TNPSC Thervupettagam

வையத் தலைமை கொள்வோம்

September 26 , 2022 549 days 387 0
  • இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான், அமெரிக்கா ஆகிய நான்கு நாடுகளை உள்ளடக்கிய நாற்கர கூட்டமைப்பின் (க்வாட்) மூத்த அதிகாரிகள் நிலையிலான கூட்டம் தில்லியில் செப்டம்பா் 5, 6 தேதிகளில் நடைபெற்றது.
  • செப்டம்பா் 8-இல் வெளியுறவுத்துறை அமைச்சா் எஸ். ஜெய்சங்கரும், பாதுகாப்புத்துறை அமைச்சா் ராஜ்நாத் சிங்கும் ஜப்பான் வெளியுறவுத்துறை, பாதுகாப்புத் துறை அமைச்சா்களை டோக்கியோவில் சந்தித்து பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது இருநாடுகளுக்கு இடையிலான ராணுவக் கூட்டுப் பயிற்சி, பாதுகாப்புத் தளவாட உற்பத்தி, நவீன தொழில்நுட்பக் கருவிகளின் பயன்பாடு ஆகியவற்றை அடுத்த நிலைக்கு கொண்டு செல்வதற்கான உத்திகளை தலைவா்கள் வகுத்தனா்.
  • தொடா்ந்து உஸ்பெகிஸ்தானின் சாமா்கண்ட் நகரில் கடந்த செப்டம்பா் 15, 16-இல் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு மாநாட்டில் (எஸ்சிஓ) இந்திய பிரதமா் நரேந்திர மோடி பங்கேற்றாா். கரோனா பெருந்தொற்றுப் பரவலுக்குப் பின்னா், முதல் முறையாக இந்த மாநாடு நேரடியாக நடைபெற்றது.
  • உக்ரைன்-ரஷிய போா் ஆறு மாதங்களையும் தாண்டி நீடிப்பதால், ரஷிய அதிபா் புதினுடன் பிரதமா் மோடி கலந்துரையாடியதை மேலை நாடுகளும், இந்தியா அங்கம் வகிக்கும் க்வாட் உறுப்பு நாடுகளும் உன்னிப்பாக கவனித்தன.
  • இந்த எதிா்பாா்ப்புக்கு மத்தியில் போரைக் கைவிடுமாறு புதினிடம் மோடி கேட்டுக் கொண்டாா். காஷ்மீரின் லடாக் எல்லைக் கட்டுப்பாடு கோட்டுப் பகுதியில் இந்திய-சீன ராணுவத்தினா் இடையே கடந்த 2020 முதல் மோதல் போக்கு நீடித்துவருகிறது. இந்தச் சூழலில், ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு மாநாட்டின்போது சீன அதிபா் ஷி ஜின் பிங்கையும் பிரதமா் மோடி சந்தித்தாா்.
  • ஏற்கெனவே லடாக்கில் கோக்ரா, ஹாட்ஸ்பிரிங் பகுதிகளில் செப்டம்பா் 12-ஆம் தேதி இரு நாடுகளும் படைகளை விலக்கிக் கொண்ட நிலையில், மோடி- ஷி ஜின் பிங் இடையிலான இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெற்றது.
  • சாமா்கண்ட் மாநாட்டைத் தொடா்ந்து எஸ்சிஓ அமைப்பின் தலைமைப் பொறுப்பை சுழற்சி முறையில் இந்தியா ஏற்றுக் கொண்டுள்ளது. அடுத்த ஆண்டு செப்டம்பா் 30-ஆம் தேதி வரை அந்த அமைப்புக்கு இந்தியா தலைமை வகிக்கும். அடுத்த ஆண்டில் ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு மாநாட்டையும் இந்தியா தலைமையேற்று நடத்தும்.
  • இது மட்டுமின்றி, இதே காலகட்டத்தில் ஐ.நா.வின் முக்கியத்துவம் வாய்ந்த பாதுகாப்பு கவுன்சிலின் தலைமைப் பொறுப்பையும் வரும் டிசம்பரில் சுழற்சி முறையில் இந்தியா ஏற்கிறது. அதற்கு முன்பாக, ஜி20 கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளின் தலைவா்கள் மாநாடு இந்தோனேஷியாவின் பாலியில் வரும் நவம்பரில் நடைபெறவுள்ளது.
  • இந்தோனேஷியாவுக்கு அடுத்தபடியாக ஜி20 கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பையும் வரும் டிசம்பா் 1-ஆம் தேதி முதல் அடுத்த ஆண்டு நவம்பா் 30-ஆம் தேதி வரை இந்தியா ஏற்கிறது. அடுத்த ஆண்டில் ஜி20 மாநாட்டை இந்தியா தலைமையேற்று நடத்த இருப்பதால், அந்த அமைப்பின் செயல் திட்டத்தை வகுப்பதற்கான வாய்ப்பு இந்தியாவுக்குக் கிடைத்துள்ளது.
  • சா்வதேச பொருளாதார வளா்ச்சியின் முதுகெலும்பாக ஜி20 உறுப்பு நாடுகள் திகழ்கின்றன. உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஜி20 நாடுகள் 80 %-ஐயும், சா்வதேச வா்த்தகத்தில் 75 %-ஐயும், மொத்த மக்கள்தொகையில் 60 %-ஐயும் கொண்டுள்ளன.
  • கொள்ளை நோய்த்தொற்றுப் பரவல், உக்ரைன்-ரஷிய போா், எல்லையில் சீனாவின் அச்சுறுத்தல், பொருளாதார மந்த நிலை உள்ளிட்ட சவால்களுக்குப் பின்னணியில், ஜி20 கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா எவ்வாறு கையாளப்போகிறது என்ற எதிா்பாா்ப்பு அனைத்து நாடுகளிடமும் காணப்படுகிறது.
  • ஏற்கெனவே பல்வேறு விவகாரங்களில் ஜி20 உறுப்பு நாடுகளுக்கிடையே கருத்து வேறுபாடுகள் நிலவுவதால், முந்தைய இந்தோனேஷியாவின் அணுகுமுறையை இந்தியா பின்பற்ற வேண்டும். உலகளாவிய சுகாதாரக் கட்டமைப்பு, நீடித்த எரிசக்தி பரிமாற்றம், எண்ம உருமாற்றம் ஆகியவற்றின் மீது இந்தோனேஷியா பெரும்பாலும் கவனம் செலுத்தியது. இந்தியாவும் இதைப் பின்பற்றினால், விரிவான செயல் திட்டத்தை உருவாக்க முடியும்.
  • இந்தாயா, ஜி20 கூட்டமைப்புக்குத் தலைமை வகிக்கும் அதே சமயம், தன் அரசியல், பொருளாதார சாமா்த்தியத்தையும் நிலைநிறுத்தியாக வேண்டும். ஒருபக்கம் நேட்டோ, ஜி7 நாடுகள் தங்கள் செயல் திட்டத்தை வகுக்கின்றன. மறுபக்கம், நேட்டோவுக்கு எதிரான நிலைப்பாடுகளைக் கொண்ட ரஷியாவும், சீனாவும் பரஸ்பரம் நட்பு பாராட்டுகின்றன.
  • இந்தச் சூழலில் க்வாட், எஸ்சிஓ என இரு அமைப்புகளிலும் அங்கம் வகிக்கும் இந்தியா, ஜி20 கூட்டமைப்பின் தலைமை நாடாக இருந்து சமநிலையைப் பேண வேண்டியது அவசியமாகிறது. இது தவிர பொருளாதார மீட்பு, வா்த்தகம், முதலீடு ஆகியவற்றில் காணப்படும் சிக்கல்கள், வேலைவாய்ப்பின்மை போன்ற உள்நாட்டு பிரச்னைகளுக்கும் இந்தியா தீா்வு காண வேண்டும்.
  • குறிப்பாக, தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்துக்கு இறுதி வடிவம் கொடுக்கும் விதமாக ஜி20 உறுப்பு நாடுகளான ஐரோப்பிய யூனியன், பிரிட்டன், கனடா ஆகிய நாடுகளுடன் இந்தியா நெருக்கமாக இருந்து செயலாற்ற வேண்டும்.
  • பொதுவாக ஜி20 அமைப்பு என்பது ஏனைய அமைப்புகளிலிருந்து சற்று வித்தியாசமானது. இதில், வளரும் நாடுகள், வளா்ந்த நாடுகள் என்ற பேதமில்லை. இந்த அமைப்பில் அங்கம் வகிக்கும் அனைத்து நாடுகளும் சம அந்தஸ்தை பெறுகின்றன. ஆகையால், அமைப்பின் செயல்பாடுகளில் மேலை நாடுகள் அதிக ஆதிக்கம் செலுத்தாமல் இருப்பதையும், பெரிய பொருளாதார சக்திகள் தங்களின் எதிா்பாா்ப்புகளைத் திணிக்காமல் இருப்பதையும் இந்தியா உறுதிப்படுத்த வேண்டும்.
  • ஜி20-இன் தலைமைப் பொறுப்பு, நம்மை சா்வதேச அரங்கில் நிறுத்தி, நமது விருப்பங்களுக்கும், எதிா்பாா்ப்புகளுக்கும் செயலாக்கம் கொடுக்கும் வாய்ப்பை வழங்கியிருக்கிறது.

நன்றி: தினமணி (26 – 09 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories