இந்தியக் கடற்படையின் ரேடாரில் புலப்படாமல் மறையவல்ல தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ள ஸ்கார்பீன் வகையைச் சேர்ந்த மூன்றாவது நீர்மூழ்கிக் கப்பலான ஐஎன்எஸ் கரன்ஞ் என்ற கப்பலானது மும்பையில் பணியில் சேர்க்கப்பட்டது.
இது கடலின் மேற்பரப்பில் அல்லது கடலுக்கடியில் எந்தவோர் அச்சுறுத்தலையும் சமாளிப்பதற்கான திறனுள்ள ஆயுதங்கள் மற்றும் உணர்விகள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
6 ஸ்கார்பீன் வகுப்பைச் சேர்ந்த நீர்மூழ்கிக் கப்பல்கள் பிரான்சு நாட்டு நிறுவனமான ‘Direction des Constructions Navales’ என்ற நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் மும்பையில் உள்ள மசகான் கப்பல் கட்டும் நிறுவனத்தினால் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வருகின்றது.
ஐஎன்எஸ் கரன்ஞ் ஆனது இந்தியக் கடற்படையில் சேர்க்கப்பட்டுள்ள மூன்றாவது கல்வாரி வகுப்பைச் சேர்ந்த நீர்மூழ்கிக் கப்பலாகும்.
2017 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் பணியில் சேர்க்கப்பட்டுள்ள ஸ்கார்பீன் வகுப்பைச் சேர்ந்த முதலாவது நீர்மூழ்கிக் கப்பல் ஐஎன்எஸ் கல்வாரி ஆகும்.
அதனைத் தொடர்ந்து ஐஎன்எஸ் கந்தேரி ஆனது 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் பணியில் சேர்க்கப்பட்டுள்ளது.
ஐஎன்எஸ் கல்வாரி மற்றும் ஐஎன்எஸ் கந்தேரி ஆகிய இரண்டும் தற்பொழுது பணிச் சேவையில் உள்ளன.
இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக உள்ள மீதமுள்ள அனைத்து நீர்மூழ்கிக் கப்பல்களும் 2022-23 ஆம் ஆண்டிற்குள் கட்டப்பட்டு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப் படுகின்றது.
ஐஎன்எஸ் வேலா மற்றும் ஐஎன்எஸ் வாகிர் ஆகியவை தற்பொழுது கடற்பணிச் சோதனையில் உள்ளன.
ஐஎன்எஸ் வாக்சீர் ஆனது தற்பொழுது கட்டமைக்கப்பட்டு வருகின்றது.