தமிழ்நாட்டின் தென்காசி மாவட்டம் மலையடிப்பட்டி கிராமத்தில் சங்க காலத்தைச் சேர்ந்த 5 ஆம் நூற்றாண்டு நடுகல் கல்வெட்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மாநிலத் தொல்லியல் துறை (TNSDA) மேற்கொண்ட அகழாய்வின் போது இந்தக் கண்டுபிடிப்பு நிகழ்த்தப்பட்டது.
சங்க காலத்தில் பயன்பாட்டில் இருந்து, பின்னர் கற்கள் மற்றும் செங்கற்களால் நிரப்பப்பட்ட படிக்கட்டுகளுடன் கூடிய செங்கல் கிணற்றுக்குள் இந்த நடுகல் கண்டெடுக்கப் பட்டது.
இந்த நடுகல் 1 மீட்டர் நீளமும் 0.30 மீட்டர் அகலமும் கொண்டது மற்றும் நான்கு வரிகள் கொண்ட கல்வெட்டைக் கொண்டுள்ளது.
இதன் எழுத்துக்கள் தமிழ்-பிராமி எழுத்து முறையில் இருந்து வட்டெழுத்துக்கு மாறிய இடைநிலைக் காலத்தைக் குறிக்கிறது.
இந்த கல்வெட்டு கறுக்கன், சூளகன், நன்னன் மற்றும் கொடியன் ஆகியோரைக் குறிப்பிடுகிறது மற்றும் இது கறுக்கன் சூளகனின் மகனான நன்னன் கொடியனின் நினைவாக நடப்பட்டதைச் சுட்டிக்காட்டுகிறது.
சங்க காலம் மற்றும் சங்கம் மருவிய கால நடுகற்களில் பொதுவாக போர்வீரர்களின் உருவங்கள் காணப்படாது என்றும், இந்த நடுகல்லிலும் போர்வீரரின் உருவம் பொறிக்கப் படவில்லை என்றும் தொல்லியலாளர்கள் தெரிவித்தனர்.
போர்வீரர்களின் உருவங்கள் இல்லாத பிற சங்க கால நடுகற்கள் புலிமான்கோம்பை, அப்பனூர் மற்றும் மல்லிகாபுரம் ஆகிய இடங்களில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
மலையடிப்பட்டியில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளில் சங்க கால மக்களின் வாழ்க்கை, தொழில்கள் மற்றும் வணிகம் குறித்த தகவல்களை வழங்கும் தொல்பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.