TNPSC Thervupettagam

மாற்றுத் திறனாளிகள் இல்லா எதிர்காலத்துக்கு...

April 30 , 2024 17 days 77 0
  • மாற்றுத்திறனாளிகள் எதிர்கொள்ளும் சவால்களை நாம் அறிவோம். தங்கள் தனித்திறன், உழைப்பு மூலம் அவர்கள் அந்தச் சவால்களை வென்றெடுப்பதும் நாம் அறிந்ததுதான். அதேவேளையில், எதிர்காலத்தில் மாற்றுத்திறனாளிகள் உருவாகாமல் தவிர்ப்பதற்கான விழிப்புணர்வும் நமக்கு அவசியம்.
  • தேசிய சுகாதாரத் திட்டத்தின்படி (NHM), நடமாடும் சுகாதாரக் குழுக்கள் திட்டத்தின்கீழ் (RBSK) மாவட்டத்துக்கு ஒன்று என்ற அடிப்படையில், மாவட்டத் தொடக்கநிலை இடையீட்டு சேவை மையம் (DEIC) இதில் மகத்தான பங்களிப்பைச் செய்துவருகிறது.
  • 2014 மே மாதம் தொடங்கப்பட்ட இம்மையத்தின் அடிப்படை நோக்கம், குழந்தைகள் இறப்பு விகிதத்தைக் குறைப்பது, ஆரம்பநிலைப் பரிசோதனை செய்து பிறவிக் குறைபாடுகள், ஊட்டச்சத்து-வைட்டமின் குறைபாடுகள், நோய்கள், நரம்பியல் வளர்ச்சிக் குறைபாடுகள் ஆகிய நான்கையும் ஆரம்பநிலையிலேயே கண்டறிந்து முற்றிலும் குணமாக்குவது ஆகியவை ஆகும்.
  • குழந்தைகள் நிரந்தர மாற்றுத்திறனாளி ஆகாமல் தடுக்கக் கொண்டுவரப்பட்ட மகத்தான திட்டம் இது. உதாரணமாகக் குழந்தை பிறந்து இரண்டு மாதங்கள், நான்கு மாதங்கள், 8 மாதங்கள், 12 மாதங்கள் முறையே முகம் பார்த்துச் சிரிப்பது (social smile), தலை நிற்பது (head control), யார் துணையும் இன்றி உட்கார்வது (sitting without support), நிற்பது (standing) போன்ற வளர்ச்சியை (milestones) அடைய வேண்டும்.
  • இல்லையெனில் வளர்ச்சி தடைபடுவதோடு, மாற்றுத்திறனாளியாக உருவாகும் நிலை ஏற்படும். தொடக்கத்திலேயே கண்டறிந்து உரிய இயன்முறை மருத்துவ சேவை (பிசியோதெரபி) குறிப்பிட்ட காலத்துக்கு முறையாக வழங்கினால், பெரும்பாலான குழந்தைகளின் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்படுத்த முடியும்.
  • இத்திட்டத்தில் 770 நடமாடும் மருத்துவக் குழுக்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. ஆண் மருத்துவர் அடங்கிய குழு, பெண் மருத்துவர் அடங்கிய குழு என வட்டாரத்துக்கு இரண்டு குழுக்கள் செயல்படுகின்றன. பொதுவாகக் குழந்தைகளை அங்கன்வாடி மையத்திலும், அரசுப் பள்ளிகளிலும் சென்று ஆரம்பநிலைப் பரிசோதனை செய்கின்றனர். குறைபாடு கண்டறியப்பட்டால், சிலவற்றுக்கு அவர்களே சிகிச்சை அளிக்கின்றனர்.
  • மேலும் சில நோய்களையும், குறைபாடுகளையும் உறுதிசெய்யவும், மேல் சிகிச்சைக்காகவும் குழந்தைகளை வாகனம் மூலம் அழைத்துச் சென்று, அந்தந்த மாவட்ட மருத்துவக் கல்லூரிகளில் நிறுவியுள்ள சேவை மையத்தில் சிகிச்சை அளிக்கின்றனர். இதயக் குறைபாடுகள் (Cardiac camps), பார்வைக் குறைபாடு (ROP Camps), உதட்டுப் பிளவு மற்றும் அன்னப் பிளவு (Cleft lip palate camp), பாத வளைவு (Club foot) ஆகியவற்றுக்கான சிறப்பு முகாம்களும் நடத்தப்படுகின்றன.
  • இத்தகைய மகத்தான சேவைகளைச் செய்யும் இந்த அமைப்புக்கு அரசின் கூடுதல் கவனம் அவசியம். பயிற்சி பெற்ற மருத்துவப் பணியாளர்களை நிரந்தர அடிப்படையில் பணியமர்த்துவது, துறைசார்ந்த மருத்துவர்களையும் செவிலியர்களையும் நியமிப்பது, தேவையான மருத்துவக் கருவிகளை வழங்குவது, தொழில்சார் பயிற்றுநர் பணியிடங்களை உருவாக்குவது எனப் பல்வேறு கோரிக்கைகள் இதில் இருக்கின்றன. இந்தச் சேவை குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருங்காலத்தில் மாற்றுத்திறனாளிகள் இல்லாத உலகத்தை உருவாக்குவோம்.

நன்றி: இந்து தமிழ் திசை (30 – 04 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்