உலக சுகாதார அமைப்பு (WHO) ஆனது, அத்தியாவசிய மருந்துகளின் 24வது மாதிரிப் பட்டியலையும் (EML) குழந்தைகளுக்கான 10வது பட்டியலையும் (EMLc) வெளியிட்டது.
அவசரப் பொது சுகாதாரத் தேவைகளைப் பிரதிபலிக்கும் வகையில், வயது வந்தவர்களுக்கான பட்டியலில் இருபது புதிய மருந்துகளும், குழந்தைகளுக்கான பட்டியலில் பதினைந்து புதிய மருந்துகளும் சேர்க்கப்பட்டன.
உலகளாவிய உயிரிழப்பிற்கு இரண்டாவது முக்கியக் காரணமாக புற்றுநோய் உள்ளது என்ற நிலையில் இதனால் ஒவ்வோர் ஆண்டும் கிட்டத்தட்ட சுமார் 10 மில்லியன் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.
தீவிர மதிப்பீட்டிற்குப் பிறகு, குறைந்தது 4 முதல் 6 மாதங்கள் வரை ஆயுளை நீட்டிக்கும் என்று நிரூபிக்கப்பட்ட புற்றுநோய் மருந்துகள் மட்டுமே இப்பட்டியலில் சேர்க்கப் பட்டன.
மெட்டாஸ்டேடிக் கர்ப்பப்பை வாய், பெருங்குடல் மற்றும் சிறிய செல் சாராத நுரையீரல் புற்றுநோய்களுக்கு, நோயெதிர்ப்புச் சோதனை தடுப்பானான பெம்பிரோலிஸுமாப் சேர்க்கப்பட்டது.
நுரையீரல் புற்றுநோய்க்கான மாற்று நோயெதிர்ப்பு சிகிச்சை விருப்பத் தேர்வுகளாக அட்டெசோலிஸுமாப் மற்றும் செமிப்ளிமாப் ஆகியவை சேர்க்கப்பட்டன.
நீரிழிவு நோய் உலகளவில் 800 மில்லியனுக்கும் அதிகமான மக்களைப் பாதிக்கிறது என்ற நிலையில் அவர்களில் பலருக்கு சிகிச்சை அளிக்கப்படவில்லை, அதே நேரத்தில் ஒரு பில்லியனுக்கும் அதிகமானோர் உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இருதய அல்லது சிறுநீரக நோய் மற்றும் உடல் பருமனுடன் கூடிய இரண்டாம் வகை நீரிழிவு நோய்க்கு குளுக்கோகன் போன்ற பெப்டைட்-1 (GLP-1) ஏற்பி தூண்டுதல் கூறுகளான செமகுளுடைடு, டுலாகுளுடைடு மற்றும் லிராகுளுடைடு ஆகியவை சேர்க்கப் பட்டன.
GLP-1 மற்றும் குளுக்கோஸ் சார்ந்த இன்சுலினோட்ரோபிக் பாலிபெப்டைடு (GIP) ஆகியவற்றை இலக்காகக் கொண்ட இரட்டை ஏற்பி தூண்டுதல் கூறான டிர்செபடைடும் சேர்க்கப்பட்டது.
இந்த மருந்துகள் இரத்தச் சர்க்கரை கட்டுப்பாட்டை மேம்படுத்தவும், இதயம் மற்றும் சிறுநீரகச் சிக்கல்களைக் குறைக்கவும், எடை இழப்பை ஆதரிக்கவும் உதவுகின்றன.
உலகளவில் 150க்கும் மேற்பட்ட நாடுகளில் முன்னுரிமை மருந்துகளுக்கான மலிவு விலை அணுகலை ஊக்குவிக்க இந்த மாதிரிப் பட்டியல்கள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்கப்படுகின்றன.