கர்நாடக மாநிலம் மற்றும் பிறர் எதிர் பிரதீக் பரசுராம்புரியா வழக்கு
August 22 , 2026 2 days 53 0
தேர்தல்களில் கணக்கில் காட்டப்படாத பணத்தைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்தும் வகையில், கர்நாடக மாநிலம் மற்றும் பிறர் எதிர் பிரதீக் பரசுராம்புரியா வழக்கில் உச்ச நீதிமன்றம் வழிகாட்டுதல்களை வழங்கியது.
கர்நாடகாவின் பல்லாரியில் 2014 ஆம் ஆண்டில் நடைபெற்ற மக்களவை இடைத் தேர்தலில் பிரதீக் பரசுராம்புரியாவிடமிருந்து ₹20.48 லட்சம் ரொக்கம் மற்றும் பிற பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதிலிருந்து இவ்வழக்கு உருவானது.
தேர்தல் தொடர்பான ரொக்கம் அல்லது சொத்து பறிமுதல் செய்யப்பட்டால், அதற்கான எழுத்துப்பூர்வ காரணங்களுடன் 24 மணி நேரத்திற்குள் மாவட்ட ஆட்சியர் (DM), கூடுதல் மாவட்ட ஆட்சியர் (ADM) அல்லது தகுதியான நீதிமன்றத்திடம் தெரிவிக்கப் பட வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.
₹10 லட்சத்திற்கும் அதிகமான ரொக்கத்தைக் கண்டறியும் நிலையான கண்காணிப்புக் குழுக்கள் (SST) உடனடியாக வருமான வரித்துறை அதிகாரிகளுக்குத் தெரிவிக்க வேண்டும்.
தேர்தல் தொடர்பான குற்றங்கள் குறித்த விசாரணைகள் ஒரு வருடத்திற்குள் முடிக்கப்பட வேண்டும்; தாமதங்கள் பதிவு செய்யப்பட்டு, காலாண்டு முன்னேற்ற அறிக்கைகள் மூலம் இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு (ECI) தெரிவிக்கப்பட வேண்டும்.
வேட்பாளர்களுக்கு எதிரான தேர்தல் தொடர்பான குற்றவியல் வழக்குகளைத் திரும்பப் பெறுவதற்கு முன் உயர் நீதிமன்ற ஒப்புதல் கட்டாயமாகும், மேலும் இது போன்ற வழக்குகளை விரைவாகத் தீர்க்க சிறப்பு நீதிமன்றங்களை அமைக்குமாறு உயர் நீதிமன்றங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
2026 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 18 ஆம் தேதிக்குள் இணக்க அறிக்கைகளைச் சமர்ப்பிக்குமாறு இந்தியத் தேர்தல் ஆணையம் மற்றும் மாநில அரசுகளுக்கு உத்தரவிடப் பட்டது.