பசிபிக் தீவில் வசிப்பவர்களுக்கு வழங்கும் முதல் வகையான இடம்பெயர்வு நுழைவு இசைவிற்கு 5,000க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.
அதன் விதிமுறைகளின் கீழ், 2025 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 280 துவாலுவாசிகள் ஒரு வகை தேர்ந்தெடுப்பு முறை மூலம் ஆஸ்திரேலியாவுக்கு இடம் பெயரலாம்.
இது உலகின் முதல் திட்டமிடப்பட்ட இடம்பெயர்வு ஆகும் என்பதோடு இது துவாலுவில் வசிப்பவர்களுக்கு வாழ்வதற்கான உரிமையை வழங்குகிறது.
துவாலு நாடானது தெற்கு பசிபிக் பெருங்கடலில் ஆஸ்திரேலியாவிற்கும், ஹவாய்க்கும் இடையில் அமைந்துள்ளது.
இந்த நாடானது பவளப்பாறைகளால் சூழப்பட்ட வளைய வடிவ தீவுகளைக் கொண்ட ஒன்பது தாழ்வான பவளத்தீவுகளை/அடோல்களைக் கொண்டுள்ளது.
துவாலுவின் மிக உயரமான இடம் கடல் மட்டத்திலிருந்து 15 அடி (4.5 மீட்டர்) உயரத்தில் உள்ளது, ஆனால் நாட்டின் சராசரி உயரம் கடல் மட்டத்திலிருந்து 6 அடி (2 மீ) மட்டுமே.
அந்த நாட்டின் பெரும்பாலான நிலம் மற்றும் முக்கிய உள்கட்டமைப்பு 2050 ஆம் ஆண்டுக்குள் உயர் அலை மட்டத்திற்கும் கீழே செல்லக் கூடும்.
இது பருவநிலை மாற்றம் காரணமாக கடல் மட்ட உயர்வு, வெள்ளம் மற்றும் புயல் அலைகளுக்கு மிகவும் பாதிப்பு ஏற்படுத்தக் கூடியதாக மாற்றுகிறது.