TNPSC Thervupettagam

அதிமுக உட்கட்சி விவகாரம்: தேர்தல் ஆணையத்தை விட்டால் வேறு யார் தலையிடுவது?

February 13 , 2025 78 days 101 0

அதிமுக உட்கட்சி விவகாரம்: தேர்தல் ஆணையத்தை விட்டால் வேறு யார் தலையிடுவது?

  • அதிமுக பொதுச்செயலாளர் தேர்வு குறித்து எழுந்த சர்ச்சையை தேர்தல் ஆணையம் விசாரிக்க விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அக்கட்சியைச் சேர்ந்த ரவீந்திரநாத் மற்றும் புகழேந்தி உள்ளிட்டோரின் மனுக்களை விசாரித்த நீதிமன்றம் இத்தகைய உத்தரவை பிறப்பித்துள்ளது.
  • இதன்மூலம் அதிமுக விவகாரம் மீண்டும் தேர்தல் ஆணையத்தின் கரங்களுக்கு சென்றுள்ளது. உயர்நீதிமன்ற தீர்ப்பையடுத்து, முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், ‘‘கட்சியின் நிர்வாகத்தில் நடைபெறும் மாற்றங்களை பதிவு செய்து கொள்ளும் அதிகாரம் மட்டுமே தேர்தல் ஆணையத்திற்கு உண்டு. அதன் சட்டப்பூர்வ நிலை குறித்து ஆராயும் அதிகாரம் தேர்தல் ஆணையத்திற்கு இல்லை. கட்சிகளின் உட்கட்சி விவகாரங்களில் தலையிட முடியாது’’ என்று தெரிவித்துள்ளார். தேர்தல் ஆணையம் உட்கட்சி விவகாரங்களில் தலையிட முடியாது என்பது ஏற்றுக் கொள்ளக்கூடியதே. அதற்கு ஆதரவாக உச்சநீதிமன்ற தீர்ப்புகளும் உள்ளன.
  • இருந்தாலும், தேர்தல் ஆணையத்திற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை குறைத்து மதிப்பிட முடியாது. ஒரு கட்சி ஆரம்பிக்கும்போதே, அதன் சட்டதிட்டங்கள் தேர்தல் ஆணையத்திற்கு வழங்கப்படுகின்றன. அவற்றை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்ட பின்பே கட்சி பதிவு செய்யப்படுகிறது. அந்த சட்டதிட்டங்களின்படி, அக்கட்சி முறையாக இயங்குகிறதா என்று கண்காணிக்கும் பணியையும் தேர்தல் ஆணையம் செய்கிறது.
  • உட்கட்சி ஜனநாயகம், உட்கட்சி தேர்தல் நடைமுறைகளும் தேர்தல் ஆணையத்திற்கு வழங்கப்படுகின்றன. அவை நடக்காவிட்டால் கேள்வி எழுப்பும் அதிகாரம் தேர்தல் ஆணையத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. கட்சி ஆரம்பிக்கும்போது வகுக்கப்பட்ட விதிகளின்படியே அக்கட்சி இயங்குகிறது என்பதை உறுதிசெய்யும் பொறுப்பு தேர்தல் ஆணையத்திடமே உள்ளது.
  • அதிமுக விவகாரத்தை பொறுத்தமட்டில், கட்சியின் அடிப்படை விதிகளைத் திருத்தி, எடப்பாடி பழனிச்சாமி பொதுச்செயலாளராக தேர்வாகி உள்ளார் என்பதே பிரதான சர்ச்சையாகும். அதுகுறித்த வழக்கு நிலுவையில் உள்ளபோது, தேர்தல் ஆணையம் முடிவு செய்ய அதிகாரம் இல்லை என்பதே எடப்பாடி பழனிச்சாமி தரப்பு வாதமாக உள்ளது.
  • கட்சியின் நிர்வாகி யார் என்பதை கட்சி மட்டுமே முடிவு செய்ய முடியும். அதில் சர்ச்சை ஏற்படும்போது நீதிமன்றம் மட்டுமே தலையிட முடியும்; தேர்தல் ஆணையத்திற்கு வேலையில்லை என்பதே அவர்கள் கருத்தாக உள்ளது. அப்படியென்றால், 2023ம் ஆண்டு ஏப்ரல், 20ம் தேதி, அதிமுக-வின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை அங்கீகரித்தும், இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கியும் தேர்தல் ஆணையம் எடுத்தமுடிவும் விவாதத்திற்குரியதே.
  • கட்சியால் தேர்வு செய்யப்பட்ட ஒரு நிர்வாகியை ஆட்சேபணைகளை மீறி அங்கீகரிக்கும் அதிகாரம் தேர்தல் ஆணையத்திற்கு இருக்கிறதென்றால், அந்த நிர்வாகி தேர்வு அந்தக் கட்சியின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு நடந்திருக்கிறதா என்று சரிபார்க்கும் அதிகாரமும் தேர்தல் ஆணையத்திற்கு இருக்கிறதென்று தானே அர்த்தம். தங்களுக்கு சாதகமாக முடிவெடுக்கும் போது தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் இருக்கிறதென்றும், பாதகமான முடிவு வரும்போது ஆணையத்திற்கு அதிகாரம் இல்லை என்று வாதிடுவதும் ஏற்புடையதல்ல. கட்சி விவகாரங்களை தேர்தல் ஆணையம் விசாரிக்க முடியாவிட்டால் வேறு யார் விசாரிக்க முடியும்?

நன்றி: இந்து தமிழ் திசை (13 – 02 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்