இணைய சங்கேதப் பணத்திற்கு எதிராக பணமோசடி தடுப்புச் சட்டம்
March 12 , 2023 895 days 370 0
இணைய சங்கேதப் பணம் சார்ந்த சொத்துக்கள் சம்பந்தப்பட்டப் பரிவர்த்தனைகளை 2002 ஆம் ஆண்டின் பணமோசடித் தடுப்புச் சட்டத்தின் கீழ் கொண்டு வருவதற்கான அறிவிப்பினை மத்திய அரசு வெளியிட்டது.
இது பணமோசடித் தடுப்புச் சட்டத்தின் கீழ் உள்ளடக்கப்பட வேண்டிய பல்வேறு பரிவர்த்தனைகளின் தன்மையை வகுத்துள்ளது.
அவை பின்வருமாறு:
மெய்நிகர் எண்ணிமச் சொத்துக்கள் மற்றும் அரசுரிமை நாணயங்களுக்கு இடையே மேற்கொள்ளப் படும் பரிமாற்றம்;
ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட முறைகளிலான மெய்நிகர் எண்ணிமச் சொத்துகளின் இடையே மேற்கொள்ளப்படும் பரிமாற்றம்;
மெய்நிகர் எண்ணிமச் சொத்துகளின் பரிமாற்றம்;
மெய்நிகர் எண்ணிமச் சொத்துக்கள் அல்லது மெய்நிகர் எண்ணிமச் சொத்துகளின் மீதான கட்டுப்பாட்டைச் செயல்படுத்தும் செயற்கருவிகளின் பாதுகாப்பு அல்லது நிர்வாகம்;
மெய்நிகர் எண்ணிமச் சொத்துகளை வெளியிடும் நிறுவனங்களின் சலுகை மற்றும் விற்பனை தொடர்பான நிதிச் சேவைகளில் பங்கேற்பு மற்றும் அதற்கான சேவைகளை வழங்குதல்.
இந்த நடவடிக்கை, இணைய சங்கேதப் பணம் சார்ந்த நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில் புலனாய்வு அமைப்புகளுக்கு உதவும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல், இணைய சங்கேதப் பணம் மூலம் பெறப்படும் வருவாய் மீது 30 சதவீத வருமான வரி விதிக்கப்படும் என இந்திய அரசு அறிவித்தது.
2022 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில், இணைய சங்கேதப் பணத்திற்கான மூல வருவாய் ஆதாரத்தில் இருந்து கழிக்கப் படும் 1 சதவீத வரி தொடர்பான விதிகள் அமலுக்கு வந்தன.