TNPSC Thervupettagam

தேசிய சுகாதாரத் தகவல்கள் - 2019

November 6 , 2019 1631 days 4826 0
  • மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷவர்தன் தேசிய சுகாதாரத் தகவல்களின் (National Health Profile - NHP) 14வது பதிப்பை வெளியிட்டார்.
  • NHPயானது சமூக-பொருளாதார சுகாதார நிலை & நாட்டின் மக்கள்தொகை மற்றும் சுகாதார நிலைகள் குறித்த விரிவான கட்டமைப்பை வழங்குகிறது.
  • தேசிய சுகாதாரத் தகவல்களை மத்திய சுகாதாரப் புலனாய்வு அமைப்பு தயாரிக்கிறது.
  • இது முதன்முதலில் 2005 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது.

குறிகாட்டிகள்:

  • சுகாதாரத் தகவல்கள் மூன்று முக்கியமான குறிகாட்டிகளை அடிப்படையாகக் கொண்டது. உதாரணத்திற்கு,
    • மக்கள்தொகைக் குறிகாட்டிகள் - மக்கள் தொகை மற்றும் முக்கியப் புள்ளிவிவரங்கள்.
    • சமூக-பொருளாதாரக் குறிகாட்டிகள் - வேலைவாய்ப்பு, கல்வி, குடியிருப்பு & வசதிகள் மற்றும் சுகாதாரம் & குடிநீர்.
    • சுகாதார நிலைக் குறிகாட்டிகள் - பொதுவான தொற்று மற்றும் தொற்று அல்லாத நோய்களின் பரவல்.

முக்கியத் தகவல்கள்

  • சுகாதாரத்திற்கான நாட்டின் பொதுச் செலவானது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (2017-18 வரவு செலவு பட்டியல் மதிப்பீட்டின்படி ) 1.28% ஆக உள்ளது.
  • ஒப்பிட்டுப் பார்க்கையில், உலக வங்கியால் குறைந்த வருமானம் கொண்ட நாடுகளாக வகைப்படுத்தப்பட்ட நாடுகள் அந்த ஆண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.57 சதவீதத்தை சுகாதாரத்திற்காக செலவிட்டுள்ளன.
  • இதன்மூலம் 2025 ஆம் ஆண்டிற்குள் சுகாதாரத்திற்கான செலவு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.5% என்ற இலக்கை அடைவது என்பது ஒரு ஏற்றமிகு பணி என்று தெரிகிறது.
  • இது உலக சராசரியில் சுமார் 6 சதவீதமாக உள்ளது.
  • 2019-20 ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் சுகாதார வரவு செலவுப் பட்டியல் 63,000 கோடிக்கும் குறைவாக இருந்தது.
  • 10 தென்கிழக்கு ஆசியப் பிராந்திய நாடுகளின் மத்தியில் மேற்கொள்ளப்பட்ட  இந்த ஒப்பீட்டுத் தகவல்கள், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.93% ஒதுக்கியுள்ள இந்தியா, அண்டை நாடான வங்க தேசத்தை (0.42% மொத்த உள்நாட்டு உற்பத்தி) விட மட்டுமே அதிகமாக ஒதுக்கி இருந்தது எனக் காட்டுகின்றது.
  • மற்ற தென்கிழக்கு ஆசியப் பிராந்திய நாடுகளுடன் ஒப்பிடும்போது, நாட்டின் தனிநபருக்கான சுகாதாரச் செலவினங்களும் (16 அமெரிக்க டாலருக்கும் குறைவான அளவில்) மிகக் குறைவாகவே உள்ளது.
  • இந்தியர்களிடையே நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்த விகிதம் ஆகியவை அதிகமாக இருப்பதாக இந்த அறிக்கை குறிப்பிடுகின்றது. அதே நேரத்தில் டெங்கு மற்றும் சிக்குன்குனியா ஆகிய நோய்கள் பொது சுகாதாரத்தில் மிகுந்த அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன.

  • இந்தியாவில் மக்களின் சராசரி ஆயுட்காலம் 1970-75 ஆம் ஆண்டுகளில் 49.7 ஆண்டுகளில் இருந்து 2012-16 ஆம் ஆண்டுகளில் 68.7 ஆண்டுகளாக அதிகரித்துள்ளது.
  • அதே காலகட்டத்தில், பெண்களின் ஆயுட்காலம் 70.2 ஆண்டுகள் என்றும்  ஆண்களுக்கு 67.4 ஆண்டுகள் எனவும் இருந்தன.
  • கணக்கெடுப்பின்படி, அதிக மக்கள் தொகை அடர்த்தி தேசிய தலைநகர் டெல்லியில் சதுர கிலோமீட்டருக்கு 11,320 மக்கள் என்று பதிவாகியுள்ளது. அதே நேரத்தில் மிகக் குறைந்த மக்கள் அடர்த்தி அருணாச்சலப் பிரதேசத்தில் சதுர கிலோமீட்டருக்கு 17 என்று கணக்கிடப் பட்டுள்ளது.
  • 2016 ஆம் ஆண்டின் மொத்த மக்கள்தொகையில்,  
    • 27% மக்கள் 14 வயதிற்குட்பட்டவர்கள் என்றும்
    • 64.7% மக்கள் 15-59 வயதிற்குட்பட்டவர்கள் என்றும்
    • 8.5% மக்கள் தொகை 60-85 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்ற வயதுப் பிரிவில் உள்ளனர் என்றும் இந்தக் கணக்கெடுப்பு தெரிவிக்கின்றது.
  • 1991 முதல் 2017 வரை இந்தியாவில் பிறப்பு விகிதம், இறப்பு விகிதம் மற்றும் இயல்பான வளர்ச்சி விகிதம் ஆகியவற்றில் தொடர்ந்து குறைவு ஏற்பட்டுள்ளது.
  • 2017 ஆம் ஆண்டு நிலவரப்படி, இந்தியாவில் பிறப்பு விகிதம் 1,000 மக்கள் தொகைக்கு 20.2 ஆகவும், இறப்பு விகிதம் 6.3 ஆகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இயல்பான வளர்ச்சி விகிதம் 1,000 மக்கள் தொகையில் 13.9 ஆக இருந்தது.
  • நகர்ப்புறங்களை விட கிராமப்புறங்களில் பிறப்பு விகிதம் அதிகமாக இருந்தது.
  • இதேபோல், நகர்ப்புறத்துடன் ஒப்பிடும்போது கிராமப்புறங்களில் இறப்பு விகிதம் மற்றும் இயல்பான வளர்ச்சி விகிதம் அதிகமாக இருந்தன.
  • இருப்பினும், மக்கள் தொகை தொடர்ந்து வளர்ந்து வருகின்றது. இது ஏனெனில் பிறப்பு வீதத்தின் சரிவு இறப்பு வீதத்தின் வீழ்ச்சியைப் போல விரைவாக இல்லை.
  • NHPயின் படி, நாட்டில் பாலின விகிதம் (1,000 ஆண்களுக்கு பெண்களின் எண்ணிக்கை) 2001 ஆம் ஆண்டில் 933 ஆக இருந்து 2011 ஆம் ஆண்டில் 943 ஆக உயர்ந்துள்ளது.
  • கிராமப்புறங்களில் பாலின விகிதம் 946லிருந்து 949 ஆக உயர்ந்துள்ளது.
  • கேரளாவில் அதிக பாலின விகிதம் - மொத்த மக்கள் தொகையில் 1,084 என்றும் கிராமப்புற மக்கள் தொகையில் 1,078 என்றும்  நகர்ப்புற மக்கள் தொகையில் 1,091 என்றும் பதிவாகியுள்ளது.
  • கிராமப்புறங்களில் மிகக் குறைந்த பாலின விகிதம் சண்டிகரில் (690) பதிவாகியுள்ளது.
  • குழந்தை இறப்பு விகிதம் (Infant Mortality Rate - IMR) கணிசமாகக் குறைந்துள்ளது (2016 ஆம் ஆண்டில் 1,000 குழந்தைப் பிறப்புகளுக்கு IMR 33 என இருந்தது). இருப்பினும் கிராமப்புற (37) மற்றும் நகர்ப்புற (23) வேறுபாடுகள் இன்றும் அதிகமாக உள்ளன.
  • நாட்டின் மொத்தக் கருவுறுதல் வீதம் (Total Fertility Rate - TFR) 2.3 ஆகவும், கிராமப்புறங்களில் இந்த வீதம் 2.5 ஆகவும் நகர்ப்புறங்களில் 1.8 ஆகவும் இருந்தது.
  • 12 மாநிலங்களில் உள்ள TFR (ஒரு பெண்ணின் வாழ்நாளில் பிறக்கும் குழந்தைகளின் சராசரி எண்ணிக்கை) ஒரு பெண்ணுக்கு இரண்டு குழந்தைகள் என்ற விகிதத்திற்கும் குறைவாக குறைந்துள்ளது. ஒன்பது மாநிலங்கள் 2.1 மற்றும் அதற்கு மேற்பட்ட அளவிற்கு  மாற்று நிலைகளை எட்டியுள்ளன.
  • டெல்லி, தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கம் ஆகிய பிற மாநிலங்கள் மிகக் குறைந்த கருவுறுதல் வீதத்தைக் கொண்டுள்ளன.
  • சுகாதார நிலை குறிகாட்டிகளில், 2018 ஆம் ஆண்டில், சத்தீஸ்கரில் தொற்று நோய்கள் மற்றும் மலேரியா காரணமாக அதிகபட்ச இறப்புகள் பதிவாகியுள்ளதாக (77,140 வழக்குகள் மற்றும் 26 இறப்புகள்) கணக்கெடுப்பு குறிப்பிடுகின்றது.
  • இந்தியாவில் உள்ள மொத்த மாற்றுத் திறனாளிகளின் எண்ணிக்கையானது 2.68 கோடியாக உள்ளது.
  • விபத்துக் காயங்கள்: 2015 ஆம் ஆண்டில் விபத்துக் காயங்கள் காரணமாக 13 லட்சம் பேர் உயிரிழந்தனர்.
  • தற்கொலை: இளைஞர்களிடையே தற்கொலை விகிதம் கணிசமாக அதிகரித்து வருகின்றது. 30-45 வயதுக்கு இடைப்பட்ட மக்களிடையே அதிகபட்ச தற்கொலை வழக்குகள் (44,593) பதிவாகியுள்ளன. 1.33 லட்சம் பேர் தற்கொலை செய்து இறந்துள்ளனர்.
  • பாம்புக் கடி: பாம்பு கடித்ததால் ஏற்பட்ட மொத்தப் பதிவுகள் மற்றும் இறப்புகளின் எண்ணிக்கை முறையே 1.64 லட்சம் மற்றும் 885 ஆகும்.

 

ó ó ó ó ó ó ó ó ó ó

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்