அவசரகால சிகிச்சைக்கான உரிமை – உச்ச நீதிமன்றத் தீர்ப்பு
June 26 , 2026 6 hrs 0 min 52 0
'சேவ்லைஃப் ஃபவுண்டேஷன் மற்றும் பலர் எதிர் இந்திய ஒன்றியம்' வழக்கில், அவசரகால சிகிச்சைக்கான உரிமை என்பது இந்திய அரசியலமைப்பின் 21-வது சரத்தின் கீழ் உள்ள வாழும் உரிமையின் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாகும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
காயம் ஏற்பட்ட இடத்திலிருந்து மருத்துவமனையில் உறுதியான சிகிச்சை பெறும் வரையிலான முழு அவசரகால மருத்துவத் தொடரையும் இந்த உரிமை உள்ளடக்கியது என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இது மத்திய அரசு, மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களுக்கு 3-6 மாத கால அமலாக்கக் கெடுவுடன் ஒன்பது பிணைப்பு வழிமுறைகளை வழங்கியது.
அனைத்து மாநிலங்களும் 100, 101, 102, 108 மற்றும் 1091 போன்ற அவசரகால உதவி எண்களை 112 என்ற ஒற்றை தேசிய அவசரகால எண்ணுடன் ஒருங்கிணைக்க வேண்டும்.
அனைத்து அவசர மருத்துவ ஊர்திகளும் தேசிய அவசர மருத்துவ ஊர்திக் குறியீட்டிற்கு இணங்க வேண்டும், GPS கண்காணிப்பு வசதியைக் கொண்டிருக்க வேண்டும் மற்றும் 112 அவசரகால பதில் அமைப்போடு ஒருங்கிணைக்கப்பட வேண்டும்.
சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு PM RAHAT (பிரதம மந்திரி–சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனையில் சேர்த்தல் மற்றும் உறுதியான சிகிச்சை) திட்டத்தின் கீழ் ரொக்கமில்லா சிகிச்சையை மாநிலங்கள் செயல்படுத்த வேண்டும்.
18 முதல் 45 வயதுக்குட்பட்ட இந்தியர்களிடையே மரணத்திற்கு காயங்களே முக்கிய காரணம் என நீதிமன்றம் கவனித்தது.
பரமானந்த் கட்டாரா எதிர் இந்திய ஒன்றியம் (1989) வழக்கில், உடனடி அவசர மருத்துவ உதவிகளை வழங்க வேண்டியது மருத்துவர்களின் கடமை என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
பஷ்சிம் பங்கா கேட் மஸ்தூர் சமிதி எதிர் மேற்கு வங்க மாநிலம் (1996) வழக்கில், அவசரகால மருத்துவ சேவையைப் பெறுவதையும் உள்ளடக்கும் வகையில் சரத்து 21-ஐ நீதிமன்றம் விரிவுபடுத்தியது.
தற்போதைய தீர்ப்பானது பார்வையாளர் உதவி, அவசரகால அழைப்பு, அவசர மருத்துவ ஊர்திச் சேவைகள், துணை மருத்துவப் பணியாளர்கள் மற்றும் மருத்துவமனை சிகிச்சை ஆகிய முழுமையான அவசரகால சிகிச்சைத் தொடரையும் உள்ளடக்கும் வகையில் சரத்து 21-ஐ மேலும் விரிவுபடுத்துகிறது.