TNPSC Thervupettagam

வெளிக் கோள்கள் & கரும் பொருள்

October 16 , 2019 1657 days 2817 0

இதுவரை

  • 2019 ஆம் ஆண்டு அக்டோபர் 8 ஆம் தேதியன்று, ராயல் ஸ்வீடிஷ் அகாடமி ஆஃப் சயின்சஸ் இயற்பியலுக்கான நோபல் பரிசுகளை அறிவித்தது.
  • பின்வரும் மூன்று நபர்கள் இந்தப் பரிசைப் பெறுகின்றனர்.
    • நமது சூரிய மண்டலத்திற்கு வெளியே ஒரு கிரகம் சூரியனைப் போன்ற ஒரு நட்சத்திரத்தை சுற்றி வருவதை முதன்முறையாகக் கண்டுபிடித்ததற்காக இந்த பரிசில் ஒரு பாதியை ஜெனீவா பல்கலைக் கழகத்தின் மைக்கேல் மேயர் மற்றும் டிடியர் குலோஸ் ஆகியோர் பகிர்ந்து கொள்வர்.
    • மறு பாதிப் பரிசானது இயற்பியல் அண்டவியல் துறையில் தான் செய்த பங்களிப்புகளுக்காக பிரின்ஸ்டன் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஜேம்ஸ் பீபிள்ஸ்  என்பவருக்கு வழங்கப் படுகின்றது.
  • "பிரபஞ்சத்தில் நமது பூமியின் இடத்தைப் பற்றிய புதிய முன்னோக்குகள்" பற்றிய கண்டுபிடிப்புகளுக்காக இந்த விஞ்ஞானிகளுக்கு  இந்த விருது வழங்கப்பட்டது.

 

சூரியக் குடும்பத்திற்கு வெளியேயுள்ள கோள்கள்
  • கோள் என்ற சொல் ஒரு நட்சத்திரத்தைச் சுற்றி நகரும் எந்த வான் பொருளையும் விவரிக்கும் ஒரு பொதுவான சொல்லாகும்.
  • அது போலவே நட்சத்திரங்களைச் சுற்றாத சில கரடு முரடான கோள்களும் உள்ளன.
  • ஒரு வெளிக் கோள் என்பது நமது சூரிய மண்டலத்திற்கு வெளியே உள்ள ஒரு கிரகம் ஆகும்.
  • இது ஒரு புற கிரகம் ஆகும்.
  • நிக்கோலஸ் கோப்பர்நிக்கஸ் (1473 - 1543) என்பவர் முதன்முதலில் பிரபஞ்சத்தின் மையத்தில் சூரியன் உள்ளது என்றும், பூமி போன்ற கிரகங்கள் அதைச் சுற்றி நகர்கின்ற வண்ணம் உள்ளன என்றும் கூறினார்.
  • இது உண்மையில் அதிர்ச்சிக்கு உள்ளாக்கும் கோட்பாடாகும். ஏனென்றால் அதற்கு முன்பு மக்கள் பூமியானது பிரபஞ்சத்தின் மையத்தில் இருப்பதாக கற்பனை செய்திருந்தனர்.
  • கோப்பர்நிக்கஸின் கோட்பாட்டைத் தொடர்ந்து பதினாறாம் நூற்றாண்டில் இத்தாலிய தத்துவஞானி ஜியோர்டானோ புருனோவும் பின்னர் சர் ஐசக் நியூட்டனும் சூரியனின் அமைவிடத்தின் தனித்துவத்தை குறித்து ஆய்வு மேற்கொண்டு, பல நட்சத்திரங்கள் அவற்றைச் சுற்றும் கிரகங்களைக் கொண்டிருக்கலாம் என்று கணித்துள்ளனர்.
  • ஆனால் அவை அனைத்தும் நம் உலகத்தைப் போல இருக்கின்றனவா? அவை எவ்வளவு தூரத்தில் இருக்கின்றன? என்பது பற்றி யாருக்கும் தெரியாது.
  • ஆனால் அச்சமயத்தில் நம்முடைய உலகத்தைத் தவிர வேறு உலகங்களை மக்கள் தேடவும் கற்பனை செய்யவும் ஆரம்பித்திருந்தனர்.

 

வெளி கிரகங்களைக் கண்டுபிடிப்பதற்கான தாமதம்
  • 1995 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் மேயர் மற்றும் குலோஸ் ஆகியோரால் கண்டுபிடிக்கப் பட்ட முதல் வெளிக் கோள் “51 பெகாசி பி” ஆகும்.
  • நல்ல தொலைநோக்கிகள் அல்லது ஒரு பொருத்தமான கண்டுபிடிப்பு முறை இல்லாததால் இந்த தாமதம் ஏற்பட்டது.
  • இரட்டை நட்சத்திரங்களின் சுற்றுப் பாதையில் அல்லது தனிமைப் படுத்தப்பட்ட நட்சத்திரங்களின் பிரகாசத்தில் சிறு வேறுபாடுகள்  கொண்டு பயன்படுத்தப்பட்ட மறைமுகமான முறைகளைப்  பயன்படுத்திக் கணக்கிடப் பட்டவை எதுவுமே சரியான முடிவுகளைத் தரவில்லை. எனவே இந்த முடிவுகள்  வானியல் சமூகத்தால் நிராகரிக்கப் பட்டன.

இந்திய வானியலாளர்களின் பங்களிப்புகள்

  • குறிப்பிடத்தக்க "தவறான சமிக்ஞை"யானது  முன்னர் மதராஸ் என்று அழைக்கப்பட்ட சென்னையைத் தவிர வேறு எந்த இடத்திலிருந்தும் வரவில்லை.
  • 1849 முதல் 1858 வரை மதராஸ் ஆய்வகத்தின் (மதராஸில் உள்ள கிழக்கிந்திய ஆய்வகம்) இயக்குநராக இருந்த கேப்டன் வில்லியம் ஸ்டீபன் ஜேக்கப் 1855 ஆம் ஆண்டில் இந்த "கண்டுபிடிப்பை" நிகழ்த்தினார்.
  • அவர் ஒன்றையொன்றுச்  சுற்றிக் கொள்ளும் ஒரு இணை நட்சத்திரங்களான 70 ஓபியுச்சி என பெயரிடப்பட்ட இரட்டை நட்சத்திரத்தை ஆய்வு செய்து கொண்டிருந்தார். மேலும் இந்த இணையின் சுற்றுப் பாதை இயக்கங்களில் சிறிது வித்தியாசத்தையும் அவர் கவனித்தார்.
  • அவற்றைச் சுற்றும் ஒரு கோள் அங்கு இருப்பதே இதற்குக் காரணம் என்றும்  அவர் கூறினார்.
  • இந்த முடிவை அவர் ராயல் வானியல் சங்கத்தின் மாத அறிவிப்புகளில் வெளியிட்டார்.
  • அவரது கண்டுபிடிப்புகள் வானியலாளர் தாமஸ் ஜெபர்சன் ஜாக்சன் சீ என்பவரால் உறுதிப்படுத்தப் பட்டது. ஏற்கனவே அவர் கிரகங்கள் நட்சத்திரங்களைச்  சுற்றுவதற்கு 36 ஆண்டுகள்  வரை கூட எடுத்துக் கொள்ளும் என்று அனுமானித்திருந்தார்.
  • இருப்பினும், துரதிர்ஷ்டவசமாக, அவர்கள் இருவரின்  கணக்கீடுகளும் பின்னர் தவறானதாக இருந்தன.
  • பெங்களூருவில் உள்ள இந்திய வானியற்பியல் நிறுவனத்தின் பேராசிரியர் சுஜன் சென்குப்தா எழுதிய “நமக்கு அப்பால் உள்ள உலகங்கள்” (Worlds Beyond Our Own) என்ற புத்தகத்தில் இந்த குறிப்பு விவரிக்கப் பட்டுள்ளது.
  • தற்செயலாக, மதராஸ் ஆய்வகம் பின்னர் இந்திய வானியற்பியல் நிறுவனமாக உருவானது.
51 பெகாசி பி என்ற வெளிக் கோள்
  • பெகாசஸ் விண்மீன் கூட்டங்கள்  பூமியிலிருந்து 50 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள 51 பெகாசி பி என்ற ஒரு நட்சத்திரத்தைக் கொண்டுள்ளது.
  • 1995 ஆம் ஆண்டு அக்டோபர் 6 ஆம் தேதியன்று  வானியலாளர்கள் இந்த விண்மீனைச்  சுற்றும் ஒரு கோளைக் கண்டுபிடித்தனர்.
  • வானியல் மரபுகளின்படி இதற்கு “51 பெகாசி பி” என்று பெயரிடப் பட்டது.
  • இது வியாழன் கோளில் பாதி அளவிலான ஒரு வாயு கோள் ஆகும். அதனால் தான் ஒரு பாதி என பொருள் கொள்ளும் வகையில் அதற்கு டிமிடியம் என்ற பெயர் வழங்கப் பட்டது.
  • இது நான்கு நாட்களில் அதன் நட்சத்திரத்தைச்  சுற்றி வருகிறது.
  • அதில் மனிதர்கள் நாம் வாழ்வது என்பது சாத்தியமில்லை.

கண்டுபிடிக்கப்பட்டுள்ள வெளிக்  கோள்களின் எண்ணிக்கை
  • நாசா வெளிக் கோள்கள் காப்பகத்தின் படி, 2019 ஆம் ஆண்டு அக்டோபர் 10 தேதி வரையில், 4,073 உறுதிப்படுத்தப்பட்ட வெளிக் கோள்கள் உள்ளன.
  • இப்போது, தரை அடிப்படையிலான தொலைநோக்கிகள் மட்டுமல்லாமல் கெப்ளர் விண்வெளித் தொலைநோக்கி போன்ற வெளிக்  கோள்களைத் தேடும் ஏராளமான விண்வெளி திட்டங்களும் உள்ளன.

ஜேம்ஸ் பீபிள்ஸின் பரிசுக்குக் காரணம்
  • ஆரம்பத்தில் சுமார் 13.8 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பெரு வெடிப்பு நிகழ்ந்தது.
  • அச்சமயம் பிரபஞ்சத்தின் ஆரம்ப நிலைகளைப் பற்றி யாருக்கும் அதிகம் தெரியாது. ஆனால் இந்தப் பிரபஞ்சமானது ஒரு சிறிய, சூடான மற்றும் ஒளிபுகாத் துகள்கள் கொண்ட ஒரு நெருப்புக் குழம்பாக இருந்திருக்கலாம் என்று பல கோட்பாடுகள் கருதுகின்றன.
  • பெரு வெடிப்பு நிகழ்ந்து சுமார் 400,000 ஆண்டுகளுக்குப் பிறகு, பிரபஞ்சம் விரிவடைந்து சில ஆயிரம் டிகிரி செல்சியஸ் அளவுக்குக் குளிர்ந்தது.
  • இந்த குளிர்வு நிகழ்வானது பிரபஞ்சத்தை ஒளி ஊடுருவும் தன்மை கொண்டதாக மாற்றி, அதன் வழியாக ஒளியைச் செல்ல அனுமதித்தது.
  • பெரு வெடிப்பின் இந்த பழங்காலப் பின்னடைவு, அதன் எச்சங்கள் இன்னும் காணப் படுகின்றன. இது காஸ்மிக் நுண்ணலைப் பின்னணி (cosmic microwave background - CMB) என்று அழைக்கப் படுகிறது.
  • இந்தப் பிரபஞ்சம் தொடர்ந்து விரிவடைந்து பின்னர் குளிர்ந்தது.  இதன் தற்போதைய வெப்பநிலை 2 கெல்வின் என்ற அளவில் உள்ளது.
  • அது தோராயமாக மைனஸ் 271 டிகிரி செல்சியஸ் ஆகும்.
  • நுண்ணலைகள் ஆனவை புலப்படும் ஒளியுடன் ஒப்பிடப்படும் போது நீண்ட அலைநீளங்களை (மில்லி மீட்டர் வரம்பில்) கொண்டுள்ளது.
  • பிரபஞ்சத்தின் விரிவாக்கமானது ஒளியை மிகவும் நீண்டதாக நீட்டித்தது. எனவே அது CMB நுண்ணலைகளின்  வரம்பில் உள்ள ஒளியைக் கொண்டுள்ளது.
  • நுண்ணலைகளின் கதிர்வீச்சானது கண்ணுக்குத் தெரியாத ஒளியலைகளைக் கொண்டது.
  • CMB ஆனது முதன்முதலில் 1964 ஆம் ஆண்டில் கண்டறியப்பட்டது. அதன் கண்டுபிடிப்பாளர்களுக்கு 1978 ஆம் ஆண்டில் நோபல் பரிசு வழங்கப் பட்டது.
  • CMB இன் வெப்பநிலையை அளவிடுவதன் மூலம் பெரு வெடிப்பு நிகழ்வில் எவ்வளவு பிரபஞ்சப் பொருட்கள் உருவாக்கப் பட்டன என்பது பற்றிய தகவல்களை வழங்க முடியும் என்பதை பீபிள்ஸ் உணர்ந்தார்.
  • இந்த ஒளியின் வெளியீடு விண்மீன் திரள்களாக நாம் இப்போது காணும் விஷயங்களை எவ்வாறு உருவாக்குகின்றது என்பதில் ஒரு முக்கியப் பங்கைக் கொண்டுள்ளது என்பதையும் அவர் கண்டறிந்தார்.
  • இது ஒரு பெரிய திருப்புமுனையாக அமைந்தது.
  • பீபிள்ஸின் இந்தக் கண்டுபிடிப்பு அண்டவியலில் ஒரு புதிய சகாப்தத்தை ஏற்படுத்தியது.
  • பிரபஞ்சத்தின் வயது எவ்வளவு? அதன் எதிர்காலம் என்ன? அதில் எவ்வளவு நுண் துகள்கள் மற்றும் ஆற்றல் அடங்கியுள்ளது? என்பது  போன்ற பல கேள்விகளுக்கு CMB இன் மாறுபாட்டை ஆய்வு செய்வதன் மூலம் பதிலளிக்கலாம்.
  • நோபல் அகாடமியின் செய்தி வெளியீடானது இந்த மாறுபாடுகளை கடல் மேற்பரப்பில் அலைவரிசைகளாக விவரிக்கின்றது. அந்த அலை வரிசைகள் தூரத்திலிருந்து காணும் போது சிறியதாகவும் ஆனால் நெருக்கமாக இருந்து காணும் போது முக்கியத்துவம் வாய்ந்தவையாகவும் இருப்பது குறிப்பிடத் தக்கது.
கரும்  பொருளைப் புரிந்து கொள்வதில் பீபிள்ஸின் பங்கு
  • சுழலும் விண்மீன் திரள்களின் வேகத்தை அளவிடுவதற்கு, விண்மீன் திரள்களை அவற்றின் ஈர்ப்பு விசையின் வலிமையுடன் ஒன்றாக வைத்திருக்கக் கூடிய அதிக நிறை கொண்ட பொருள்கள் தேவைப் படுவதை விஞ்ஞானிகளால் காண முடிந்தது.
  • பீபிள்ஸ் தலையிடுவதற்கு முன்பு, காணாமல் போன நிறை கொண்ட பொருள்கள் நியூட்ரினோக்கள் எனக் கூறப்பட்டன.
  • ஆனால் அதற்கு மாறாக பீபிள்ஸ் இதுவரை அறியப்படாத "கரும்" பொருள்களின் துகள்கள் காரணமாக இது ஏற்படுகிறது என்று கூறினார்.
  • இருப்பினும், விண்வெளியில் உள்ள இந்த நிறையின் ஒரு பகுதியை அவர்களால் "பார்க்க" முடிந்தாலும், அதில் ஒரு பெரும் பகுதியைக் காண முடியவில்லை.
  • எனவே பார்வையில் இருந்து காணாமல் போன அந்த பொருள்களுக்கு "கரும்" பொருள் என்று பெயரிடப்பட்டது.
  • இந்தத் துகள்கள் வெகு தொலைவில் உள்ளதால் அவற்றைப் "பார்ப்பது" என்பது கேள்விக்குரியது தான். ஆனால் அதற்காக அதைக் காணவே முடியாது என்று பொருள் கொள்ள தேவையில்லை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
  • இந்த பொருள்கள்  நம்மைச் சுற்றிலும் நெருக்கமாகவும் தொலைவிலும் இருந்தாலும், அதன் ஈர்ப்பு விசையால் மட்டுமே நாம் அதை உணர்கிறோம். ஆனால் அதன் மற்ற ஈடுபாடுகளின் மூலம் அதை நாம் பார்க்க முடியாது.
  • இது ஒளியுடன் தொடர்பு கொள்ளாததே இதற்குக் காரணம்.
  • பிரபஞ்சத்தில் உள்ள பல பொருள்களில் சுமார் 25% கரும்  பொருள்களால் ஆனவையாகும் .
  • கரும் பொருளின் துகள்களின் தடயங்களைக் கண்டறிய விஞ்ஞானிகள் உலகம் முழுவதும் அதிக சோதனைகளை மேற்கொண்டுள்ளனர்.

கருப்பு  ஆற்றல்
  • 1998 ஆம் ஆண்டில், பிரபஞ்சம் விரிவடைந்து வருவதாகவும், இந்த விரிவாக்கம் வேகத்தைப் பெற்றுக் கொண்டு இருந்ததாகவும் அல்லது துரிதமாகிக் கொண்டு இருந்ததாகவும் கண்டுபிடிக்கப் பட்டது.
  • இதை இயக்குவதற்கு என்று ஒரு “கண்ணுக்குத்  தெரியாத” ஆற்றல் அங்கு இருந்திருக்க வேண்டும்.
  • பிரபஞ்சத்தின் 70% அளவில் இருக்கும் இந்த இருண்ட துகள்கள்  விண்வெளியில் உள்ள பொருள்களுடன் தொடர்பு கொள்வதில்லை என்பதால் அவ்வாறு அழைக்கப் படுகின்றன என்று கணக்கீடுகள் தெரிவிக்கின்றன.

 

ó ó ó ó ó ó ó ó ó ó

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்