உச்ச நீதிமன்ற (நீதிபதிகளின் எண்ணிக்கை) திருத்த மசோதா, 2026
July 22 , 2026 33 days 198 0
இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 33-லிருந்து 37 ஆக (இந்தியத் தலைமை நீதிபதி நீங்கலாக) உயர்த்துவதற்கான உச்ச நீதிமன்ற (நீதிபதிகளின் எண்ணிக்கை) திருத்த மசோதா, 2026-க்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து உள்ளது.
நீதித்துறை செயல்திறனை மேம்படுத்தவும், விரைவாக நீதியை வழங்குவதை உறுதி செய்யவும், உச்ச நீதிமன்ற (நீதிபதிகளின் எண்ணிக்கை) சட்டம், 1956-ஐ திருத்துவதன் மூலம் மேலும் நான்கு நீதிபதிகளைச் சேர்க்க இந்த மசோதா முன்மொழிகிறது.
இந்திய அரசியலமைப்பின் 124(1) வது சரத்தானது உச்ச நீதிமன்றத்தை நிறுவுவதற்கு வழி வகை செய்கிறது, மேலும் சட்டமியற்றுதல் மூலம் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் அளிக்கிறது.
1956 ஆம் ஆண்டு சட்டத்தில் கொண்டுவரப்பட்ட திருத்தங்கள் மூலம் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் பலம் 2008 ஆம் ஆண்டில் 25-லிருந்து 30 ஆகவும், 2019 ஆம் ஆண்டில் 30-லிருந்து 33 ஆகவும் உயர்த்தப்பட்டது.
நீதிபதிகளின் சம்பளம், துணைப் பணியாளர்கள் மற்றும் வசதிகளுக்கான கூடுதல் செலவினம் இந்தியாவின் தொகுப்பு நிதியிலிருந்து வழங்கப்படும்.