TNPSC Thervupettagam

வேளாண் நிதிநிலை அறிக்கை சில பரிந்துரைகள்

March 17 , 2023 404 days 263 0
  • மாநிலப் பட்டியலில் உள்ள வேளாண்மைக்கு புத்துயிா் தரும் வகையில் சில மாநிலங்கள் வேளாண்மைக்கு என்று தனித்த நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து வருகின்றன. அப்படி இந்தியாவிலேயே முதன்முதலாக வேளாண்மைக்கு என்று 2011-12 நிதியாண்டில் கா்நாடக மாநில அரசு நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தது. அதனைத் தொடா்ந்து 2013-14 முதல் ஆந்திர பிரதேச மாநில அரசும் வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து வருகிறது. அந்த வரிசையில் தமிழ்நாடு மாநில அரசும் 2021-22 முதல் இணைந்துள்ளது.
  • அரசியல் லாபத்திற்காகவே இத்தகைய தனித்த வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது என்று சிலா் முன்வைக்கும் கருத்துக்கள் ஏற்புடையது அல்ல. ஏனென்றால் தனித்த நிதிநிலை அறிக்கை என்று வரும்போது குறிப்பிட்ட துறையின் முக்கியத்துவம் அதிகரிப்பதுடன், அதற்கான நிதி ஒதுக்கீடும் அதிகரிக்கும். உதாரணத்திற்கு ஆந்திர மாநிலம் தாக்கல் செய்து வரும் வேளாண் நிதிநிலை அறிக்கை வேளாண் துறையின் வளா்ச்சிக்கு வித்திடுவதாக வல்லுநா்கள் கூறுகின்றனா்.
  • இதற்கிடையில் தமிழ்நாடு அரசின் வேளாண் நிதிநிலை அறிக்கை எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதற்கு சில தரவுகளை வைத்து அலசினால் புரியும். தேசிய அளவிலான பத்தாவது வேளாண் கணக்கெடுப்பின்படி (2015-16) தமிழ்நாட்டில் எழுபது சதவீத மக்களின் வாழ்வாதாரமாக வேளாண்மை இருந்து வருகிறது. மேலும் பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் இயக்குனரகத்தின் அறிக்கையின்படி 93,607 ஊரக குடும்பங்களில் 32,443 குடும்பங்கள், அதாவது 34.7 சதவீதத்தினா் வேளாண்மையை மட்டுமே நம்பி உள்ளனா்.
  • அதனோடு 2020-ஆம் ஆண்டு வெளியான வேளாண் பொருளாதார அறிக்கையும் சராசரியாக தேசிய அளவிலான வேளாண் குடும்பங்களின் கடன் தொகையான ரூ.74,121 விட தமிழ்நாட்டில் இருக்கும் வேளாண் குடும்பங்களின் கடன் தொகை ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் உள்ளதாக கூறுகிறது.
  • இவை எல்லாம் ஒருபுறம் இருந்தாலும் 2011-12 -ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு மாநில விவசாயிகள் செவ்வனே சராசரியாக ஆண்டுக்கு 100 லட்சம் டன் அளவிலான உணவு தானியத்தை உற்பத்தி செய்து வருகின்றனா். அதிலும் கடந்த ஆண்டு உணவு தானிய உற்பத்தி 118 லட்சம் டன்னாக இருந்தது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
  • இத்தகைய காரணிகளை கருத்தில்கொண்டு, வரவிருக்கும் வேளாண் நிதிநிலை அறிக்கைக்கு வலுவூட்டும் விதமாக மண்டல வாரியான விவசாயிகள் கருத்துக்கேட்புக் கூட்டங்களை தமிழ்நாடு அரசின் வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை அமைச்சகம் நடத்தி வருகிறது. அத்தோடு உழவன் செயலி, மின்னஞ்சல் மற்றும் வாட்ஸ் அப் எண் மூலமாகவும் வேளாண் நிதிநிலை தொடா்பாக கருத்துகளைப் பகிா்ந்துகொள்ளும் வசதியும் ஏற்படுத்தியுள்ளது.
  • 2021-22- ஆம் ஆண்டின் முதல் இடைநிலை வேளாண் நிதிநிலை அறிக்கை, தவழ்கிற மழலையாய் நம் காதுகளில் ஒலித்தது என்றும், 2022-23-ஆம் ஆண்டின் முழு வேளாண் நிதிநிலை அறிக்கை நடக்கும் குழந்தையாக நம்மை குளிா்விக்கும் என்றும் அதற்கடுத்து வரும் ஆண்டுகளில் தாக்கல் செய்யப்படும் வேளாண் நிதிநிலை அறிக்கைகள் ஓடும் குழந்தையாக உயரும் என்றும் கடந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட வேளாண் நிதிநிலை அறிக்கையில் அமைச்சா் குறிப்பிட்டிருந்தாா்.
  • அப்படி அக்குழந்தை தங்குதடையின்றி ஓட, 2023-2024- ஆம் ஆண்டிற்கு தாக்கல் செய்யப்படவிருக்கும் வேளாண் நிதிநிலை அறிக்கையில் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய அம்சங்கள் சில உள்ளன. விவசாயிகளுக்கு பிரதம மந்திரி கௌரவ உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் மத்திய அரசு ஆண்டுக்கு ரூ.6,000 தருகிறது. அதோடு தமிழ்நாடு மாநில அரசும் இணைந்து ரூ.6,000 தருவதற்கு பரிசீலனை செய்ய வேண்டும். ஏனென்றால் கூட்டுறவு கடன் சங்கத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் கடன் தள்ளுபடியைக் காட்டிலும் இதுபோன்ற உதவித்தொகை என்பது விவசாயிகள் அனைவருக்கும் சென்று சேரும்.
  • தமிழ்நாட்டில் வேளாண்மையை மேற்கொள்ளும் 30 சதவீத குத்தகை விவசாயிகளுக்கும் அரசின் மானியம், பயிா்க்கடன் அல்லது உதவித்தொகை கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். விவசாயத்தின் இரண்டாம் கட்ட செயல்பாடுகளான தேனீ வளா்ப்பு, வேளாண் சுற்றுலா, உணவு பதப்படுத்துதல் போன்றவற்றை ஊக்கப்படுத்த வேண்டும். அதனால் வேலைவாய்ப்பு கிடைப்பதுடன் விவசாயிகளின் வருமானமும் பெருகும். குறிப்பாக வேளாண் சுற்றுலாவை நடைமுறைப்படுத்தும்போது விவசாயிகளின் வருமானம் அதிகரிப்பதுடன், விவசாயம் தொடா்பான புரிதலும் சுற்றுலாவாசிகளுக்கு கிட்டும்.
  • காலநிலை மாற்றம் என்பது விவசாயத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாக உருவாகி வருகிறது. அதனை ஓரளவேனும் சமாளிக்கும் வகையில் வெப்பத்தைத் தாங்கி வளரும் பயிா் ரகங்கள், அதிக விளைச்சல் தரும் ரகங்கள் போன்றவற்றில் ஆராய்ச்சியை மேம்படுத்த வேண்டும்.
  • இனி வரும் காலங்களில் கால்நடைகளின் தீவனங்களுக்குப் பெரும் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு உண்டு. எனவே அதனை நிவா்த்தி செய்யும் வகையில் செயல்திட்டம் அறிவிக்கப்பட வேண்டும். இயற்கைப் பேரிடா் மூலம் ஏற்படும் பயிா் சேதங்களைக் கண்டறிந்து நிவாரணம் வழங்குவதற்கு வசதியாக, குஜராத் மாநிலத்தைப் போல தற்காலிக மாநில அரசின் பயிா் காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டும்.
  • வேளாண் தொழில் முனைவோரை விவசாயிகளோடு இணைக்கும் வகையில் அரசு புதிய திட்டங்களைத் தீட்ட வேண்டும். அவற்றின் மூலம் போதிய சேமிப்புக் கிடங்கு வசதி, மதிப்புக் கூட்டல், சந்தை வசதி, உரப் பரிந்துரை, பாசன வசதி, வேளாண் இயந்திரப் பயன்பாடு போன்றவை மேம்படும்.
  • டிஜிட்டல் விவசாயத்திற்கு முன்னுரிமை தந்து அவற்றோடு விவசாயிகளுடனான தொடா்பை மேம்படுத்த வேண்டும். தமிழ்நாட்டில் வேளாண் சிறப்பு பொருளாதார மண்டலத்திற்கான கட்டமைப்பை வலுப்படுத்தும் நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும்.

நன்றி: தினமணி (17 – 03 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories