இந்தியத் தேர்தல் ஆணைய நியமனங்கள் குறித்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பு
March 10 , 2023 902 days 427 0
சமீபத்தில் தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்கள் ஆகியோரை நியமிப்பது தொடர்பாக, நீதிபதி K.M. ஜோசப் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு ஒருமனதாக தீர்ப்பளித்தது.
இந்த நியமனங்களானது தேர்வுக் குழுவின் ஆலோசனையின் பேரில் குடியரசுத் தலைவர் அவர்களால் மேற்கொள்ளப் படும்.
இந்தக் குழுவானது பிரதமர், மக்களவையின் எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் இந்தியத் தலைமை நீதிபதி (CJI) ஆகியோரைக் கொண்டது ஆகும்.
மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் இல்லாத பட்சத்தில், மக்களவையில் தனது மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை அடிப்படையில் மிகப்பெரிய ஒரு எதிர்க் கட்சியாக விளங்கும் கட்சியின் தலைவர் ஒருவர் அந்தக் குழுவில் இடம் பெறுவார்.
இந்த ஆணையத்தின் செலவினங்களைக் கையாள்வதற்காக சுதந்திரமான முறையில் செயல்படும் ஒரு செயலகத்தை அமைக்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்ற அமர்வு வேண்டுகோள் விடுத்துள்ளது.
நியமன நடைமுறை
324(2)வது சட்டப் பிரிவின் படி, தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்களின் நியமனமானது குடியரசுத் தலைவர் அவர்களால் மேற்கொள்ளப் பட வேண்டும்.
மேலும் இது பாராளுமன்றத்தினால் இதற்கென உருவாக்கப்பட்ட ஒரு சட்டத்தின் விதிகளுக்கு உட்பட்டது.
தேர்தல் ஆணையர்களின் பணி நிலை குறித்த நிபந்தனைகள் மற்றும் பதவிக் காலம் ஆகியவற்றைக் குடியரசுத் தலைவர் அவர்களே தீர்மானிக்கிறார்.
1991 ஆம் ஆண்டு தேர்தல் ஆணைய (தேர்தல் ஆணையர்களின் பணி நிலை குறித்த நிபந்தனைகள் மற்றும் செயல்பாடுகள்) சட்டத்தின் கீழ் ஆறு ஆண்டுகள் அல்லது 65 வயது எட்டும் வரை, இவற்றுள் எது முந்தையதோ அது வரையில் அவர்கள் அந்தப் பதவியினை பதவி வகிப்பர்.
பொதுவாக, மிக மூத்தத் தேர்தல் ஆணையரே தலைமைத் தேர்தல் ஆணையராக நியமிக்கப் படுவார்.