TNPSC Thervupettagam

மோகனூர்... முகவைனூர்... முகவை...

January 30 , 2025 255 days 273 0

மோகனூர்... முகவைனூர்... முகவை...

  • புதுக்கோட்டை மாவட்டத்தில் கந்தர்வக்கோட்டைக்கு அருகில் இருக்கிறது ‘மோக னூர்.’ இதே பெயரில் நாமக்கல் மாவட்டத்திலும் ஓர் ஊர் இருக்கிறது. இது நாமக்கல் கவிஞர் வெ.இராம லிங்கனார் பிறந்த ஊர். மோகனூர் வேளாண்மைக்கு உகந்த ஊராக இருந்தது. எங்கு பார்த்தாலும் பசுமை. நெல், சோளம், கரும்பு என்று தினைப் பயிர்களும் பணப்பயிர்களும் நன்கு விளையும் மருதநிலமாக இருந்தது. நெல் நன்கு செழித்து வளர்வதற்கு உகந்த வண்டல் மண் கொண்ட ஊர்.
  • நெற்கதிரடிக்கும் போர்க்களத்தை முன்னோர் ‘முகவை’ என்று அழைத்தார்கள். முகவை என்கிற சொல் அகநானூறு, புறநானூறு, பதிற்றுப்பத்து ஆகிய சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது. முகவை என்பதற்கு அள்ளுதல், நெற்பொலி என்று பெயர். மேலும் முகவை என்பது தமிழ்நாட்டில் ஒரு மாவட்டத்தைக் குறிக்கும் சொல்லாகவும் இருக்கிறது. முகவை மாவட்டம் என்பது புதுக்கோட்டை மாவட்டத்திற்கு அருகிலுள்ள ராமநாதபுரத்தைக் குறிக்கும்.
  • ஆறு கடலுடன் சங்கமிக்கும் இடத்திற்கு முகவை என்று பெயர். வைகை ஆறு ராமநாதபுரத்திலிருந்து ஐந்து கல் தூரத்தில் வங்கக் கடலில் கலக்கிறது. மேலும் இந்த ஊரில் ‘முகவை ஊரணி’ என்றோர் நீர்நிலை இருக்கிறது. ராமநாதபுரத்திற்கு ஏன் முகவை என்று பெயர் என்பதைத் தொல்லியல் ஆய்வாளர் வே.ராஜகுரு, ‘ராமநாதபுரம் எனும் ஊர் முன்பு நெற்கதிரடிக்கும் பொட்டலாக இருந்தது. ஆகவே இந்த ஊர் முகவை’ என்றானது என்கிறார்.
  • கந்தர்வக்கோட்டைக்கு அருகிலுள்ள மோகனூர் இதே போன்று நெற்கதிரடிக்கும் களமாக இருந்ததால் அந்த இடம் ‘முகவை ஊர்’ என்றாகி, பிறகு அது ‘முகவைனூர்’ என்று அழைக்கப்பட்டு ‘மோகனூர்’ என்பதாகத் திரிந்துள்ளது. நெற்கதிரடித்தால் அதைக் கோட்டைக் கட்ட வேண்டும் அல்லவா, முகவைனூர் என்கிற மோகனூருக்கு அருகில் ‘பெரியகோட்டை’ என்றோர் ஊர் இருக்கிறது.
  • இங்கு பழைய கோட்டை, புதிய கோட்டை என்று எந்த ஒரு கோட்டையும் இல்லை. பிறகு ஏன் இந்தப் பெயர்? களத்தில் அடிக்கப்பட்ட நெல்லை பெரிய கோட்டையாகக் கட்டிய ஊர் என்பதால் அது ‘பெரியகோட்டை’ என்றானது. மோகனூர், பெரிய கோட்டை இந்த இரண்டு ஊர்களும் அடுத்தடுத்த ஊர்கள். இதிலிருந்து மோகனூர் என்பது முகவைனூர் என்பதிலிருந்து மருவியது என்பது தெளிவாகிறது.

நன்றி: இந்து தமிழ் திசை (30 – 01 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்