ஐந்து பழங்குடியின சமூகங்களின் இனவரைவியல் ஆவணமாக்கம்
February 22 , 2025 235 days 218 0
தமிழ்நாடு மாநில ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையானது, அதன் முதன்மையான தொல்குடி திட்டத்தின் கீழ், ஐந்து பட்டியலிடப்பட்ட பழங்குடியினச் சமூகங்களின் இனவரைவியல் / இனக்குழுவியல் ஆவணமாக்கலுக்காக வேண்டி சில வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
2024-25 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், தமிழக மாநிலத்தில் வாழும் பழங்குடியின சமூகங்களின் மொழி மற்றும் கலாச்சாரத்தின் எண்ணிமப் பதிவுகளை உருவாக்கும் திட்டத்திற்கு மாநில அரசானது 2 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது.
இது இருளர்கள், தோடர்கள், நரிக்குறவர்கள், காணிக்கரர்கள் மற்றும் குரும்பர்களின் மொழியியல் வளங்கள் மற்றும் உச்சரிப்பு/ஒலிப்பு வடிவங்களின் எண்ணிமப் பதிவை உள்ளடக்கியது.
இந்த எண்ணிம ஆவணமாக்கலில, அவர்களின் ஒரு தனியுரிமை மற்றும் வழக்கமான வாழ்க்கையை பாதிக்காமல் அவர்களின் வாழ்க்கை, கதைகள், அவர்களுடன் மிகவும் தொடர்புடைய பல்வேறு சடங்குகள் மற்றும் சம்பிரதாயங்களின் முறைகளைப் பதிவு செய்வதற்காக வேண்டி மேற்கொள்ளப்படும் பழங்குடியின சமூக உறுப்பினர்களின் நேர்காணல்கள் மற்றும் ஒலி-ஒளிப் பதிவுகள் அடங்கும்.