தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு, நவம்பர் 20, 2025 அன்று, பிரிவு 143ன் கீழ் குடியரசுத் தலைவரின் 16வது கேள்விகளுக்கு பதிலளித்தது.
இதில் ஐந்து நீதிபதிகளில் எவரும் 111 பக்கக் கருத்தின் ஆசிரியர் என்று தம்மைக் கூறவில்லை, மாறாக அதை 'நீதிமன்றத்தின் கருத்து' என்று வடிவமைத்தனர்.
குடியரசுத் தலைவரின் கேள்விகளுக்கு அளித்த பதிலில் உச்ச நீதிமன்றத்தின் இந்த கருத்து "ஏப்ரல் 8, 2025 அன்று தமிழ்நாடு அரசு எதிர் தமிழக ஆளுநர் வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது" எனவும் கூறியுள்ளது.
அகமதாபாத் செயிண்ட் சேவியர் கல்லூரி சங்கம் எதிர் குஜராத் மாநிலம் (1974) என்ற வழக்கில் ஒன்பது நீதிபதிகள் கொண்ட அமர்வு, "நீதிமன்றத்தின் ஆலோசனையில் கூறும் கருத்து சட்ட அதிகாரிகளின் கருத்தை விட பெரிய மாற்று விளைவை ஏற்படுத்தாது" என்று கூறியது.
ஆலோசனை கருத்தை வழங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு, தேர்ந்தெடுக்கப்பட்ட "அரசாங்கம் ஓட்டுநர் இருக்கையில் இருக்க வேண்டும் என்றும் மேலும் மாநிலத்தில் இரண்டு நிர்வாக அதிகார மையங்கள் இருக்க முடியாது" என்பதை "மீண்டும் உறுதிப் படுத்தியுள்ளது".
மசோதாக்கள் மீது நடவடிக்கை எடுப்பதை ஆளுநர் "காலவரையின்றி தாமதப்படுத்த" முடியாது என்பதையும் இந்தக் கருத்து மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
ஒரு மசோதாவை பரிசீலிப்பதில் ஆளுநர் நீண்ட, விவரிக்கப்படாத மற்றும் மிக கால வரையற்ற தாமதம் செய்தால், மாநிலங்கள் அரசியலமைப்பு நீதிமன்றங்களை அணுகி, ஆளுநர்கள் வேண்டுமென்றே செய்யும் செயல்களுக்கு அவர்களைப் பொறுப்பேற்க வைக்கலாம்.
உச்ச நீதிமன்றத்தின் இந்தக் கருத்து மீண்டும் தமிழ்நாடு ஆளுநரின் (அ) பாக்கெட் வீட்டோ கோட்பாடு, (ஆ) சட்ட மசோதாக்களை ராஜ்பவன் கொல்லலாம் அல்லது புதைக்கலாம் என்ற கூற்றுக்களை நிராகரித்துள்ளது.
மசோதாக்கள் காலவரையின்றி நிறைவேற்றப்படுவதைத் தடுத்தால், அவற்றின் நடவடிக்கைகளை மறுபரிசீலனை செய்ய அரசியலமைப்பு நீதிமன்றங்களுக்கும் உச்ச நீதிமன்றம் அதிகாரம் அளித்துள்ளது.
அவற்றைப் சரத்து 361க்குப் பின்னால் மறைக்க முடியாது.
அவர்கள் நீண்ட காலமாக செயல்படாத நிலைமைகளில் வரையறுக்கப்பட்ட நீதித் துறை மறு ஆய்வு அனுமதிக்கப்படுகிறது என்றும் இந்த அமர்வு கூறியது.
ஆளுநர்களும் குடியரசுத் தலைவரும் தமது செயல்பாடுகளை நிறைவேற்றுவதில் நீதித் துறையால் பரிந்துரைக்கப்பட்ட காலக்கெடுவுக்குக் கட்டுப்படுத்தப்படவில்லை என்று உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியது.
நீதிமன்ற உத்தரவுகள் மூலம் ஒப்புதலுக்காக தங்களிடம் நிலுவையில் உள்ள அனைத்து மசோதாக்களையும் கையாள குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர்கள் மீது காலக் கெடுவை விதிப்பது "அனைவருக்கும் பொருந்தும் ஒரே மாதிரி " என்ற ஒரு அணுகுமுறையை எடுப்பதற்குச் சமம் ஆகும்.
குறிப்பாக அரசியலமைப்பு ரீதியாக பிரிவுகள் 200 மற்றும் 201 ஆகியவற்றின் கீழ் குடியரசுத் தலைவர் அல்லது ஆளுநர்கள் ஆகியோருக்குப் பரிந்துரைக்கப்பட்ட காலக்கெடு அல்லது அதிகாரங்களைப் பயன்படுத்தும் முறை எதுவும் இல்லாத நிலையில் இது உள்ளது.
ஆளுநர்கள் பரிசீலனைக்காக பரிந்துரைக்கும் ஒவ்வொரு மாநில மசோதா குறித்தும் குடியரசுத் தலைவர் உச்ச நீதிமன்றத்தை அணுக வேண்டிய அவசியமில்லை என்று இந்த அமர்வு கூறியது.
பிரிவு 143ன் கீழ் உச்ச நீதிமன்றத்தின் ஆலோசனையைப் பெறுவது குடியரசுத் தலைவரின் விருப்பத்திற்கு விடப் படும்.
மசோதாக்களின் தகுதிகளை மறுபரிசீலனை செய்ய நீதிமன்றங்களுக்கு அதிகாரம் இல்லை என்று இந்த அமர்வு தெளிவுபடுத்தியது.
ஆளுநரின் செயல்பாடுகளையும், அதே போல் குடியரசுத் தலைவரின் செயல்பாடுகளையும் அபகரிப்பது என்பது அரசியலமைப்பின் ஆன்மாவுக்கு மட்டுமல்ல, குறிப்பாக அதிகாரங்களைப் பிரிப்பதற்கான கோட்பாட்டிற்கும் எதிரானது என்பதாகும்.
அதிகாரங்களைப் பிரிப்பது அரசியலமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பின் ஒரு பகுதியாகும்.
'கருதப்பட்ட ஒப்புதல்' என்ற கருத்து அரசியலமைப்பிற்குப் புறம்பானது என்றும் அது கருதுகிறது.
அதே சமயம் குடியரசுத் தலைவரும் ஆளுநர்களும் மாநில மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் , முடிவில்லாமல் நீண்ட கால கிடப்பு மற்றும் தவிர்க்கும் செயலற்றத் தன்மையை அவர்கள் நாட முடியாது என்று நீதிமன்றம் தெளிவு படுத்தியது.
சரத்து 200 ன் கீழ் ஒரு ஆளுநருக்கு உண்மையில் மூன்று வாய்ப்புகள் உள்ளன என்பதை அது தெளிவுபடுத்தியது:
மசோதாவிற்கு ஒப்புதல் வழங்குவது
குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு அதை அனுப்புவது
அது பண மசோதா இல்லையென்றால் அந்த மசோதாவின் ஒப்புதலை நிறுத்தி, தக்கக் கருத்துகளுடன் அம்மாநிலச் சட்டமன்றத்திற்கு மீண்டும் திருப்பி அனுப்பி விடுதல்.
ஒரு ஆளுநர் ஒரு மசோதாவை அதற்கான காரணங்களையும் சேர்த்து அதனை மாநிலச் சட்டமன்றத்திற்குத் திருப்பி அனுப்பாமல் அதை நிறுத்த முடியாது.
ஒரு ஆளுநர் தனது செயல்பாட்டைச் செய்யும் போது அமைச்சர்கள் குழுவின் உதவி மற்றும் ஆலோசனைக்கு அவர் கட்டுப்படவில்லை என்றும் உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.
சரத்து 143
பொது முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் எழக்கூடிய அல்லது ஏற்கனவே எழுந்துள்ள எந்தவொரு சட்டம் அல்லது உண்மை குறித்தும் உச்ச நீதிமன்றத்தின் ஆலோசனைக் கருத்தைப் பெற இந்திய குடியரசுத் தலைவருக்கு இது அதிகாரம் அளிக்கிறது.
இந்தப் சரத்து உச்ச நீதிமன்றத்தின் ஆலோசனை அதிகார வரம்பை குடியரசுத் தலைவருக்கு மட்டுமே என்ற வகையில் நிறுவுகிறது.
ஆனால் இந்தப் பிரிவின் விதி 2, அரசியலமைப்பிற்கு முந்தைய ஒப்பந்தங்கள், வேறு ஒப்பந்தங்கள், சனத்கள் போன்றவற்றிற்காக வேண்டி உச்ச நீதிமன்றத்தை அணுகிட குடியரசுத் தலைவரை அனுமதிக்கிறது.
மேற்கூறியவை சரத்து 131ன் கீழ் விலக்கப்பட்டன எனவே நீதிமன்றம் இதற்கு கருத்து தெரிவிக்க வேண்டும்.
சரத்து 131 மத்திய-மாநில அல்லது மாநிலங்களுக்கு இடையேயான தகராறுகளைத் தீர்ப்பதற்கு உச்ச நீதிமன்றத்திற்கு அதிகாரம் அளிக்கிறது.