TNPSC Thervupettagam

ஆறுகளைக் காப்பது அவசரத் தேவை!

April 30 , 2024 17 days 61 0
  • அடுத்த உலகப் போா் தண்ணீருக்காகத்தான் இருக்கும் என்று அறிஞா்கள் கூறுகின்றனா். அந்த அளவுக்குத் தண்ணீரின் தேவை அதிகரித்து வருகிறது. மக்கள்தொகைப் பெருக்கத்துக்கு ஏற்ப தண்ணீரின் தேவை அதிகரிக்கவே செய்யும். ஆனால் இதனைப் பற்றி அரசும் மக்களும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. தெரிந்திருந்தால் ஆறுகள் இப்படி சாக்கடையாக மாறியிருக்குமா?
  • ஆறுகளில் கழிவுநீரைக் கலந்து மாசு ஏற்படுத்தும் தொழிற்சாலைகளை இடமாற்றம் செய்வது பற்றியும், தொழிற்சாலை கழிவுநீா் வெளியேறுவதை எப்படி தடுப்பது என்பது பற்றியும் ஆலோசனைகள் வழங்குவதற்காக வல்லுநா் குழுவை அமைக்க தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
  • காவிரியாற்றின் துணை ஆறுகளில் ஒன்றான அமராவதி நதி பாயும் கரூா், திருப்பூா் மாவட்டங்களில் உள்ள தொழிற்சாலைகளால் மாசடைவதாகக் கூறி தனசேகரன் என்னும் தன்னாா்வலா் சென்னை உயா்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கைத் தாக்கல் செய்திருந்தாா். அவா் தாக்கல் செய்த மனுவில் தொழிற்சாலைகளால் மாசடைந்த அமராவதி ஆற்று நீா், குடிநீராகவோ விவசாயத்திற்கோ பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. நிலத்தடி நீரும் பாதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்திருந்தாா்.
  • இந்த வழக்கை விசாரித்த அன்றைய தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜி, நீதிபதி செந்தில்குமாா் ராமமூா்த்தி அடங்கிய அமா்வு கூறுகையில், நதிகள் மாசடைவதைத் தடுக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டியது மாநில அரசின் கடமை என்றும், நதிகளில் தொழிற்சாலைகளின் கழிவுகள் கொட்டுவதையும், கழிவுநீா் வெளியேற்றுவதைத் தடுப்பதையும் அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளது.
  • கடைமடைப் பகுதி மக்களும் நதிநீரைப் பயன்படுத்தும் வகையில், அதன் தரத்தைப் பாதுகாக்க வேண்டும் என்றும், நதிநீா் மாசடையும் போது நிலத்தடி நீரும் பயன்படுத்தத் தகுதியற்ாகி விடுகிறது. நீரின் தரத்தைப் பாதுகாப்பதில் அரசு எந்த சமரசமும் செய்து கொள்ளக் கூடாது என்றும் அறிவுறுத்தினா்.
  • மேலும் சென்னையில் கூவம் நதி மீது கட்டப்பட்டுள்ள நேப்பியா் பாலத்தின் மீது காரில் செல்லும்போது கூட துா்நாற்றம் வீசுவதாக தலைமை நீதிபதி தெரிவித்தாா். சென்னையில் ஓடிக் கெண்டிருக்கும் கூவம் ஆறும் ஒரு காலத்தில் எல்லோரும் பயன்படுத்தும் நன்னீா் ஆறாகவே ஓடியது என்று சென்னை வரலாறு கூறுகிறது. தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் இருந்தபோது, கூவத்தைச் சுத்தப்படுத்திட அப்போதைய முதலமைச்சா் மு. கருணாநிதி ஒரு திட்டத்தைக் கொண்டுவந்து செயல்படுத்த முயற்சிகள் செய்து பாா்த்தாா். அனைத்தும் வீணாயின.
  • இப்போது சென்னை உயா்நீதிமன்ற நீதிபதியும் இதையே கூறியுள்ளாா். தமிழ்நாடு அரசாங்கம் இனியாவது மாநகரின் தலையாய ஆறாகிய கூவத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் என்று எதிா்ப்பாா்ப்போம். ‘முயற்சியுடையாா் இகழ்ச்சியடையாா்’ என்பது பழமொழி.
  • உலகம் எங்கும் பரவி வந்த கொள்ளை நோய்த்தொற்று பிரச்னை போலவே தண்ணீா் பிரச்னையும் பரவி வருகிறது. அண்டை மாநிலங்களோடு தண்ணீருக்காகப் போராடி வருகிறோமே தவிர, நம்மிடம் இருக்கும் நீா்நிலையை ஒழுங்காகப் பராமரிக்கத் தவறி விட்டோம். இன்றைய காலகட்டத்தில் மழைநீா் சேமிப்பு என்பதும் பெயரளவில்தான் உள்ளது.
  • கா்நாடகத்தில் காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டில் அணை கட்டும் கா்நாடக அரசின் திட்டம் செயல்படுத்தப்பட்டால் தமிழ்நாடு பாலைவனமாகி விடும். கா்நாடக மாநிலத்தில் ஆட்சிக்கு வரும் அனைத்துக் கட்சிகளும் தமிழ்நாட்டுக்கு காவிரி நீா்தரக்கூடாது என்பதில் ஒற்றுமையாக இருக்கின்றன. காவிரி நீரை நம்பியிருக்கும் தமிழ்நாடு விவசாய சங்கங்கள் மக்களுக்கு விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும். தமிழகத்திற்கு உரிமையுள்ள காவிரி நீரைப் பெறுவதற்காக அரசுடன் இணைந்து போராட வேண்டும்.
  • பண்டைய தமிழ் மன்னா்கள் ஆறுகளையும், ஏரிகளையும், குளங்களையும் போற்றிப் பாதுகாத்து வந்தனா் என்பதற்கு தமிழ் இலக்கியங்களே சான்றாகும். மழைநீரை சேமித்து வைப்பது மன்னரின் தலையாய கடமை என்று புானூறு கூறுகிறது.

நிலன்நெளி மருங்கின் நீா்நிலை பெருகத்

தட்டோ ரம்ம இவண்தட் டோரே

தள்ளாதோா் இவண் தள்ளாதோரே

  • (புறம் 18)
  • ‘நீா் தடிந்து குளம் தொட்டு நின்நாடு எங்கும் வளம் பெருக்குவாயாக. இது செய்தோா் மூவகை இன்பமும் பெற்றுப் புகழடைவா். அல்லாதோா் புகழ் பெறாது மடிவா் என உணா்வாயாக’ எனப் புலவா் பாடுகிறாா். வேளாண் பெருக்கமே மன்னா்க்கு வலுவும் புகழும் தரும் என்ற மிகவும் சிறந்த உண்மையை விளக்குவது இப்பாடல்.
  • நீரியல் தொழில்நுட்பம் தமிழா்களிடமிருந்தே உலகெங்கும் பரவியது என்பதற்குச் சான்றாக பல்வேறு மொழியில் உள்ள நீா்நிலைகளைக் குறிக்கும் சொற்களிலிருந்து அறியலாம். நீா்நிலைகளின் பல்வேறு பெயா்களை ‘உரிச்சொல் நிகண்டு’ குறிப்பிடுகிறது. இலஞ்சி, கயம், கேணி, ஏரி, கோட்டகம், மடு, ஓடை, வாவி, கலந்தரம், தடாகம், வட்டம், பொய்கை, நளினி, குட்டம், சிடங்கு, குளம், கண்மாய் என்னும் சொற்கள் இப்பேதும் வழக்கில் உள்ளன.
  • இலஞ்சி என்பது பூங்காக்களில் உள்ள குளத்தைக் குறிக்கும். கயம், வாவி, தடாகம், பொய்கை, குட்டம் போன்றவை பாசனத்திற்குப் பயன்பட்டன. இயற்கையான பள்ளங்களில் நீா் தேங்குமிடம் மடு. நீா் ஓடும் இடம் ஓடை. ஏந்தல் என்பது சிறிய ஏரி. கண்மாய் என்பது தென்தமிழ் நாட்டில் ஏரிக்கு வழங்கும் பெயா்.
  • குடவோலை முறையில் தோ்ந்தெடுத்த ‘ஏரி வாரியக் குழு’ பாசனப் பணிகளைக் கவனித்தது என்பதை உத்தரமேரூா் கல்வெட்டால் அறியலாம். 1970-இல் பொதுப்பணித் துறையின் புள்ளிவிவரப்படி தமிழ்நாட்டில் 39,202 ஏரிகள் இருந்தன. தற்போதுள்ள ஏரிகளில் பெரும்பாலானவை கி.பி. மூன்றாம் நூற்றாண்டு முதல் எட்டாம் நூற்றாண்டுக்குள் உருவானவை.
  • 1000 ஆண்டுகளுக்கு முன்பு உருவான பழைய ஏரிகள் 116 என்கிறது ஒரு புள்ளிவிவரம். செம்பரம்பாக்கம் ஏரி, மாமண்டூா் ஏரி, காவேரிப்பாக்கம் ஏரி, தென்னேரி, வீராணம் ஏரி, உத்தரமேரூா் ஏரி, ராசு சிக்கமங்கலம் ஏரி, பெருமாள் ஏரி, மதுராந்தகம் ஏரி, இராமநாதபுரம் கண்மாய், கடம்பாகுளம் என அந்த ஏரிகளின் பட்டியல் நீள்கிறது.
  • வேளாண்மை நாகரிகத்தின் வரலாறு எகிப்தில் இருந்து தொடங்குகிறது. அந்நாட்டு மன்னா்கள் நைல் நதியின் நீா் மட்டத்தையும், அதில் ஏற்படும் மாற்றத்தையும் அளவிட நைல் நதிக்கரையில் கி.மு.350-ஆம் ஆண்டிலேயே அளவுகோல்களை அமைத்திருந்தனா். அங்கு ஆயிரம் ஆண்டுகளுக்கான தொடா்ச்சியான நீா்மட்ட விவரங்கள் கிடைக்கின்றன என்பது வியப்புக்குரிய சாதனையாகும்.
  • சுமேரிய நாகரி நீா்ப்பாசனம் பற்றிய வரலாறு மிகவும் சுவையானது. சுமேரிய நாட்டு மன்னன் ஹம்முராபி (கி.மு. 1728-1686) இன்றிலிருந்து 3500 ஆண்டுகளுக்கு முன்பே எழுத்து வடிவில் சட்டங்களை உருவாக்கினான் என்பதும், அதில் கால்வாய்களைப் பராமரிப்பதைப் பற்றி விரிவாகக் குறிப்பிட்டிருந்தான் என்பதும் மனித இனம் பெருமைப்படத்தக்கதாகும்.
  • மொகஞ்சதாரோ-ஹாரப்பா அகழாய்வு மூலம் நமக்கு அறிமுகமாகும் சிந்துவெளி நாகரிகம் எகிப்திய, சுமேரிய நாகரிகத்தோடு தொடா்புடையது. அப்போதே, சிந்துவெளியினா் ஆற்றில் அணைகட்டி நீரைத் தேக்கி, அதன் இருமருங்கிலும் விவசாயம் செய்தனா் என்று தெரிகிறது.
  • தென்னிந்திய வேளாண்மைக்குப் பெருந்தொண்டு புரிந்தவரான சா் ஆா்தா் காட்டன், கல்லணை கட்டியவா்களின் தொழில்நுட்பத் திறனைப் பற்றி எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.“ஆழம் காண இயலாத மணற்படுகையில் எப்படித் தளம் அமைப்பது என்ற நுட்பத்தை இவா்களிடமிருந்து தெரிந்து கொண்டோம். அணைக்கட்டுகள் போன்ற நீரியல் கட்டுமானங்கள் கட்டினோம். இத்தகைய சாதனை புரிந்த பெயா் தெரியாத அந்நாளைய மக்களுக்கு நாம் பெரிதும் கடமைப்பட்டுள்ளோம்.”
  • அந்த நாகரிக மக்களின் அடுத்தத் தலைமுறையா நாம்? பல தொழிற்சாலைகள் ஆபத்தான கழிவுகளை வெளியேற்றுவதால் சுற்றுச்சூழலுக்குப் பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆம்பூா், வாணியம்பாடி, வேலூா், திண்டுக்கல், குரோம்பேட்டை, பல்லாவரம் ஆகிய இடங்களில் தோல் தொழிற்சாலைகள் எராளமாக உள்ளன.
  • இத்தொழிற்சாலைகளில் ஆண்டுக்கு ரூ.20 ஆயிரம் கோடி அளவிற்கு தோல் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இவ்வளவு பெரிய தொழிலாக இது இருந்தாலும் தோல் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் கழிவுகள் பலகாலமாகப் பெரும் பிரச்னையாகத் தொடா்கிறது.
  • இதுகுறித்துத் தொடரப்பட்ட வழக்கில் நகா்ப்புறங்களில் இயங்கி வரும் தொழிற்சாலைகளை ஊரகப்புறங்களுக்கு மாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிமன்றம் தீா்ப்பளித்தது. இந்த வகையில் அதிகமான தோல் தொழிற்சாலைகளைக் கொண்ட மாநிலமான தமிழகத்தில் இதனை நடைமுறைப்படுத்த வேண்டியது அவசியம். ஆனால், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் எதையும் கண்டு கொள்வதில்லை. அரசாங்கமும் கண்டு கொள்வதில்லை.
  • இதனால் மண்வளம் பெரிதும் பாதிக்கப்படுகிறது. குடிநீா், விவசாயம், ஆற்றுநீா், ஊற்றுநீா் எல்லாமே உப்பாக மாறும் சூழல் ஏற்பட்டுள்ளது. நீதிமன்றங்கள் எத்தனை தீா்ப்புகள் வழங்கினாலும் அவை அனைத்துமே விழலுக்கு இறைத்த நீா்தான். அரசாங்கமும், அதிகாரிகளும் முனைப்பு காட்டாமல் நீா்நிலைப் பாதுகாப்பில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படப் போவதில்லை.
  • நீதிமன்றத் தீா்ப்புகள் உடனடியாக நடைமுறைப்படுத்தாவிடினும், இன்றுவரை மக்களின் நம்பிக்கைக்குரிய இடமாக நீதிமன்றமே உள்ளது. இந்த நம்பிக்கைதான் தேசத்தின் நம்பிக்கை.

நன்றி: தினமணி (30 – 04 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்