இரசாயனம் மற்றும் பெட்ரோலிய இரசாயனத் துறையானது இரசாயன மற்றும் உரங்கள் அமைச்சகத்துடன் இணைந்து, எத்திலீன் கிளைக்கால் (தரக் கட்டுப்பாடு) ஆணை, 2022 என்ற தலைப்பிலான ஒரு அரசிதழ் அறிவிப்பை வெளியிட்டது.
இந்திய மருந்து தயாரிப்பு நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட மருந்துக் கரைசலை உட் கொண்டதால், சமர்க்கண்டில் 18 குழந்தைகள் இறந்ததாக உஸ்பெகிஸ்தான் அரசு குற்றம் சாட்டியதனையடுத்து ஒரு நாளுக்குப் பிறகு இந்த நடவடிக்கையானது மேற் கொள்ளப் பட்டுள்ளது.
இதில் சர்ச்சைக்குரிய மருந்து நிறுவனமான மரியன் பயோடெக், உத்தரப் பிரதேச மாநிலத்தின் நொய்டாவில் அமைந்துள்ளது.
இந்நிறுவனம் தயாரித்த மருந்துக் கரைசலில் எத்திலீன் கிளைக்கால் இருந்தது.
எத்திலீன் கிளைக்கால் என்பது, உட்கொண்டால் மரணத்தை விளைவிக்கின்ற ஒரு நிறமற்ற மற்றும் மணமற்ற ஆல்கஹால் கலவையாகும்.
இது பெரும்பாலும் வாகனங்களில் உறைதல் தடுப்பானாகவும் பாலிஸ்டர் இழைகளை தயாரிப்பதற்கான மூலப்பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது.
டைஎத்திலீன் கிளைக்கால் மற்றும் எத்திலீன் கிளைக்கால் ஆகியவை சில நேரங்களில் சட்ட விரோதமாக திரவ மருந்துகளில் கரைப்பான்களாகப் பயன்படுத்தப்படுகின்ற கலப்படப் பொருளாகும்.
மருந்து உற்பத்தி நிறுவனங்கள் செலவைக் குறைப்பதற்காக கிளிசரின் அல்லது ப்ரோப்பிலீன் கிளைக்கால் போன்ற நச்சுத்தன்மையற்ற கரைப்பான்களுக்கு மாற்றாக டைஎத்திலீன் கிளைக்கால் மற்றும் எத்திலீன் கிளைக்கால் ஆகியவற்றினைப் பயன்படுத்துகின்றன.