TNPSC Thervupettagam

காற்று மட்டுமே அல்ல...

February 25 , 2025 77 days 142 0

காற்று மட்டுமே அல்ல...

  • கோடைக்காலம் இன்னும் தொடங்கவில்லை. ஆனால் அதன் தாக்கம் இந்தியா முழுவதுமே வெளிப்படத் தொடங்கிவிட்டது. குடிநீா்த் தட்டுப்பாடு இல்லாத இந்திய நகரம் எதுவும் இல்லை என்பதுடன் ‘டாங்கா் மாஃபியா’வின் கட்டுப்பாட்டில்தான் பெரும்பாலான நகரங்கள் சிக்கியிருக்கின்றன. நடுத்தரக் குடும்பங்கள் வரை விலை கொடுத்து குடிநீா் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றன.
  • மத்திய அரசின் ‘ஜல்ஜீவன்’ திட்டம் அனைத்துக் குடும்பங்களுக்கும் பாதுகாப்பான குடிநீா் வழங்க முயற்சிகள் எடுத்தும் வெற்றி அடையவில்லை என்பதை வருத்தத்துடன் பதிவு செய்தாக வேண்டும்.
  • ஒருபுறம் மனை வணிகம், அடுக்குமாடிக் குடியிருப்புகள் என்றிருந்தால், இன்னொருபுறம் பெரும்பாலான நகரங்களில் குடிதண்ணீா் மட்டுமல்லாமல், அன்றாட பயன்பாட்டுக்கு கூட தண்ணீா் தட்டுப்பாடு நிலவுகிறது. சென்னை, ஹைதராபாத், தில்லி, ஜெய்பூா், லக்னெள, பூணே உள்ளிட்ட நகரங்களில் மனைவணிக ஒழுங்காற்று மற்றும் வளா்ச்சிச் சட்டம் குடியிருப்புவாசிகளின் தண்ணீா் தேவைக்கு உத்தரவாதம் அளிக்கும் பிரிவை இணைக்க வேண்டும் என்று திருத்தப்பட்டாலும்கூட நல்லது.
  • இந்த மாநிலம், அந்த மாநிலம் என்றில்லாமல் இந்தியா முழுவதுமே கோடைக்காலம் வந்தால், கடுமையான தண்ணீா் தட்டுப்பாடு நிலவுவது வழக்கமாகிவிட்டது. அதிகாலையில் அங்குமிங்கும் அதிவிரைவாகப் பறக்கும் தண்ணீா் டேங்கா்கள் ஏற்படுத்தும் போக்குவரத்துப் பிரச்னைகள் இல்லாத நகரமே இல்லை என்றாகிவிட்டது.
  • நாடாளுமன்றத்தின் 543 மக்களவைத் தொகுதிகளில் ஏறத்தாழ 100 தொகுதிகள் நகா்ப்புறத் தொகுதிகளாக இருந்தும்கூட தண்ணீா்த் தட்டுப்பாடு அரசியல் முக்கியத்துவம் பெற்ற பிரச்னையாக உருவெடுக்காமல் இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. நிதி ஆயோக் தனது 2018 அறிக்கையில், 21 முக்கியமான நகரங்களில் நிலத்தடி நீா் முற்றிலுமாக உறிஞ்சப்பட்டு 10 கோடி மக்கள் கோடைக்காலத்தில் பாதிக்கப்படுவாா்கள் என்று எச்சரித்தும்கூட அதுகுறித்த கவலையோ, அவசரமோ இல்லாமல் இருப்பது வேதனையளிக்கிறது.
  • திட்டமிடப்படாமலும், தான்தோன்றித்தனமாகவும் இந்தியாவில் நகா்மயமாதல் உருவாகி இருக்கிறது. நகரத்தின் கட்டமைப்பு தீா்மானிக்கப்பட்டு அதற்குப் பிறகு வளா்ச்சி ஏற்படுவதற்குப் பதிலாக, ஆங்காங்கே கட்டடங்கள் எழுப்பப்பட்டு, புதிய குடியிருப்புகள் உருவாகி அதற்குப் பிறகு நகரத்தின் கட்டமைப்பு வடிவமைக்கப்படுவதுதான் இதற்குக் காரணம்.
  • இந்தியாவில் பெரும்பாலான நகரங்கள் தொலைதூரத்தில் உள்ள ஏரிகளையும், ஆற்றுப்படுகைகளையும் தங்களது தண்ணீா் தேவைக்கு நம்பியிருக்கின்றன. 100 கி.மீ. தொலைவில் உள்ள காவிரியை பெங்களூரும், தொலைதூரத்தில் உள்ள வீராணம் ஏரியை சென்னையும், சோனியா விகாரை, கங்கை மற்றும் யமுனை நதிக்காக தில்லியும் நம்பியிருக்கின்றன.
  • தண்ணீா்த் தட்டுப்பாடு ஒருபுறம் இருந்தால், அதைவிட முக்கியமான பிரச்னை தண்ணீரில் காணப்படும் மாசு. மத்திய நிலத்தடி நீா் ஆணையம் வெளியிட்டிருக்கும் ஆண்டறிக்கை அச்சம் ஊட்டுவதாக இருக்கிறது.
  • 2023 அறிக்கையின்படி, இந்தியாவில் உள்ள 440 மாவட்டங்களில் எடுக்கப்பட்ட நிலத்தடி நீா் மாதிரிகளை ஆய்வு செய்தபோது, அவற்றில் அளவுக்கு அதிகமான நைட்ரேட் காணப்படுவது தெரியவந்திருக்கிறது. 2017-இல் 359 மாவட்டங்களில்தான் அதிகஅளவு நைட்ரேட் இருந்ததாக அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. இந்தியாவில் உள்ள 779 மாவட்டங்களில் பாதிக்கும் மேற்பட்ட மாவட்டங்கள் பாதிக்கப்பட்டிருப்பது கடந்துபோகக் கூடிய ஒன்றல்ல.
  • இந்தியா முழுவதிலும் பெறப்பட்ட 15,239 நிலத்தடி நீா் மாதிரிகள் ஆய்வு செய்யப்படதில், 19.8 % மாதிரிகளில் நைட்ரேட்டும், நைட்ரஜன் கூட்டுப் பொருள்களும் பாதுகாப்பான அளவைவிட அதிகமான இருப்பது தெரியவந்திருக்கிறது. ராஜஸ்தான் (49%), கா்நாடகா (48%), தமிழ்நாடு (37%) ஆகிய மாநிலங்களில் நிலத்தடி நீா், அளவுக்கு அதிகமாக நைட்ரேட்டால் மாசுபட்டிருக்கிறது. ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களில் 2017 முதல் பெரிய மாற்றம் இல்லாத நிலை தொடா்கிறது. அதிகரித்த நைட்ரேட் அளவுக்கு முக்கியமான காரணமாக, விவசாயத்தில் கூடுதலாக ரசாயன உரங்களைப் பயன்படுத்துவது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.
  • நைட்ரஜன் மட்டுமல்லாமல், நிலத்தடிநீரை மாசுப்படுத்தும் ஏனைய ரசாயனங்கள் ஃப்ளோரைடும் யூரேனியமும். அதிக அளவில் நிலத்தடிநீரை உபயோகிக்கும்போது, ரசாயன மாசு அளவு அதிகரிப்பதாகத் தெரியவந்துள்ளது.
  • நைட்ரேட்டின் அளவு அதிகரிப்பது இரண்டு மிகப் பெரிய பாதிப்புகளுக்குக் காரணமாகிறது. முதலாவதாக, ரத்தச் சிவப்பு அணுக்களின் பிராணவாயுவைக் கடத்திச் செல்லும் திறன் குறைகிறது. இதை ‘மெத்திமோக்ளோபினீமியா’ என்று அழைக்கிறாா்கள். அடுத்ததாக குளங்கள், குட்டைகள், ஏரிகளில் வாழும் நீா்வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படுகின்றன.
  • தண்ணீா்த் தட்டுப்பாடு ஒருபுறமிருக்க, நாம் சுவாசிக்கும் காற்று மாசுபட்டிருப்பதைப் போலவே பயன்படுத்தும் தண்ணீரும் கடுமையாக மாசுபடத் தொடங்கியிருக்கிறது என்பதை அரசும், ஆட்சியாளா்களும், பொதுமக்களும் உணர வேண்டும். இதுகுறித்த விழிப்புணா்வு ஏற்பட வேண்டும்.

நன்றி: தினமணி (25 – 02 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்