தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் (TNCC) முன்னாள் தலைவரும், பட்டியல் இனத்தைச் சேர்ந்த முக்கிய தலைவருமான எல். இளையபெருமாளின் நினைவு மண்டபம் மற்றும் சிலையைச் சிதம்பரத்தில் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
எல். இளையபெருமாள் தலைமையிலான தீண்டாமை, பட்டியல் சாதியினரின் பொருளாதார மற்றும் கல்வி மேம்பாடு குறித்த குழுவின் பரிந்துரைகள், 1970 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட, தமிழ்நாடு இந்து அறநிலையத் துறைச் சட்டத்தில் ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்கத் திருத்தத்தைக் கொண்டு வருவதற்கான அடிப்படையாக அமைந்தது.
சுதந்திர இந்தியாவில் முதன்முதலாக எட்டு பேர் கொண்ட ஒரு குழுவின் தலைவராக 1965 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டபோது இளையபெருமாள் வெறும் 41 வயதுடையவராக இருந்தார்.
இந்தக் குழு இந்தியா முழுவதும் பயணம் செய்து 1969 ஆம் ஆண்டில் அதன் விரிவான முடிவுகளைச் சமர்ப்பித்தது.
இருப்பினும், அதன் பரிந்துரைகளை ஒன்றிய அரசு இதுவரை செயல்படுத்தவில்லை.
கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரத்திற்கு அருகிலுள்ள தெம்மூரில் 1924 ஆம் ஆண்டு ஜூன் 26 அன்று அவர் பிறந்தார்.
1952 ஆம் ஆண்டு நாட்டின் முதல் தேர்தலில் அவருக்கு 27 வயதே ஆகி இருந்த நிலையில் அவர் சிதம்பரம் (தனி) தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்டு பாராளுமன்ற உறுப்பினர் ஆனார்.
1998 ஆம் ஆண்டு திமுக அரசால் நிறுவப்பட்ட அண்ணல் அம்பேத்கர் விருதைப் பெற்ற முதல் நபர் இளையபெருமாள் ஆவார்.