இந்தியாவில் எந்தத் தடுப்பூசியையும் பெறாத குழந்தைகள் விகிதம் குறைவு
July 4 , 2025 14 hrs 0 min 17 0
இந்தியாவில் 2023 ஆம் ஆண்டில் 0.11% ஆக இருந்த எந்தத் தடுப்பூசியையும் பெறாத குழந்தைகளின் பங்கு ஆனது 2024 ஆம் ஆண்டில் 0.06% ஆகக் குறைந்தது.
எந்தத் தடுப்பூசியையும் பெறாத குழந்தைகள் என்பவர் முதலாவது DTP தடுப்பூசிகளை (டிப்தீரியா - டெட்டனஸ்-பெர்டுசிஸ் -- தொண்டை அழற்சி நோய் – இரணஜன்னி - கக்குவான் இருமல் ஆகிய நோய்க்கான தடுப்பூசி) பெறாத குழந்தைகள் ஆவர்.
குழந்தை மற்றும் பேறுகாலத் தாய்மார்கள் உயிரிழப்பு இறப்பு குறித்த 2024 ஆம் ஆண்டு புதிய தகவல் பதிவுகளில், குழந்தை ஆரோக்கியத்தில் இந்தியா ஓர் பெரும் உலகளாவிய எடுத்துக்காட்டாக இருப்பதாக ஐ.நா. சபையின் பல்வேறு அறிக்கைகள் பாராட்டின.
2023 ஆம் ஆண்டு லான்செட் அறிக்கையில் தடுப்பூசி போடப்படாத குழந்தைகள் அதிக எண்ணிக்கையில் கொண்ட (சுமார் 1.44 மில்லியன்) இரண்டாவது நாடாக இந்தியாவை பட்டியலிட்ட பிறகு இது பதிவாகியுள்ளது.
அரசாங்கம் ஒவ்வோர் ஆண்டும் சுமார் 26 மில்லியன் குழந்தைகளுக்கும் 29 மில்லியன் கர்ப்பிணிப் பெண்களுக்கும் இலவச தடுப்பூசிகளை வழங்குகிறது.
11 மாநிலங்களில் உள்ள சுமார் 143 மாவட்டங்களில், தடுப்பூசி போடுவதற்கு மிகவும் சிரமப்படும் மற்றும் தயங்கும் சமூகங்களில் உள்ள குழந்தைகளுக்குத் தடுப்பூசிகளை கொண்டு சேர்ப்பதற்காக எந்தத் தடுப்பூசியையும் பெறாத குழந்தைகளுக்காக ஒரு சிறப்புத் தடுப்பூசி வழங்கீட்டுத் திட்டம் தொடங்கப்பட்டது.
உலக சுகாதார அமைப்பு மற்றும் UNICEF (2023) ஆகியவற்றின் படி, இந்தியாவின் DTP-1 தடுப்பூசி வழங்கீட்டின் பரவல் 93% ஆக இருந்தது என்பதோடு இது நைஜீரியாவின் 70 சதவீதத்தினை விட அதிகமாகும்.
DTP-1 முதல் DTP-3 வரையிலான தடுப்பூசிப் பெறுதலில் உள்ள இடைநிற்றல் விகிதம் 7 சதவீதத்திலிருந்து (2013) 2% (2023) ஆக குறைந்து மேம்பட்டது.
தட்டம்மை தடுப்பூசி வழங்கீட்டுப் பரவலும் 2013 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் 83 சதவீதத்திலிருந்து 93% ஆக உயர்ந்தது.