TNPSC Thervupettagam

கடமையைக் கைகழுவும் அரசு

May 1 , 2024 16 days 57 0
  • நாட்டில் உள்ள அனைத்துக் குழந்தைகளுக்கும் கட்டணமில்லா கட்டாயக் கல்வி வேண்டும் என்ற கோரிக்கை விடுதலைப் போராட்ட காலத்தில் இருந்தே எழுந்து வந்தது. விடுதலைக்குப் பிறகு, அரசமைப்புச் சட்டத்தின் பகுதி 4 பிரிவு 45-இல் 14 வயதுக்குட்பட்ட அனைத்துக் குழந்தைகளுக்கும் கட்டணமில்லாக் கல்வியை 10 ஆண்டுகளுக்குள் வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது.
  • கல்வி பெறுவது குழந்தைகளின் அடிப்படை உரிமை என்று 1993-இல் உச்சநீதிமன்றமும் கூறியிருந்தது. 2002-இல் அரசமைப்புச் சட்டம் 86-ஆவது முறையாகத் திருத்தப்பட்டு பிரிவு 21 ஏ உருவாக்கப்பட்டபோது அரசு, தான் இயற்றும் சட்டம் மூலம் எந்த வகையில் தர விரும்புகிறதோ அந்த வகையில் 6 முதல் 14 வயது வரையிலான குழந்தைகளுக்கு கட்டாய இலவசக் கல்வியைக் கொடுக்க வேண்டும் என்று கூறியது.
  • மேலும், பிரிவு 51 ஏ-வில் "கே' என்ற பிரிவு சேர்க்கப்பட்டது. இதன்மூலம் குழந்தைகளுக்கு கல்வி கற்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டிய கடமை பெற்றோருக்கு உண்டு என்று கூறியது. அரசுக்கு மட்டுமே இருந்த, இருக்க வேண்டிய பொறுப்பு, பெற்றோருக்கு மாற்றப்பட்டதன் மூலம் அரசு தனது பொறுப்பை கைகழுவும் வாய்ப்பு இருப்பதாக அப்போதே எதிர்க்குரல் எழுந்தது.
  • 2009-இல் கல்வி உரிமைச் சட்டம் இயற்றப்பட்டபோது, அது அனைவருக்கும் கல்வி என்ற அடிப்படை உரிமையை நிலைநாட்டும் ஆயுதம் என்று போற்றப்பட்டது. அதைப் போலவேதான் பொருளாதார ரீதியாக பின்தங்கிய குழந்தைகளுக்கு தனியார் பள்ளிகள் 25 சதவீத இடம் ஒதுக்க வேண்டும், அந்தக் குழந்தைகளுக்கான கல்விச் செலவினத்தை தனியார் பள்ளிகளுக்கு அரசு திருப்பிக் கொடுக்க வேண்டும் என்ற ஷரத்தும் மிகப்பெரிய புரட்சியாகப் பார்க்கப்பட்டது.
  • கல்வி பொதுப் பட்டியலில் உள்ள நிலையில் மக்களுக்கு கல்வி புகட்ட வேண்டிய கடமை மத்திய, மாநில அரசுகளுக்கு உள்ளது. ஆனால், அந்தக் கடமையை தனியார் பள்ளிகளின் கைகளுக்கு மாற்றிவிடுவதா என்ற கேள்வியும் கல்வியாளர்கள் மத்தியில் அப்போதே எழுந்தது.
  • இதுபோன்ற கேள்விகளை உறுதிப்படுத்தும்விதமாக மகாராஷ்டிரம் உள்ளிட்ட பல மாநிலங்களில் அடுத்தடுத்த ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான அரசுப் பள்ளிகள் மூடுவிழா கண்டன. தமிழ்நாட்டிலும் கடந்த 15 ஆண்டுகளில் சத்தமின்றி ஏராளமான அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.
  • அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் நியமனம், அடிப்படை வசதிகள் இல்லாதது போன்ற பல காரணங்களால் மாணவர் சேர்க்கை தொடர்ந்து குறைந்து வருவதாகக் கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் ஒற்றை இலக்கத்தில் மாணவர்கள் பயிலும் பள்ளிகளின் எண்ணிக்கை மட்டும் சுமார் 650 என்று அண்மையில் வெளியான புள்ளிவிவரம் ஒன்று கூறுகிறது.
  • இந்தியாவில் கடந்த 2018-19-இல் 10.83 லட்சமாக இருந்த அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை 2020-21-இல் 10.32 லட்சமாக குறைந்துள்ளது. அதேநேரம் 3.25 லட்சமாக இருந்த தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை 3.40 லட்சமாக அதிகரித்துள்ளது என்பதையும் இங்கு கவனிக்க வேண்டும்.
  • அரசு தனது கடமையில் இருந்து நழுவுகிறது, அரசுப் பள்ளிகள் மூடப்படுவதை அரசே மறைமுகமாக ஊக்குவிக்கிறது என குற்றச்சாட்டு எழும்போதெல்லாம், அதைச் சரிசெய்யும்விதமாக, தனியார் பள்ளிகளைப் போலவே முன்கூட்டியே மாணவர் சேர்க்கையை நடத்துவது, எல்கேஜி வகுப்புகளைத் தொடங்குவது என அரசுப் பள்ளி மாணவர் சேர்க்கையை ஊக்குவிப்பதற்கான பணிகளிலும் தமிழக அரசு ஈடுபடுகிறது.
  • நடப்பாண்டில்கூட 3 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் சேர்க்கை பெற்றிருப்பதாக அரசு கூறுகிறது. ஆனால், அரசுப் பள்ளிகளில் சேர்க்கை பெற்றுள்ள மாணவர்களில் சுமார் மூன்றில் ஒரு பங்கினர் 25 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் தனியார் பள்ளிகளில் சேர இருக்கிறார்கள் என்பதையும் சேர்த்தே கவனிக்க வேண்டும்.
  • இப்படியாக நாட்டில் உள்ள அனைத்துக் குழந்தைகளும் கல்வி பெற வேண்டும் என்பதற்காக கொண்டுவரப்பட்ட கல்வி உரிமைச் சட்டம், தனியார் பள்ளிகளுக்கு வருவாய் ஈட்டித் தருவதற்கான திட்டமாக மடைமாற்றப்படுகிறதோ என்ற எண்ணம் தோன்றுகிறது.
  • கடந்த 2022 - 23 நிதியாண்டில் தமிழ்நாட்டில் 25 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கை பெற்ற சுமார் 70,000 மாணவர்களுக்காக மத்திய, மாநில அரசுகள் சுமார் ரூ.400 கோடியை தனியார் பள்ளிகளுக்கு வழங்கியுள்ளன. அரசின் வருவாயை ஆண்டுதோறும் தனியாருக்கு வழங்கும் நேரத்தில், அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை, கட்டமைப்பு வசதிகள் இல்லாததைக் காரணம் காட்டித்தான் பெற்றோர்கள் தனியார் பள்ளிகளை நாடுகின்றனர் என்ற உண்மையை ஏனோ அரசாங்கங்கள் உணரவில்லை.
  • அதேபோல, பொருளாதாரத்தில் நலிவடைந்தவர்கள் என்று கூறி, 25 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் தனியார் பள்ளிகளில் குழந்தைகளைச் சேர்ப்பவர்களில் பெரும்பாலானவர்கள் வசதியான குடும்பப் பின்னணி கொண்டவர்கள் எனவும், நலிவடைந்த பிரிவினர் என வருவாய்த் துறையிடம் சான்றிதழ் பெற்று அரசின் பணப் பலனை அவர்கள் அனுபவித்து வருவதாகவும் தொடர்ச்சியாக வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து அரசு பாராமுகமாக இருக்கிறது.
  • இந்த இடத்தில் கல்வி உரிமைச் சட்டத்தின் விதிகளைக் கவனிக்க வேண்டியுள்ளது. இந்தச் சட்டத்தின் 2-ஆவது அத்தியாயத்தில் பள்ளிகளை நடத்துவது அரசின் கடமை எனத் தெளிவாக உள்ளது. ஒரு குழந்தை வசிக்கும் இடத்தையொட்டி அரசுப் பள்ளியோ, அரசு உதவி பெறும் பள்ளியோ இருந்தும், அந்தக் குழந்தை தனியார் பள்ளியில் சேர்க்கப்படுமானால் அதற்கான கட்டணத்தை அரசிடம் கேட்க முடியாது. பள்ளிக்கு அருகேயுள்ள நலிவடைந்த பிரிவினர் கேட்டால் மட்டுமே அவர்களுக்கு 25 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் (12 (1) சி) இடம் வழங்க வேண்டும் என்பது பள்ளிக்கான பொறுப்பு என்ற பிரிவில் இடம்பெற்றுள்ளது.
  • மாணவர் வசிக்கும் பகுதியில் ஒன்றுக்கும் மேற்பட்ட பள்ளிகள் இருக்குமானால் ஒரு குறிப்பிட்ட பள்ளியில்தான் சேருவேன் என்று கோருவதற்கு அந்த மாணவருக்கு உரிமை இல்லை என்று 2.7.2012-இல் வெளியிட்ட உத்தரவில் சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. அதைப்போலவே, கர்நாடகத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு 10,000 அரசுப் பள்ளிகளை மூடும் நிலை உருவானபோது, வீட்டின் அருகே அரசுப் பள்ளி இருக்கும்போது வேறு பள்ளிகளில் குழந்தைகளைச் சேர்க்கக் கூடாது என்று கன்னட மொழி வளர்ச்சி ஆணையத்தின் பரிந்துரையின்படி மாநில அரசு ஓர் உத்தரவு பிறப்பித்தது. அந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்றபோது, அதற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்திருக்கிறது.
  • இது இப்படியிருக்க, ஓர் அரசு தனது கடமையைச் சரிவர செய்யாமல், தனியார் பள்ளிகளை செய்யச் சொல்வதும் அதற்காக மக்களின் வரிப் பணத்தை தனியாருக்கு வழங்குவதும் இங்கு நடக்கிறது. மேலும் பிரிவு 12 (1) சி-யின் கீழ் தனியார் பள்ளிகளிடம் ஏழைக் குழந்தைகளுக்கு இடத்தை வாங்கிக் கொடுப்பதும், அவர்களுக்குப் பணம் கொடுப்பதும் இப்போது அரசின் கடமையாகவே மாறிவிட்டது.
  • இப்படி பள்ளிக்கூடங்களை நடத்த வேண்டிய கடமையும், மக்களுக்கு கல்வி வழங்கக் கூடிய மிகப்பெரிய பொறுப்பும் தன்னிடம் இருந்தாலும், அவற்றில் இருந்து மெல்ல விலகி, அரசுப் பள்ளிகளை மூடுவதற்கும், அவற்றை மக்கள் நிராகரிப்பதற்கும் அரசு மறைமுகமாக துணை நிற்கிறது. மாணவர் சேர்க்கை இல்லை என்று கூறி அரசுப் பள்ளிகளை மூடுவது கல்வி பெறும் உரிமைக்கு எதிரானது என்பதை அரசும், அதிகாரிகளும் உணருவதில்லை.
  • தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகம் போன்ற பல பல்கலைக்கழகங்களையும், மாவட்டத்துக்கு ஒரு மருத்துவக் கல்லூரியையும் இன்னும் பிற சர்வதேச தரத்திலான கல்வி நிறுவனங்களையும் நடத்தும் வல்லமை கொண்ட அரசாங்கத்தால், ஒரு சாதாரண தொடக்கப் பள்ளியை வெற்றிகரமாக நடத்த முடியாமல் போவது ஏன் என்ற கேள்வி இங்கு எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.
  • எனவே, அரசின் முழுப் பொறுப்பிலும் அரசின் செலவிலும், குழந்தைகள் வசிக்கும் இடங்களுக்கு அருகிலேயே தாய்மொழி வழியிலான தொடக்கக் கல்வி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். மக்களுக்கு கல்வி வழங்குவதுதான் தன்னுடைய கடமை என்பதை உணர்ந்து அரசு செயல்பட வேண்டும்.

நன்றி: தினமணி (01 – 05 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்