TNPSC Thervupettagam

அறிவிக்கப்பட்ட இயற்கை பேரிடர்கள் குறித்த அறிவிப்பு

August 16 , 2026 3 days 65 0
  • இந்திய அரசு தனது 'அறிவிக்கப்பட்ட இயற்கை பேரிடர்கள்' பட்டியலில் வெப்ப அலைகள் (heatwaves) மற்றும் மின்னல் தாக்குதல் ஆகியவற்றைச் சேர்த்துள்ளது.
  • 2026-31 ஆம் ஆண்டிற்கான மாநில பேரிடர் மீட்பு நிதியம் (SDRF) மற்றும் தேசிய பேரிடர் மீட்பு நிதியம் (NDRF) ஆகியவற்றின் நிர்வாகத்திற்கான செயல்பாட்டு வழிகாட்டுதல்களை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
  • இதன் மூலம், இந்தியா அதிகாரப்பூர்வமாக 14 வகையான பேரிடர்களை 'அறிவிக்கப் பட்ட தேசிய பேரிடர்களாக' அங்கீகரித்துள்ளது.
  • இது, பேரிடர் மேலாண்மைச் சட்டம், 2005-இன் கீழ் மாநிலங்கள் நிதி உதவி பெறுவதற்குத் தகுதி அளிக்கிறது.
  • 16-வது நிதிக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப் பட்டு உள்ளது; மேலும், பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் தீவிர வானிலை நிகழ்வுகள் குறித்த கவலைகள் அதிகரித்து வரும் சூழலில் இது மேற்கொள்ளப்பட்டுள்ளது.
  • இனி மாநிலங்கள் வெப்ப அலை மற்றும் மின்னல் தொடர்பான நிவாரணப் பணிகளுக்குத் தங்கள் மாநில பேரிடர் மீட்பு நிதியம் மற்றும் பேரிடர் தணிப்பு நிதியங்களைப் பயன்படுத்திக்கொள்ளலாம்; மாநில நிதிகள் போதுமானதாக இல்லாத பட்சத்தில் தேசியப் பேரிடர் மீட்பு நிதியத்தின் உதவியையும் பெறலாம்.
  • இதுவரை, பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்ட பேரிடர் பட்டியலில் வெப்ப அலைகள் சேர்க்கப்பட்டிருக்கவில்லை.
  • அந்தப் பட்டியலில் புயல், வறட்சி, நிலநடுக்கம், தீ விபத்து, வெள்ளம், சுனாமி, ஆலங்கட்டி மழை, நிலச்சரிவு, பனிச்சரிவு, மேக வெடிப்பு (cloudburst), பூச்சித் தாக்குதல் மற்றும் உறைபனி/குளிர் அலை ஆகிய 12 வகைகள் மட்டுமே இடம் பெற்றிருந்தன.
  • முன்பு, மாநிலங்கள் வெப்ப அலைகளைத் தங்கள் அளவில் அறிவிக்க வேண்டி இருந்ததுடன், அதற்கான நிவாரணப் பணிகளுக்குத் தங்கள் ஆண்டு SDRF ஒதுக்கீட்டில் அதிகபட்சம் 10 சதவீத நிதியை மட்டுமே செலவிட முடிந்தது.
  • தற்போது வெளியிடப்பட்டுள்ள புதிய அறிவிப்பின்படி, மாநிலங்கள் தங்கள் பேரிடர் மீட்பு மற்றும் தணிப்பு நிதியங்களை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள முடியும்; அத்துடன், பேரிடரை எதிர்கொள்ள மாநில நிதிகள் போதுமானதாக இல்லாத போது தேசிய நிதியத்தின் உதவியையும் பெற முடியும்.
  • வெப்பம் தொடர்பான நோய்களுக்கான தேசிய செயல் திட்டத்தின் (NAPHRI) அடிப்படையில், பருவநிலை மாற்றம் மற்றும் மனித ஆரோக்கியத்திற்கான தேசியத் திட்டத்தின் (NPCCHH) மூலம் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் வெப்பம் சார்ந்த சுகாதார நடவடிக்கைகளைச் செயல்படுத்தி வருகிறது.
  • மேலும், நாடு முழுவதும் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் (PHCs) மற்றும் உயர்நிலை மருத்துவமனைகள் உட்பட 51,000-க்கும் மேற்பட்ட மையங்களை உள்ளடக்கிய 'தேசிய வெப்பம் தொடர்பான நோய் மற்றும் இறப்பு கண்காணிப்பு அமைப்பு' (NHRIDS) செயல்பாட்டிற்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.
  • SDRF - உள்ளூர் அளவில் விரைவான உதவிகளை வழங்க மாநிலங்கள் 'மாநில பேரிடர் மீட்பு நிதியை' (State Disaster Response Fund) பயன்படுத்துகின்றன.
  • NDRF - உள்ளூர் நிதிகள் போதுமானதாக இல்லாத பட்சத்தில், மத்திய அரசு 'தேசிய பேரிடர் மீட்பு நிதியிலிருந்து' (National Disaster Response Fund) கூடுதல் நிதியை வழங்குகிறது.
  • இவை இரண்டும் 'பேரிடர் மேலாண்மைச் சட்டம், 2005'-இன் கீழ் நிறுவப்பட்டன; இவை 2010-ஆம் ஆண்டில் பழைய 'தேசிய பேரிடர் அவசரகால நிதி'க்கு (National Calamity Contingency Fund) மாற்றாக அமைக்கப்பட்டன.
  • இதற்கான நிதி முழுமையாக மத்திய அரசால், முக்கியமாக குறிப்பிட்ட வரிகள் (cesses) மற்றும் தீர்வைகள் (duties) மூலம் திரட்டப்படுகிறது.
  • இது இந்தியாவின் பொதுக் கணக்கில் (Public Account of India) வட்டி இல்லாத இருப்பு நிதியாகப் பராமரிக்கப்படுகிறது; இதனால் நாடாளுமன்றத்தின் கூடுதல் ஒப்புதல் இல்லாமலேயே விரைவாக நிதியை அணுக முடிகிறது.
  • அறிவிக்கப்பட்ட பேரிடர்களுக்குப் பதிலளிக்கும் நடவடிக்கைகளுக்காக மாநில அரசுகளிடம் உள்ள முதன்மையான நிதி 'மாநில பேரிடர் மீட்பு நிதி' (SDRF) ஆகும்.
  • பொதுப் பிரிவு மாநிலங்கள்/ஒன்றியப் பிரதேசங்களுக்கு SDRF ஒதுக்கீட்டில் 75 சதவீதத்தையும், சிறப்புப் பிரிவு மாநிலங்கள்/ஒன்றியப் பிரதேசங்களுக்கு (வடகிழக்கு மாநிலங்கள், சிக்கிம், உத்தரகண்ட், இமாச்சலப் பிரதேசம், ஜம்மு மற்றும் காஷ்மீர்) 90 சதவீதத்தையும் மத்திய அரசு வழங்குகிறது.
  • பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி நிவாரணம் வழங்குவதற்கான செலவுகளை ஈடுகட்ட மட்டுமே SDRF பயன்படுத்தப்பட வேண்டும்.
  • இது சொத்து அல்லது பயிர் இழப்பிற்கான இழப்பீடாகச் செயல்படாது.
  • கடுமையான தன்மை கொண்ட பேரிடர்களின் போது, ​​SDRF-ல் போதுமான நிதி இல்லாத பட்சத்தில், ஒரு மாநிலத்தின் SDRF-க்குத் துணையாக 'தேசிய பேரிடர் மீட்பு நிதி' (NDRF) செயல்படுகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்