TNPSC Thervupettagam

அரசியல் நாகரீகத்தின் அடையாளம் அண்ணா

February 3 , 2025 103 days 172 0

அரசியல் நாகரீகத்தின் அடையாளம் அண்ணா

  • எல்லோராலும் "அண்ணா" என்று அன்போடு அழைக்கப்படும் காஞ்சிபுரம் நடராஜன் அண்ணாதுரைக்கு தனிப்பட்ட வாழ்க்கை என்று எதுவும் கிடையாது. அவர் வாழ்க்கை சமூக வாழ்க்கைதான். சுதந்திரம் பெற்ற முதல் 20 ஆண்டுகளில் அண்ணாவின் அரசியல் சமூக கொள்கை அவரது நடவடிக்கை அவரது வழிநடத்தல் தமிழகத்தின் தலைவிதியை இன்றுவரை அதுதான் நிர்ணயித்துக் கொண்டிருக்கிறது.. வழிநடத்திக் கொண்டிருக்கிறது என்று சொல்லலாம்.
  • முதலாம் வகுப்பு முதல் கல்லூரியில் முதுகலை பட்டப்படிப்பு படிக்கும் வரை பச்சையப்பன் கல்விக் கூட பேராசிரியர்களின் தத்துப்பிள்ளையாக இருந்தவர்தான் அண்ணா. 1935-ல் பெரியார், அண்ணா சந்திப்பு நடந்தது. திருப்பூரில் நடந்த மாநாட்டில் அண்ணாவின் பேச்சு பெரியாரைக் கவர்ந்தது. பெரியார் அண்ணாவை பார்த்து "என்ன செய்கிறாய் ? "என்று கேட்டார். அதற்கு அண்ணா "படிக்கிறேன்.. பரீட்சை எழுதி இருக்கிறேன்" என்று பதில் சொன்னார்.
  • உடனே "பெரியார் உத்தியோகம் பார்க்க போகிறாயா?" என்று கேட்டார். அப்போது அண்ணா "உத்தியோகம் பார்க்க விருப்பமில்லை. பொதுவாழ்வில் ஈடுபட விருப்பம்" என்று தெரிவித்தார். அந்த சந்திப்புதான் அவரது வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. பெரியாரின் சுவீகாரபுத்திரனாக இருந்தார் அண்ணா. அந்த அளவுக்கு அவர்கள் உறவு உறுதியாக இருந்தது.
  • 1949-ல் கழகத்தை தொடங்கும்போது அவருடன் இருந்தவர்கள், முன்னணித்தலைவர்கள் அனைவருமே முப்பது வயதுக்கு குறைந்தவர்கள். உலகில் இம்மாதிரி ஒர் அரசியல் கட்சி இருந்ததில்லை. 1957-ம் ஆண்டு பொதுத்தேர்தலில் முதன்முதலில் திமுக போட்டியிட்டது. சட்டப்பேரவைக்கு 15 இடங்களிலும் நாடாளுமன்றத்திற்கு இரண்டு இடங்களிலும் திமுகவுக்கு வெற்றி கிடைத்தது. 1962 தேர்தலில் 50 பேர் சட்டப் பேரவைக்கும் ஏழு பேர் நாடாளுமன்றத்துக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். காஞ்சிபுரத்தில் சட்டப்பேரவைக்கு போட்டியிட்டு அண்ணா தோல்வி அடைந்தார். அந்த தோல்வி பற்றி அவர் குறிப்பிடும் போது புனித ஜெருசலத்துக்காக ஐரோப்பிய நாடுகள் போரிட்டன.
  • அதன் பிறகு ஒப்பந்தம் ஏற்பட்டது. கூடவே நிபந்தனையும் விதிக்கப்பட்டது. ஐரோப்பிய படைக்கு தலைமை வகித்த ரிச்சர்ட் மன்னன் உள்ளே வரக்கூடாது. மற்றவர்கள் வரலாம் என்பது. இதனைக் கேட்ட அந்த மன்னன் நான் உள்ளே போக விட்டால் என்ன? என் படை உள்ளே போகிறது என்றான். அதேபோல் சட்டப் பேரவையில் என்னை நுழைய விடவில்லை. அதனால் என்ன ?, என் தம்பிமார்கள் 50 பேர்கள் உருவில் நான் செல்கிறேன் என்றார். அதன்பிறகு மாநிலங்களவை உறுப்பினராக 1962 ஏப்ரலில் அண்ணா தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • 1962-ல் முதன்முதலில் மாநிலங்களவையில் அண்ணா பேசியது அந்த அவையில் இருந்த எல்லோரையும் கவனிக்க வைத்தது, யோசிக்க வைத்தது. தற்போது இந்தியாவில் ஒரு பகுதியில் இருந்து தனிப்பட்ட திராவிட இனத்திலிருந்து நான் இங்கு வந்து இருக்கிறேன். ஒரு திராவிடன் என்பதை நான் பெருமையுடன் சொல்லிக் கொள்கிறேன். அதற்காக மற்றவர்கள் மீது வங்காளத்தவர்கள், மராட்டியர்கள், குஜராத்தியர்கள் இப்படி யார் மீதும் எனக்கு வெறுப்போ விரோதமோ கிடையாது.
  • ஒவ்வொரு மனிதனும் எல்லா வகையிலும் மதிக்கப்பட வேண்டியவனே. திராவிட இனத்தை சேர்ந்தவன் என்று நான் கூறிக்கொள்ளும் போது எங்களின் திராவிட நாகரீகம் நீண்ட வரலாற்றை, நீடித்த பெருமையை, இந்திய அமைப்பில் தனிப்பட்ட பங்கை பெற்றிருக்கிறது. தன்னாட்சி பெறுவதற்கான உரிமை அதற்கு இருக்கிறது "என்று பேசினார். அண்ணாவின் கன்னி பேச்சு ஒரு மணி நேரம் இருந்தது. தென்னிந்தியாவின் ஒரு தலைவராக விரைவில் எல்லோராலும் கவனிக்கப்படுவார் அண்ணா என்பதை 250 உறுப்பினர்கள் கொண்ட அந்த அவை உணர்ந்தது.
  • அண்ணா அவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தை தொடங்கிய போது அவரிடம் லட்சங்கள் இல்லை. ஆனால் லட்சியம் இருந்தது. அப்போது அவருடன் இருந்தவர்கள் யாரும் குபேரர்கள் இல்லை. குடிசையில் இருந்தவர்கள். அண்ணா ஏழைகளுடன் இருந்தார் அதுதான் அவருக்கு வெற்றிப் பாதையை காட்டியது.
  • பெரியாரின் அமைப்பை விட்டு அண்ணா வெளிவந்தார். ஆனால், பெரியாரை விட்டு பெரியாரின் லட்சியங்களை கொள்கைகளை விட்டு அவர் விலகிச் செல்லவில்லை. திமுக ஆட்சி என்பது பெரியாருக்கு தரப்பட்ட காணிக்கை என்று சட்டப்பேரவையில் பெருமையுடன் பேசினார் அண்ணா.
  • தமிழகத்தில் எதிர்ப்புக்கே இடமில்லை என்ற மனப்பாங்கில் இருந்த காங்கிரஸ் கட்சியை 1967 தேர்தலில் மிகப்பெரிய அதேசமயம் வலிமையான கூட்டணி அமைத்து அவர்களைப் படுதோல்வி அடைய செய்ய வைத்தார் அண்ணா. அண்ணா ஆளும்கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு முதல்வராவதற்கு முன்பு அவர் பெரியாரை சந்தித்து அவரது ஆசி வாங்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். இத்தனைக்கும் அந்த தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார் பெரியார்.
  • நமக்குள் எத்தனை கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் நாம் எல்லோரும் பெரியாரிடம் பயிற்சி பெற்ற பிள்ளைகள். எனவே அவரை சந்தித்து வாழ்த்து வாங்குவதுதான் சரியான முடிவு என்பதில் தீர்க்கமாக இருந்தார். முறையாக பெரியாரிடம் சந்திக்க அனுமதி பெற்றார் அண்ணா. ஆனால் பெரியாருக்கு மிகப்பெரிய சங்கடமாக இருந்தது. பெரியார் அண்ணா இருவரும் சந்தித்தபோது உணர்ச்சிவசப்பட்டு இருவரும் என்ன பேசுவது என்று தெரியாமல் சிறிது நேரம் மவுனமாக இருந்தார்கள்.
  • அண்ணாதான் அந்த மௌனத்தை கலைத்து உங்களிடம் நாங்கள் ஆசி வாங்க வந்திருக்கிறோம் என்று அவரது காலடியில் விழுந்து வணங்கினார். "என்னை கூச்சப்பட வைத்து விட்டீர்கள்" என்று பெரியார் கண்ணீர் விட ஆரம்பித்தார். மார்ச் 6-ம் தேதி அண்ணா தலைமையிலான அமைச்சரவை பொறுப்பேற்றுக் கொண்டபோது பெரியார் விடுதலையில் திமுகவின் கண்ணியமான பழகுமுறையை பார்த்து வியந்து அவர்கள் ஆட்சிப் பொறுப்பில் வெற்றி அடைய வாழ்த்தி தலையங்கம் எழுதினார் பெரியார்.
  • ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது கூட வெறும் எண்ணிக்கை மட்டும் மனதில் கொண்டு நாம் முடிவு எடுக்கக் கூடாது அப்படி தீர்மானிப்பது என்றால் நமது தேசியப் பறவையாக மயிலை தேர்ந்தெடுத்து இருக்கக் கூடாது காகத்தை தான் தேர்ந்தெடுத்து இருக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார் அண்ணா.
  • சட்டப்பேரவையில் அண்ணாவின் வாதம் எதிர்க்கட்சியை பேசவிடாமல் யோசிக்க வைக்கும். காங்கிரஸ் சட்டப்பேரவை தலைவராக இருந்த பி ஜி கருத்திருமன் நான் ஒவ்வொரு முறையும் சட்டப்பேரவைக்குள் நுழையும் போது அண்ணாவை கடுமையாக விமர்சனம் செய்ய வேண்டும் என்றுதான் உள்ளே நுழைவேன். ஆனால், அண்ணா பேச ஆரம்பித்ததும் அவர் பேச்சில் மயங்கி நான் ஏமாந்து விடுவேன் என்று சொல்லி இருக்கிறார். இதுவும் உண்மைதான்.
  • அவர் தனது ஆட்சியைப் பற்றி குறிப்பிடும் போது எனது அடிகள் அளந்து வைக்கப்படுகின்றன என்று சொல்லி இருக்கிறார்.அப்படி அவர் அளந்து வைத்த அடிகள்தான் இன்று தமிழகத்தில் அவர் வழியில் ஆட்சி செய்ய வேண்டும் என்றுதான் ஆட்சிக்கு வரும் எல்லோரும் விரும்புகிறார்கள்.
  • அரசியல் நாகரீகம் என்ற சொற்தொடரை வேலூரில் காந்தியடிகள் சிலையை திறந்தபோது 1954-ல் பயன்படுத்தினார். வாழ்நாள் முழுவதும் அதைக் கடைபிடித்துக் காட்டினார் அண்ணா.
  • அண்ணாவின் அரசியல் பேச்சுதான் என்னை ஈர்த்தது. முதலில் அவர் பேச்சை கவனிக்கும் ஒரு மாணவனாக இருந்த நான் பிறகு திராவிட முன்னேற்றக் கழக தொண்டனாக அவருடன் பழகப் பழக நான் முழுநேர அரசியல்வாதியாக மாறினேன். உன்னை நாடாளுமன்றத்துக்கு அனுப்பப் போகிறேன் என்று சொல்லி அப்படியே செய்து காட்டிய செயல் தலைவர் அண்ணா.
  • அண்ணா ஒரு சகாப்தம். அவர் ஒரு வரலாறு. பொது வாழ்வில் ஒரு தலைவன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான உதாரண புருஷன் அண்ணா. அவருடைய அருமை பெருமைகளை நான் நேரில் பார்த்தேன் என்ற முறையில் அவருடன் நாமும் அரசியல் செய்தோம் என்ற பெருமையையும் எனக்கு வாங்கித் தந்தவர் அண்ணா.
  • அண்ணாவின் மறைவால் தமிழகம் மட்டுமல்ல, இந்த உலகமே அழுதது. அண்ணாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தியவர்கள் ஒன்றரை கோடி மக்கள். இது ஒரு கின்னஸ் சாதனை. சரித்திர நாயகனின் மரணம் கூட சாதனையாக அமைந்தது.

நன்றி: இந்து தமிழ் திசை (03 – 02 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்