- 2023 ஆம் ஆண்டு, இந்தியப் பொருளாதாரத்துக்கு இரண்டு முனைகளில்குறிப்பிடத்தக்க ஆண்டாகும். முதலாவதாக, கோவிட்-19 பெருந்தொற்றுக் காலத்துக்குப்பிந்தைய மீட்சி நிலைபெற்று, பொருளாதாரம் முதிர்ந்த வளர்ச்சியின் நிலையை எட்டியது. இந்த ஸ்திரத்தன்மை, பத்தாண்டுகளுக்கு முன்னர் சீனா எதிர்கொண்டதைப் போன்ற உயர் வளர்ச்சிப் பாதைக்கு இந்தியா மாறுவதைக் குறிக்கிறது. இரண்டாவதாக, 2023இல் இந்தியா உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட பொருளாதாரமாக மாறியது. மக்கள்தொகை அளவிலிருந்து மட்டும், இந்தியாவின் எதிர்காலத்தைப் பற்றி அதிகம் ஊகிக்க முடியாது. ஆனால், மக்கள்தொகை இயக்கவியலை ஆழமாகப் பார்க்கும்போது, சாதகமான வயதுக் கட்டமைப்பு நாட்டின் விரைவான பொருளாதார வளர்ச்சிக்கான வாய்ப்பைத் தூண்டும் என்பதைக் காட்டுகிறது. இந்த இரண்டு அம்சங்களும் 2023ஆம் ஆண்டை இந்தியப் பொருளாதாரத்துக்குக் குறிப்பிடத்தக்க ஆண்டாக ஆக்குகின்றன.
வளர்ச்சி - விரிதிறன்
- 2023இல் இந்தியப் பொருளாதார வளர்ச்சி செயல்திறனை விவரிக்க, உலகளவில் பயன்படுத்தப்படும் சொல் ‘விரிதிறன்’ (Resilience) என்பதாகும். 2022-23 நிதியாண்டில், இந்தியா 7.2%வளர்ச்சியைப் பதிவுசெய்துள்ளது. உலகப் பொருளாதாரம் மந்தமான நிலையில் இருக்கும் நேரத்தில், இந்தியா தன் வளர்ச்சி விகிதத்தை அமெரிக்கா, சீனாவைவிட 2% அதிகமும் ஜி20 நாடுகளின் வளர்ச்சியடைந்துவரும் சந்தைப் பொருளாதாரங்களின் (Emerging market economies) சராசரியைவிட இரு மடங்கு அதிகமாகவும் பதிவுசெய்ததே இந்தியாவின் வளர்ச்சியை ‘விரிதிறன்’ என்று குறிப்பிடுவதற்குக் காரணம். நடப்பு நிதியாண்டின் (2023-24) இரண்டாவது காலாண்டில் (Q2), 7.6% வளர்ச்சி விகிதத்தை எட்டியதால், வளர்ச்சியில் ஸ்திரத்தன்மை வலுப்பெற்றுள்ளது என்று கருதலாம்.
- இந்தச் சூழலில், சிக்கலான உலகளாவிய சவால்களின் பின்னணியில் இந்தியப் பொருளாதாரம் தொடர்ந்து நிலையான வளர்ச்சியைத் தொடரும் எனவும், நிதியாண்டு 2023-24க்கான ஜிடிபி வளர்ச்சி, 6.3%ஆக இருக்கும் என்றும் உலக வங்கி கணித்துள்ளது. உலகப் பொருளாதாரம் தேக்கநிலையில் இருக்கும்போது, இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சி எங்கிருந்து வருகிறது? பொருளாதாரத்தின் குறிப்பிடத்தக்க செயல்திறன், உலகளாவிய மந்தநிலைக்கு மத்தியில் திடமான உள்நாட்டுத் தேவையிலிருந்து வருகிறது. உள்நாட்டுத் தேவைக் கூறுகளில், அரசாங்கத்தின் இறுதி நுகர்வுச் செலவினம் (GFCE [12.4%]), மொத்த மூலதன உருவாக்கச் செலவினங்களின் (GFCF [11%]) அதிகரிப்பு, மேலும் முக்கியத் திட்டங்களில் சில செலவினங்கள் இந்த நிதியாண்டில் கொண்டுவரப்பட்டது வளர்ச்சியைத் தூண்டிய முக்கியமான கூறு. குறிப்பாக, உள்கட்டமைப்புச் செலவுகள் (Infra CAPEX) வளர்ச்சியைத் தூண்டின.
ஜிடிபி வளர்ச்சிக் காரணிகள்
- மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சியானது உற்பத்தித் துறைகளைப் பொறுத்தவரை, உற்பத்தி (13.9%), சுரங்கம் (10.1%), கட்டுமானம் (13.3%) ஆகியவற்றிலிருந்து வந்துள்ளது. இவை அனைத்தும் முந்தைய ஆண்டைவிட 2023இல் அதிக வளர்ச்சி செயல்திறனைப் பதிவுசெய்தன. இரண்டாம் காலாண்டில், போக்குவரத்து, உணவகங்கள், வர்த்தகம், தகவல்தொடர்பு போன்ற சேவைகளில் அதிக வேலைவாய்ப்பைக் கொண்ட துறைகள் ஒப்பீட்டளவில் மெதுவாக இருந்தாலும், வளர்ச்சி காணத் தொடங்கியுள்ளன. 2024-25இல், சேவைத் துறையின் செயல்பாடு 7.4% வளர்ச்சியுடன் வலுவாக இருக்கும் என்றும் முதலீட்டு வளர்ச்சி 8.9%ஆக வலுவாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
- மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 2024இல் 6.5% என்ற முன்னறிவிக்கப்பட்ட விகிதத்தை எட்டும் என்பதும், எதிர்காலத்தில் இந்தியப் பொருளாதாரத்தை அதிக வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டுசெல்லும் திறனைக் காட்டுகிறது என்பதும் பேரியல் பொருளாதாரத் தரவுகள் தரும் செய்தி. ரிசர்வ் வங்கி, உலக வங்கி ஆகியவற்றின் கணிப்புகளின்படி இத்தகைய உயர் வளர்ச்சிப் பாதையானது நீண்ட கால வளர்ச்சி விகிதமான 3.5-4%ஐவிட 2.5% அதிகமாகும். அடுத்த பத்தாண்டில் பொருளாதாரம் இந்தப் பாதையைத் தக்கவைத்துக்கொண்டால், இந்தியப் பொருளாதாரத்தின் ‘டேக்-ஆஃப்’ (take-off) கட்டம் நடந்துகொண்டிருக்கிறது என்று கருதலாம். 2000ஆம் ஆண்டுகளின் முற்பகுதியில் சீனப் பொருளாதாரத்தில் இத்தகைய ஒரு ‘டேக்-ஆஃப்’ கட்டம் ஏற்பட்டது.
- குறுகிய கால அபாயங்களைப் பொறுத்தவரை, வளர்ச்சி வாய்ப்புகளைத் தடுக்கக்கூடிய ஒரு பெரிய ஆபத்தாகப் பணவீக்கம் இருக்கிறது. உலகளாவிய கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி குறைந்த மொத்த விலைக் குறியீட்டில் (WPI) பிரதிபலிக்கும் அதே வேளையில், நுகர்வோர் விலைக் குறியீட்டால் (CPI) அளவிடப்படும் பணவீக்கம் 6.2% முதல் 6.7% வரை அதிகமாக உள்ளது. ஆனால், இப்போதைய கணிப்பு, பணவீக்க விகிதங்கள் ஸ்திரப்படுத்தப்பட்டு, ரிசர்வ் வங்கியின் இலக்கு வரம்பான 2-4%-க்குள் கொண்டுவரப்படும் என்பதுதான். எவ்வாறாயினும், அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கி (FED), ஐரோப்பிய மத்திய வங்கி (ECB), இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் பிற மத்திய வங்கிகள் தங்கள் வட்டி விகிதத்தைக் குறைக்கவில்லை. இது பல்வேறு புவிசார் அரசியல் பதற்றங்கள் காரணமாக எதிர்காலத்தில் பணவீக்கத்தின் சாத்தியமான அபாயத்தைச் சுட்டிக்காட்டுகிறது. உலகளாவிய மந்தநிலை குறுகிய காலத்தில் மற்றொரு பெரிய ஆபத்து ஆகும், இது ஏற்றுமதித் தேவையைப் பாதிக்கலாம்.
சாதகமான மக்கள்தொகைக் கட்டமைப்பு
- எதிர்காலவளர்ச்சிப் பாதையைப் பொறுத்தவரை, இந்தியாவின்மக்கள்தொகை இயக்கவியல் அதன் எதிர்காலத்துக்கான அடித்தளத்தை அமைக்கிறது. 2023இன் தொடக்கத்தில், இந்தியா உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக ஆனது. வளர்ச்சி விகிதங்களின் அடிப்படையில், 2012 முதல் 2022 வரையிலான 10 ஆண்டுகளில் மக்கள்தொகை வளர்ச்சி ஆண்டுக்குச் சராசரியாக 1.1%ஆக உள்ளது. ஒப்பீட்டளவில், சீனா 1988 முதல் 1998 வரை இதே போன்ற விகிதத்தைக் கொண்டிருந்தது. இந்தியாவில் தற்போதைய சராசரி மக்கள்தொகை வயது சுமார் 27.9 ஆகும். அடுத்த 25 ஆண்டுகளில், தற்போதைய மக்கள்தொகை-கருவுறுதல் விகிதங்களின்படி, இந்தியாவின் சராசரி வயது சுமார் 33-34 ஆண்டுகள் ஆகும், இது அப்போதைய உலகளாவிய சராசரிக்கு அருகில் இருக்கும்.
- இது ஒரு சாதகமான மக்கள்தொகைக் கட்டமைப்பாகும். அதாவது, ‘மக்கள்தொகை ஈவுத்தொகை’ எனப்படும் வேலை செய்யும் வயதினரின் அதிக விகிதங்களைக் கொண்ட மக்கள்தொகை அமைப்பு. பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு சாதகமான மக்கள்தொகை அமைப்பு மட்டும் போதாது. அடிப்படையில், பொருளாதார வளர்ச்சி என்பது மனித மூலதன முதலீட்டை அதிகரிப்பதன் மூலம், அதிக உற்பத்தித்திறனைப் பொறுத்தது. மக்கள்தொகை ஈவுத்தொகையின் பலன்களை அறுவடை செய்வதற்கும் அடுத்தஇரு தசாப்தங்களில் பொருளாதார வளர்ச்சியைத் தக்கவைப்பதற்குமான நிலைமையை உருவாக்குவதற்கு அரசாங்கம் மனித மூலதன உருவாக்கத்தில் அதிகக் கவனம் செலுத்த வேண்டும்.
அரசின் பொறுப்புகள்
- பிற குறுகிய-நடுத்தர கால அபாயங்களில், மனித மூலதனத்தில் போதுமான முதலீடு இல்லாதது இந்தியப் பொருளாதாரத்துக்கு ஓர் அடிப்படை ஆபத்தை ஏற்படுத்துகிறது. இந்திய நகரங்கள் சீராக வளர்ந்துவந்தாலும், இந்தியா இன்னும் கிராமப்புறமாகவே உள்ளது. இந்தியாவின் வடக்கு-தெற்குப் பகுதிகளில் கல்வியறிவு விகிதம், கருவுறுதல் விகிதம், மக்கள்தொகை அமைப்பு ஆகியவற்றின் அடிப்படையில் நகர்ப்புற-கிராமப்புற வேறுபாடுகள் உள்ளன. எனவே, ஒட்டுமொத்த உற்பத்தித்திறனை அதிகரிக்க இந்தியாவின் கிராமப்புறங்களில் மனித மூலதனத்தில் ‘பெரிய உந்துதல்’ (Big push) முதலீடுகள்தேவை. மனித மூலதனம், மனித மூலதனத்தின் இறுதி நிர்ணயம் செய்யும் சமூக உள்கட்டமைப்பு ஆகியவற்றில் பெரிய உந்துதல் முதலீடு மட்டுமே பொருளாதார வளர்ச்சியை மேலும் உள்ளடக்கியதாக மாற்றும். கடந்த காலப் போக்கை முறியடிக்கும் வகையில் இந்தியப் பொருளாதாரத்துக்கு 2023 ஒரு முக்கியமான ஆண்டாக இருந்தாலும், எதிர்கால வளர்ச்சிப் பாதையைப் பொருளாதாரரீதியாகவும் சமூகரீதியாகவும் சமத்துவமாக மாற்றுவது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.
நன்றி: இந்து தமிழ் திசை (21 – 12 – 2023)