TNPSC Thervupettagam

அரசுமுறைப் பயணம்

May 18 , 2023 366 days 269 0
  • பிரதமர், தனது ஒன்பது ஆண்டுப் பதவிக் காலத்தில் அமெரிக்காவுக்குப் பலமுறை பயணித்திருக்கிறார். இருப்பினும், இதுவரையில் அவருடைய எந்தப் பயணமும் அரசுமுறைப் பயணமாக (State visit) அமையவில்லை.
  • தூதரக நெறிமுறைகளின்படி மிக உயர்ந்த பயணமாகக் கருதப்படும் அரசுமுறைப் பயணத்துக்கு அமெரிக்கா இப்போதுதான் மோடிக்கு அழைப்புவிடுத்துள்ளது. 2009இல் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் அமெரிக்காவுக்குச் சென்றதே, இந்தியப் பிரதமர் ஒருவரின் அரசு முறைப் பயணமாக இதுவரை இருந்துவருகிறது.

அரசுமுறைப் பயணங்கள் என்றால் என்ன?

  • அமெரிக்காவின் அரசுமுறைப் பயணம் என்பது ஒரு நாட்டின் / அரசாங்கத்தின் தலைமைப் பொறுப்பில் இருப்பவருக்கு விடுக்கப்படும் அழைப்பு.
  • இந்தப் பயணத்துக்கான அதிகாரபூர்வ வருகை அறிவிப்பில், தலைவரின் பெயருக்குப் பதிலாக நாட்டின் பெயரே குறிப்பிடப்பட்டிருக்கும். அமெரிக்க அதிபரின் அழைப்பின் பேரில் மட்டுமே அமெரிக்க அரசுமுறைப் பயணங்கள் நிகழ்கின்றன.

என்னென்ன விழாக்கள் இதில் அடக்கம்?

  • அரசுமுறைப் பயணங்கள் பொதுவாகச் சில நாள்கள் நீடிக்கும்; வருகைதரும் நாட்டின் தலைவருடைய பயண அட்டவணைக்கு ஏற்பப் பல விரிவான விழாக்களையும் அது கொண்டிருக்கும்.
  • இந்த விழாக்களில், விமானதள ஓடுபாதையில் அளிக்கப்படும் வரவேற்பு விழா, 21 துப்பாக்கிகளோடு கூடிய வணக்கத்துடன் நடைபெறும் வெள்ளை மாளிகை வருகை விழா, வெள்ளை மாளிகையில் இரவு உணவு, பரிசுகள் பரிமாற்றம், பென்சில்வேனியாவில் உள்ள அமெரிக்க அதிபரின் விருந்தினர் மாளிகையான ‘பிளேர் ஹவு’ஸில் தங்குவதற்கான அழைப்பிதழ் ஆகியவை இதில் அடங்கும்.

ஒவ்வொரு பயணமும் அரசுமுறைப் பயணமா?

  • இல்லை. அரசுமுறைப் பயணங்கள் என்பவை நாடுகளுக்கு இடையிலான இரு தரப்பு உறவுகளின் மிக உயர்ந்த வெளிப்பாடாகக் கருதப்படுகின்றன. இவை ஒப்பீட்டளவில் அரிதானவை. உதாரணமாக, அமெரிக்காவின் தூதரகக் கொள்கையின்படி, அமெரிக்க அதிபர் தனது பதவிக் காலத்தில், எந்த ஒரு நாட்டிலிருந்தும் ஒரு தலைவருக்கு மட்டும், அதுவும் ஒருமுறை மட்டுமே அரசுமுறைப் பயணத்துக்கு அழைப்புவிடுக்க முடியும்.

வேறு என்ன வகைப் பயணங்கள் உள்ளன?

  • அமெரிக்கத் தூதரகக் கொள்கையின்படி, அதிகாரபூர்வப் பயணம், அதிகாரபூர்வ அலுவல் பயணம், அலுவல் பயணம், அரசாங்கத்தின் விருந்தினராகப் பயணம், தனிப்பட்ட பயணம் ஆகியன குறைவான முக்கியத்துவம் வாய்ந்த பயணங்களாக வகைப்படுத்தப்படுகின்றன. இந்தப் பயணங்கள் ஒவ்வொன்றும் பின்பற்ற வேண்டிய வெவ்வேறு நெறிமுறைகளைக் கொண்டுள்ளன.
  • இந்தப் பயணங்களுக்கும் அரசுமுறைப் பயணத்துக்கும் இடையே உள்ள முக்கிய வேறுபாடு என்னவென்றால், அரசின் தலைவர் (நாடாளுமன்ற ஜனநாயக நாடுகளில் அரசாங்கத்தின் தலைவர்) மட்டுமே அரசுமுறைப் பயணத்தை மேற்கொள்ள அனுமதிக்கப்படுவார். பட்டத்து இளவரசர்கள், துணைத் தலைவர்கள், அரசு சார்ந்த சம்பிரதாயத் தலைவர்கள் போன்ற பிற தலைவர்கள் மற்ற வகைப் பயணங்களை மேற்கொள்ளலாம்.
  • பிரதமர் மோடியின் முந்தைய பயணங்கள் அலுவல் பயணம் (2014), அலுவலுடன் கூடிய மதிய உணவுப் பயணம் (2016), அதிகாரபூர்வ அலுவல் பயணம் (2017) என வகைப்படுத்தப்பட்டன. அவரது 2019 பயணத்தை அமெரிக்க வெளியுறவுத் துறை இணையதளம் ‘ஹூஸ்டனில் நடைபெற்ற ஒரு பேரணியில் பிரதமர் மோடி பங்கேற்றார்’ என்று மட்டுமே குறிப்பிட்டுள்ளது.

அரசுமுறைப் பயணங்கள் முக்கியமா?

  • ஆம்; இல்லை. இரண்டும் சேர்ந்தது என்று கூறலாம். அலுவல்பூர்வமாகவும் சம்பிரதாய ரீதியாகவும், அரசுமுறைப் பயணங்கள் மிகவும் மதிப்புமிக்கவை. இருப்பினும், உண்மையான ராஜதந்திரப் பணிகளுக்கு, பயணத்தின் வகைப்பாடு சிறிய வித்தியாசத்தையே ஏற்படுத்தும்.
  • அமெரிக்காவுடனான ஆரோக்கியமான உறவை வளர்ப்பதற்குத் தேவைப்படும் பணிகளை அரசுமுறைப் பயணங்களைப் போலவே மற்ற வகைப் பயணங்களிலும் நிறைவேற்ற முடியும். உண்மையாகச் சொல்ல வேண்டுமென்றால், அரசுமுறைப் பயணங்களின் அரிதான தன்மை, அவற்றின் சம்பிரதாயச் சடங்கு நிகழ்ச்சிகள் ஆகியவற்றின் காரணமாக, பெரும்பாலான ராஜதந்திர அலுவல் பணிகள் மற்ற வகைப் பயணங்களின்போதே மேற்கொள்ளப்படுகின்றன.

நன்றி: தி இந்து (18 – 05 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்