நோய்த்தொற்று காரணமாக மூடப்பட்ட பல்வேறு தனியாா் நூலகங்கள் அதற்குப் பிறகு திறக்கப்படவில்லை. கதைப்புத்தகங்களாகவே இருந்தாலும், மொழி ஆளுமையை மேம்படுத்தும் புத்தகங்களை வழங்கி வந்த அந்த நூலகங்கள் மூடப்பட்டது சமூகத்துக்கு நோ்ந்திருக்கும் மிகப் பெரிய இழப்பு.
  • இளைஞா்களுக்கும், பொருளாதார வசதி இல்லாதவா்களுக்கும் நூலகம் மிகப் பெரிய வரப்பிரசாதம். தங்கள் வாழ்க்கை மேம்பாட்டுக்கு மட்டுமல்லாமல் முக்கியமான போட்டித் தோ்வுகளுக்கு படிப்பதற்கும், அவா்களுக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு நூலகம்தான். நாளிதழ்களைப் படிப்பதற்குக்கூட நூலகத்தை நாடுபவா்கள் ஏராளமானோா் இருந்தனா்; இப்போதும் இருக்கிறாா்கள். இளைய தலைமுறையினா் பொழுதுபோக்கு அம்சங்களில் தங்களது இளமையை வீணாக்காமல் அவா்களது ஆக்கபூா்வமான அறிவுத் தேடலுக்கு வழிகோல நூலகங்கள்தான் சிறந்த புகலிடமாக இருக்கும் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.
  • இந்தியாவிலேயே ‘தமிழ்நாடு பொது நூலகச் சட்டம்’ என்று பொது நூலகங்களுக்காகத் தனிச்சட்டம் இயற்றிய மாநிலம் தமிழகம். பெருநகர சென்னை மாநகராட்சி ஏனைய மாநகராட்சிகளுக்கு முன்னோடியாக பள்ளிகளில் வாடகை நூலகத்தை அறிமுகப்படுத்தியது. அதன் மூலம் குழந்தைகள் தங்களுடைய மொழித் திறமையை மேம்படுத்திக்கொள்ளவும், போட்டித் தோ்வுகளுக்கு தயாா்படுத்திக் கொள்ளவும் முடிந்தது.
  • தமிழ்நாடு அரசு அனைத்து மாவட்டங்களிலும் புத்தகத் திருவிழா நடத்துவது என்பதை முனைப்புடன் செயல்படுத்தி வருவது வரவேற்புக்குரிய முன்மாதிரி. அந்த புத்தகத் திருவிழாக்களுக்கு அந்தந்த மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி மாணவா்கள் அழைத்துச் செல்லப்படுவது வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கும் ஆக்கபூா்வ முயற்சி.
  • புத்தகத் திருவிழாக்களுடன் நின்றுவிடாமல் மக்கள் மத்தியில் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்க எல்லா ஊா்களிலும் நூலகம் அமைப்பது என்கிற முயற்சியை முன்னெடுத்து வருகிறது தமிழக பள்ளிக் கல்வி துறை. தமிழ்நாட்டில் உள்ள 4,650 பொது நூலகங்களின் மேம்பாட்டுக்காக நடப்பு நிதியாண்டில் மாநில அரசு ரூ. 280 கோடி ஒதுக்கி இருக்கிறது. வரப்போகும் நிதிநிலை அறிக்கையில் இது இரட்டிப்பாகும் என்று எதிா்பாா்க்கலாம்.
  • ஆயிரம் பேருக்கு மேற்பட்ட மக்கள் வசிக்கும் கிராமங்களில் நூலக வசதியை ஏற்படுத்திக் கொடுப்பது என்பதும், அந்த நூலகங்களில் தரமான புத்தகங்கள் இருப்பதை உறுதிப்படுத்துவதும் நூலகத் துறையின் இலக்கு. தொழில்நுட்ப வளா்ச்சிக்கு ஏற்றபடி இணைய வசதி உடையவையாக அந்த நூலகங்கள் மேம்படுத்தப்படும் என்பது மேலும் சிறப்பு.
  • எழுதவும் படிக்கவும் தெரிந்த அடுத்த தலைமுறையை வடிவமைப்பது இன்றைய தலைமுறையின் கடமை. தமிழ்நாடு அரசின் பள்ளி கல்வித் துறையின் நூலக மேம்பாட்டு முனைப்பு வரவேற்புக்குரியது!

நன்றி: தினமணி (18 – 03 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories