இந்தியாவில் தகவமைப்பு மிக்க மற்றும் வளமான நகரங்களை நோக்கி என்ற அறிக்கை
July 26 , 2025 12 hrs 0 min 15 0
இந்த அறிக்கையானது உலக வங்கியால் வெளியிடப்பட்டது.
இது மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகத்துடன் இணைந்து தயாரிக்கப்பட்டது
புதிய தகவமைப்பு மிக்க மற்றும் பசுமையான நகர்ப்புற உள்கட்டமைப்பு மற்றும் சேவைகளுக்கான மொத்த முதலீட்டுத் தேவைகள் இந்தியாவில் 2050 ஆம் ஆண்டிற்குள் 2.4 டிரில்லியன் டாலராக இருக்கும் என இது மதிப்பிட்டுள்ளது.
இந்தியாவில், 2020 ஆம் ஆண்டில் 480 மில்லியனாக இருந்த நகரங்களில் வசிக்கும் இந்தியர்களின் எண்ணிக்கையானது 2050 ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட இரு மடங்காக 951 மில்லியனாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
2030 ஆம் ஆண்டிற்குள் 70% புதிய வேலைவாய்ப்புகள் அவற்றிலிருந்து உருவாகும் என்ற நிலையில் பொருளாதார வளர்ச்சியின் மையங்களாக இந்திய நகரங்கள் மிகப் பெரிய ஆற்றலைக் கொண்டுள்ளன.
இருப்பினும், தீவிர வானிலை நிகழ்வுகள் எதிர்காலத்தில் பில்லியன் கணக்கான டாலர்கள் இழப்புகளுக்கு வழி வகுக்கும் என்பதால், அதைச் சமாளிக்க சரியான நேரத்தில் நடவடிக்கை தேவைப்படும்.
அதே நேரத்தில், கடுமையான வெப்ப அலைகள் மற்றும் நகர்ப்புற வெப்பத் தீவு விளைவுகள் ஏற்கனவே நகர மையங்களில் வெப்பநிலையினை அதிகரித்துள்ளதோடு, வெப்ப நிலையானது அங்கு 3-4 டிகிரிக்கு மேல் உயர காரணமாகின்றன.
கட்டிடப் பகுதிகளின் விரைவான வளர்ச்சியும் புயல்களால் ஏற்படும் வெள்ள நீரை உறிஞ்சும் நகரங்களின் திறனைக் குறைத்து, வெள்ளத்தின் மூலமான அதிகப் பாதிப்பிற்கு அவற்றை உள்ளாக்குகிறது.
இந்த அறிக்கை, சென்னை, இந்தூர், புது டெல்லி, லக்னோ, சூரத் மற்றும் திருவனந்தபுரம் ஆகிய 24 இந்திய நகரங்களில் சிறப்பு கவனம் செலுத்தி ஆய்வு செய்தது.
இந்திய நகரங்களுக்கு அவசரமாக உதவுவதற்கும், வெள்ள நீர் வெளியேற்றத்தினைச் சிறப்பாக ஒழுங்குமுறைப்படுத்துதல், பசுமையான இடங்கள் மற்றும் குளிர் கூரைகளை நிறுவுதல் மற்றும் பயனுள்ள முன் எச்சரிக்கை அமைப்புகள் உள்ளிட்ட கடுமையான நகர்ப்புற வெப்பம் மற்றும் வெள்ளத்தை நிவர்த்தி செய்வதற்கான திட்டங்களைச் செயல்படுத்துதல் போன்ற திட்டங்களை நிர்வகித்து பாதிக்கப்படக் கூடிய மக்களுக்கு ஆதரவளிப்பதற்ககென சில முக்கியப் பரிந்துரைகளை இந்த அறிக்கை குறிப்பிட்டுக் காட்டியது.
அகமதாபாத் நகர அரசானது, முன் எச்சரிக்கை அமைப்புகளை வலுப்படுத்துதல், சுகாதாரத் தயார்நிலையை மேம்படுத்துதல், வெளிப்புறத் தொழிலாளர்களுக்கான பசுமைப் பரவலை அதிகரித்தல் மற்றும் பணி நேரத்திற்கான அட்டவணைகளை உருவாக்குதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ள ஒரு வெப்பச் செயல் திட்ட மாதிரியை உருவாக்கியுள்ளது.
கொல்கத்தாவானது நகர அளவிலான வெள்ள முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை அமைப்பை ஏற்றுள்ளது.
இந்தூர் ஒரு நவீன திடக்கழிவு மேலாண்மை அமைப்பில் முதலீடு செய்து, அதன் மூலம் தூய்மையை மேம்படுத்துதல் மற்றும் பசுமைசார் வேலைகளை ஆதரித்தல் ஆகியவற்றை மேற்கொள்கிறது.
சென்னை நகரம் ஒரு முழுமையான இடர் மதிப்பீடுடன் சேர்த்து பருவநிலைத் தகவமைப்பு மற்றும் குறைந்த கரிம வளர்ச்சி ஆகிய இரண்டையும் இலக்காகக் கொண்டு ஒரு பருவநிலைச் செயல் திட்டத்தை ஏற்றுள்ளது.