TNPSC Thervupettagam

அணிசேரா இயக்கம் மற்றும் அணிசேரா இயக்கத்தின் 19வது உச்சி மாநாடு

April 23 , 2024 10 days 186 0

(For English version to this please click here)

அறிமுகம்

  • அணிசேரா இயக்கம் (NAM) 1961 ஆம் ஆண்டு பனிப்போர் நடைபெறும் காலத்தில் வளரும் நாடுகளின் நலன்களை முன்னேற்றும் அடிப்படையில் நிறுவப்பட்டது.
  • காலனித்துவ நீக்கம், புதிய சுதந்திர நாடுகளை உருவாக்குதல் மற்றும் சர்வதேச உறவுகளை ஜனநாயகப் படுத்துதல் ஆகியவற்றில் அணிசேரா இயக்கம் முக்கியப் பங்கு வகித்தது.

உறுப்பினர் மற்றும் அமைப்பு

  • தற்போது, அணிசேரா இயக்கமானது 120 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்டுள்ள நிலையில், அவை ஐக்கிய நாடுகளின் மொத்த உறுப்பினர்களில் 60% ஆகும்.
  • அணிசேரா இயக்கத்தின் பார்வையாளர் அந்தஸ்து 17 நாடுகளுக்கும் மற்றும் 10 அமைப்புகளுக்கும் வழங்கப் பட்டுள்ளது.

கொள்கைகள் மற்றும் இலட்சியங்கள்

  • உலக அரங்கில் மேற்குலகின் ஒருதலை பட்சமான அணுகுமுறைகள் மற்றும் செயல்களை எதிர்க்கும் அரசியல் கூட்டத்தின் முக்கிய இடத்தைப் பெற அணிசேரா இயக்கம் விரும்புகிறது.
  • அணிசேரா இயக்கம் அதன் செயல்முறைகளைப் பத்து பாண்டுங் கொள்கைகளில் எடுத்து உரைக்கிறது, அவைகள் பின்வருமாறு:
    • அடிப்படை மனித உரிமைகள் மற்றும் ஐக்கிய நாடுகள் சாசனத்தின் நோக்கங்கள் மற்றும் கொள்கைகளுக்கு மதிப்பளித்தல்.
    • அனைத்து நாடுகளின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கான மரியாதை.
    • அனைத்து இனங்களின் சமத்துவத்தையும் பெரிய மற்றும் சிறிய அனைத்து நாடுகளின் சமத்துவத்தையும் அங்கீகரித்தல்.
    • மற்றொரு நாட்டின் உள்விவகாரங்களில் குறுக்கீடு அல்லது தலையீடு செய்வதைத் தவிர்ப்பது.
    • ஐக்கிய நாடுகளின் சாசனத்திற்கு இணங்க, ஒவ்வொரு தேசமும் தனித்தனியாகவோ அல்லது கூட்டாகவோ தன்னைத் தற்காத்துக் கொள்ளும் உரிமைக்கு மதிப்பளித்தல்.
    • எந்தவொரு ஆதிக்கச் சக்திகளின் குறிப்பிட்ட நலன்களுக்காக, ஈடுபாட்டுடன் கூட்டுப் பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது மற்றும் எந்த நாடும் மற்ற நாடுகளின் மீது ஆதிக்கம் செலுத்துவதைத் தவிர்ப்பது.
    • எந்தவொரு நாட்டின் பிராந்திய ஒருமைப்பாடு அல்லது அரசியல் சுதந்திரத்திற்கு எதிராக ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் அல்லது அச்சுறுத்தல்கள் அல்லது சக்தியைப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது.
    • ஐக்கிய நாடுகளின் சாசனத்திற்கு இணங்க, பேச்சுவார்த்தை, சமரசம், நடுவர் அல்லது நீதித்துறை தீர்வு மற்றும் கட்சிகளின் சொந்த விருப்பத்தின் பிற அமைதியான வழிமுறைகள் போன்ற அனைத்து சர்வதேச மோதல்களையும் அமைதியான வழிகளில் தீர்த்தல்.
    • பரஸ்பர நலன்கள் மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்துதல்.
    • நீதி மற்றும் சர்வதேச கடமைக்கு மரியாதை.

அணிசேரா இயக்கத்தின் இலக்குகள் மற்றும் சாதனைகள்

காலனித்துவத்தை முடிவுக்கு கொண்டு வருதல் மற்றும் விடுதலை இயக்கங்களை ஆதரித்தல்

  • அணிசேரா இயக்கம் அதன் மாநாடுகளில் முழு உறுப்பினர் அந்தஸ்தை வழங்குவதன் மூலம், தேசிய விடுதலை இயக்கங்களை ஆதரிப்பதன் மூலம்காலனித்துவத்தை முடிவுக்குக் கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்டது.
  • இந்த ஆதரவு ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவில் காலனித்துவ நீக்கத்தை துரிதப்படுத்தியது என்பதோடு, தென்னாப்பிரிக்கா மற்றும் நமீபியா போன்ற நாடுகளில் சுதந்திரம் மற்றும் பெரும்பான்மை ஆட்சிக்குப் பங்களித்தது.

அமைதி, ஆயுதம் அல்லாத மற்றும் உலகளாவிய இயக்கவியலை மாற்றுதல்

  • அமைதி, அமைதியான சகவாழ்வு மற்றும் மனித சகோதரத்துவத்தை மேம்படுத்துதல், பனிப்போர் பதட்டங்களைக் குறைப்பதில் அணிசேரா இயக்கம் முக்கியப் பங்கு வகித்தது.
  • இது சர்வதேசக் கட்டுப்பாட்டின் கீழ் பொது மற்றும் முழுமையான ஆயுதக் குறைப்புக்கான அவசியத்தை வலியுறுத்தி, ஆயுதக் குறைப்பு மற்றும் ஆயுதப் போட்டிக்கு முற்றுப்புள்ளி வைக்க வாதிட்டது.
  • அணிசேரா இயக்கத்தின் முயற்சிகள் அணுசக்தி சோதனை மற்றும் இரசாயன ஆயுதங்களைத் தடை செய்வதற்கான, நிரந்தர தடைக்கான அழைப்புகளுக்கு வழி வகுத்தன.
  • கூடுதலாக, அணிசேரா இயக்கம் ஐ.நா.வின் அமைப்பை மாற்றியது.
  • இது அதன் பொதுச் சபையில் புதிய வாக்களிக்கும் பெரும்பான்மையை உருவாக்கியதோடு மூன்றாம் உலக நாடுகள் அதன் காரணங்களை வாதிடுவதற்கு ஒரு பொதுவான தளத்தை வழங்கி, சர்வதேச உறவுகளை ஜனநாயகப் படுத்தியது.

பொருளாதாரச் சமத்துவம் மற்றும் அதிகாரமளித்தல்

  • பொருளாதாரச் சமத்துவமின்மை மற்றும் புதிய காலனித்துவத்தைக் குறிப்பிட சர்வதேசப் பொருளாதார ஆணைக்கு (New International Economic Order) அணிசேரா இயக்கம் அழைப்பு விடுத்தது.
  • சமத்துவம், பாகுபாடின்மை மற்றும் ஒத்துழைப்பின் அடிப்படையில் சர்வதேச, பொருளாதார மற்றும் நிதி அமைப்புகளை மறுகட்டமைப்பதற்காக அணிசேரா இயக்கம் வாதிட்டது.
  • அணிசேரா இயக்கம் இயற்கை வளங்கள் மீதான பொருளாதார இறையாண்மையை அங்கீகரிக்கவும், தலையீட்டு வர்த்தகக் கொள்கைகளை சட்டப்பூர்வமாக்கவும் வாதிட்டது.
  • இது பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் தொழில்நுட்பப் பரிமாற்றம் தொடர்பான சிக்கல்களை முன்னிலைப்படுத்திய வகையில், இது சர்வதேச நாணய நிதியத்தின் இழப்பீட்டு நிதி அமைப்புகள் போன்ற முயற்சிகளுக்கு வழி வகுத்தது.
  • கலாச்சாரத் துறையில், அணிசேரா இயக்கம் செய்தித்துறை நிறுவனங்களை நிறுவியதன் மூலம், அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும், நலிவடைந்த நாடுகள் சுதந்திரமாகத் தொடர்பு கொள்வதற்கு உதவியதோடு, தகவல் தொடர்பு அமைப்புகளில் மேற்கத்திய ஆதிக்கத்தைச் சவால் செய்தது.

அணிசேரா இயக்கத்தின் 19வது உச்சி மாநாடு

  • அணிசேரா இயக்கத்தின் 19வது உச்சி மாநாடு உகாண்டா குடியரசின் கம்பாலாவில் 2024 ஆம் ஆண்டு ஜனவரி 19 முதல் 20 வரை கூடியது.
  • இந்த மாநாட்டிற்கான கருத்துரு "பகிரப்பட்ட உலகளாவிய செழுமைக்கான ஆழமான ஒத்துழைப்பு".

அணிசேரா இயக்கத்தின் 19வது உச்சி மாநாட்டின் முடிவுகள்

மதிப்பாய்வு மற்றும் தொடர்ச்சி:

  • உச்சி மாநாட்டுத் தலைவர்கள் அசர்பைஜான் நாட்டில் நடத்தப் பட்ட 2019 ஆம் ஆண்டு உச்சி மாநாட்டிற்குப் பிறகு ஏற்பட்ட முன்னேற்றம் பற்றிய விரிவான மதிப்பாய்வை மேற்கொண்டனர்.
  • அவர்கள் கடந்த சாதனைகளை ஒப்புக் கொண்டதோடு கூடுதல் கவனம் தேவைப்படும் பகுதிகளை அடையாளம் கண்டு அதன் தொடர்ச்சிக்கான உறுதிப்பாட்டை வெளிப்படுத்தினர் மற்றும் முந்தையக் கடமைகளைப் பின் தொடர்கின்றனர்.

வழிகாட்டும் கோட்பாடுகள் மற்றும் வரலாற்றுச் சூழல்:

  • அணிசேரா இயக்கத்தின் வரலாற்றுச் சூழலை வலியுறுத்தி, தலைவர்கள் பாண்டுங் (1955) மற்றும் பெல்கிரேட் (1961) ஆகிய இடங்களில் வெளிப்படுத்தப்பட்ட இந்த இயக்கத்தின் நிலையான கொள்கைகளை மீண்டும் வலியுறுத்தினர்.
  • இந்தக் கொள்கைகளில் இறையாண்மைக்கான மரியாதை, பிராந்திய ஒருமைப்பாடு, உள் விவகாரங்களில் தலையிடாமை மற்றும் அமைதியான சகவாழ்வு ஆகியவை அடங்கும் என்பதோடு இது பனிப்போர் காலத்தில் அணி சேரா இயக்கத்தின் தோற்றத்தைப் பிரதிபலிக்கிறது.

உலகளாவிய சவால்களை எதிர்கொள்தல்:

  • ஆயுதம் சார் மோதல்கள், மனிதநேயம் சார்ந்த நெருக்கடிகள், பயங்கரவாதம் மற்றும் தீவிரவாதம் உள்ளிட்ட பல்வேறு உலகளாவியச் சவால்களை எதிர்கொள்ள உறுப்பு நாடுகளுக்கு உச்சி மாநாடு ஒரு தளத்தை வழங்கியது.
  • இந்தச் சவால்களை எதிர்கொள்வதில் கூட்டு நடவடிக்கை மற்றும் சர்வதேச ஒத்துழைப்பின் பெரும் முக்கியத்துவத்தை தலைவர்கள் அடிக்கோடிட்டு, அமைதியான வழியில் சிக்கல்களுக்கான தீர்வு மற்றும் மோதல் தடுப்பு ஆகியவற்றின் அவசியத்தை தலைவர்கள் இதில் வலியுறுத்தினர்.

பாலஸ்தீனத்துடனான ஒற்றுமை:

  • இஸ்ரேலிய இராணுவ ஆக்கிரமிப்பு, குடியேற்ற விரிவாக்கம் மற்றும் பாலஸ்தீன உரிமை மீறல்களை கண்டித்து, பாலஸ்தீனத்தைப் பாதுகாக்க அணிசேரா இயக்கத்தின் நீண்டகால ஆதரவை, இந்த உச்சி மாநாடு மீண்டும் உறுதிப்படுத்தியது.
  • காஸாவில் உடனடி மற்றும் நீடித்த போர்நிறுத்தம், இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு முடிவுக்கு வருதல் மற்றும் கிழக்கு ஜெருசலமைத் தலைநகராகக் கொண்டு பாலஸ்தீனிய அரசை வழி நடத்துவதற்குத் தலைவர்கள் அழைப்பு விடுத்தனர்.

நிலையான வளர்ச்சியை ஊக்குவித்தல்:

  • நிலையான வளர்ச்சியின் முக்கியத்துவத்தை உணர்ந்து, 2030 ஆம் ஆண்டு நிகழ்ச்சி நிரல் மற்றும் அடிஸ் அபாபாவின் செயல் நிகழ்ச்சி நிரலைச் செயல்படுத்துவதில் தலைவர்கள் உறுதி பூண்டு உள்ளனர்.
  • வளரும் நாடுகளின் நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைவதில் சர்வதேச ஒத்துழைப்பு, நிதி ஆதரவு, தொழில்நுட்பப் பரிமாற்றம் மற்றும் திறன்-வளர்ப்பு ஆகியவற்றின் அவசியத்தை அவர்கள் வலியுறுத்தினர்.

காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு:

  • காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் சீர்கேட்டைக் கையாள்வதன் அவசரத்தை உச்சி மாநாடு எடுத்துக்காட்டுகிறது.
  • பசுமை இல்ல வாயு உமிழ்வைத் தணிக்கவும், காலநிலை மாற்றத்தின் தாக்கங்களுக்கு ஏற்பவும், பாதிக்கப்படக் கூடிய சமூகங்களுக்கு ஆதரவாகவும் மேம்படுத்தப்பட்ட முயற்சிகளுக்கு தலைவர்கள் அழைப்பு விடுத்தனர்.
  • காலநிலை தொடர்பான சவால்களை எதிர்கொள்வதில் சமமான மற்றும் நிலையான வளர்ச்சி பாதைகள் மற்றும் சர்வதேச ஒற்றுமை ஆகியவற்றின் முக்கியத்துவத்தை அவர்கள் வலியுறுத்தினர்.

மனித உரிமைகள் மற்றும் பாலினச் சமத்துவம்:

  • பாலினச் சமத்துவம் மற்றும் அதிகாரமளித்தல் உள்ளிட்ட மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கும் பாதுகாப்பதற்கும் தலைவர்கள் தங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினர்.
  • சகிப்புத்தன்மை, உரையாடல் மற்றும் பன்முகத்தன்மைக்கு மரியாதை ஆகியவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, அனைத்து வகையான பாகுபாடு, வன்முறை மற்றும் தீவிரவாதத்தையும் அவர்கள் கண்டனம் செய்தனர்.

அமைதி மற்றும் பாதுகாப்பு:

  • சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பைப் பேணுவதில் ஐக்கிய நாடுகள் சபையின் முக்கியப் பங்கை உச்சி மாநாடு வலியுறுத்தியது.
  • அனைத்து உறுப்பு நாடுகளின் நலன்கள் மற்றும் முன்னுரிமைகளைச் சிறப்பாகப் பிரதிபலிக்கும் வகையில் ஐ.நா பொதுச் சபையின் மறுமலர்ச்சி மற்றும் ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் சீர்திருத்தத்திற்கு தலைவர்கள் அழைப்பு விடுத்தனர்.
  • ஐ.நா. அமைதி காக்கும் நடவடிக்கைகள் மற்றும் மோதல்களைத் தடுக்கும் முயற்சிகளுக்கான ஆதரவை அவர்கள் மீண்டும் வலியுறுத்தினர்.

பிராந்திய மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு:

  • பிராந்திய மற்றும் சர்வதேச ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்து, கூட்டாண்மை மற்றும் உரையாடல் வழிமுறைகளை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை தலைவர்கள் வெகுவாக வலியுறுத்தினர்.
  • பொதுவான சவால்களை எதிர்கொள்ளவும், அமைதி, நிலைத்தன்மை மற்றும் வளர்ச்சியை மேம்படுத்தவும் அணிசேரா இயக்கம் மற்றும் ஆப்பிரிக்க ஒன்றியம் போன்ற பிற பிராந்திய அமைப்புகளுக்கு இடையே மேம்பட்ட ஒத்துழைப்பை ஏற்படுத்தவும் தலைவர்கள் அழைப்பு விடுத்தனர்.

செயல்முறைகளுக்கான நடவடிக்கைகள்:

  • விவாதங்கள் மற்றும் உடன்படிக்கைகளை உறுதியான நடவடிக்கையின் மூலம் மாற்றுவதற்கான அர்ப்பணிப்புடன் உச்சி மாநாடு முடிந்தது.
  • உச்சி மாநாட்டின் முடிவுகளை நடைமுறைப்படுத்தவும், அணிசேரா இயக்கத்தின் கூட்டு நலன்களை முன்னேற்றவும், நெருக்கமாக இணைந்து செயல்பட தலைவர்கள் உறுதியளித்தனர்.
  • ஒட்டு மொத்தமாக, அணிசேரா இயக்கத்தின் 19வது உச்சி மாநாடு, உலக அரங்கில் அமைதி, வளர்ச்சி மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான இயக்கத்தின் பொறுப்பையும் அர்ப்பணிப்பையும் மீண்டும் உறுதிப்படுத்தியது.
  • உலகளாவியச் சவால்களை எதிர்கொள்ளவும், கூட்டு நடவடிக்கை மற்றும் ஒற்றுமையின் மூலம் உறுப்பு நாடுகளின் பகிரப்பட்ட நலன்களை முன்னேற்றவும் தலைவர்கள் வலுவான உறுதியை வெளிப்படுத்தினர்.

-------------------------------------

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்